சாய்பாபாவுக்கு வியாழக்கிழமைகளில் மட்டும் விரதமிருந்து பக்தர்கள் வழிபடுவது ஏன்? இத்தனை சிறப்புகளா?
சென்னை: சாய்பாபாவுக்கு வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து மக்கள் வழிபடுவது ஏன் தெரியுமா? அந்த நாளில் பாபா கோயில்களில் இரவு ஆரத்தியுடன் பூஜைகள் களைகட்டும்.
ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு கிழமைகளில் பூஜைகளை செய்ய வேண்டியது அவசியம். அந்த வகையில் மாரியம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் சப்தகன்னிகளுக்கும் பூஜை செய்வது வழக்கம்.

அது போல் வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கும் சீரடி சாய்பாபாவுக்கும் பக்தர்கள் விரதமிருந்து வழிபடுவது வழக்கம். சாய்பாபாவை மக்கள் குருவாகவே கருதுகிறார்கள். அவருடைய அன்னதானம் என்ற அற்புத திட்டத்தை இன்றும் பலர் கடைப்பிடித்து வருகிறார்கள்.
இதனால் சாய்பாபா கோயில்களில் தினந்தோறும் 3 வேளையும் மக்களுக்கு ஏதாவது ஒரு பிரசாதம் வழங்கப்படுகிறது. அது போல் வியாழக்கிழமைகளில் கலந்த சாதம் உணவாக வழங்கப்படுகிறது. இன்னும் சில பாபா கோயில்களில் 3 வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
சாய்பாபா பார்ப்பதற்கு நம் முன்னோர் போல் காட்சியளிப்பதால் அவரிடம் நாம் உரிமையாக நம்பிக்கையுடன் எதை கேட்டாலும் அதை அவர் கொடுத்துவிடுவார். இதனால்தான் பாபா தனது இஷ்ட தெய்வமாகவே மக்கள் வணங்கத் தொடங்கிவிட்டனர். அதிலும் பாபாவுக்கு வியாழக்கிழமைதான் உகந்தது என்கிறார்கள்.
வியாழக்கிழமைதோறும் பாபா கோயில்களில் அதிக கூட்டம் காணப்படுகிறது. அன்றைய தினம் அங்கு கால் வைக்கக் கூட இடம் இல்லாத நிலை இருக்கும். அன்றைய தினம் இரவு ஆரத்திகளிலும் மக்கள் கலந்து கொள்வார்கள். மற்ற நாட்களில் ஆரத்தியும் பூஜையும் நடக்கும். இருந்தாலும் வியாழக்கிழமைகளில் மட்டும் கூட்டம் அலைமோதும்! இது ஏன் தெரியுமா?
வியாழக்கிழமைதான் குருவுக்கு உகந்த நாள் என்பதால் அன்றைய தினம் மக்கள் விரதம் இருக்கிறார்கள். 9 வாரங்கள் சாய்பாபா நாமத்தை தொடர்ந்து கூறி வந்தால் தாங்கள் நினைக்கும் காரியம் கைகூடும் என்பது ஐதீகம். அவ்வாறு விரதம் இருப்போர், காலையாக இருந்தாலும் சரி மாலையாக இருந்தாலும் சரி சாய்பாபாவின் படத்திற்கு முன் அமர்ந்து ஓர் மஞ்சள் துணியை சுத்தமான ஒரு பலகையில் விரித்து வைத்து அதன் மீது சாய்பாபா படத்தை வைத்து தூய நீரில் சுத்தம் செய்து சந்தனம் குங்குமத்தால் பொட்டு வைக்க வேண்டும்.
பாபாவிற்கு பிடித்த மஞ்சள் நிற மலர்களை சூட்ட வேண்டும். பாபாவின் விரத கதையை படிக்கலாம். சாய் சரித்திரா படிக்கலாம். பிறகு பூஜை செய்து நெய்வேத்தியம் செய்து கற்கண்டு, இனிப்பு, பழங்கள் என பாபாவுக்கு பிடித்ததை வைத்து வழிபட வேண்டும். இதனால் நீங்கள் எண்ணும் காரியம் ஈடேறும்.
ஓம் சாய் ஸ்ரீசாய் ஜெய ஜெய சாய்
என்ற மந்திரத்தை அவ்வப்போது சொல்லுங்கள்.
சாய் பாபா மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடியில் பிறந்தார். அவருக்கு 16 வயது இருக்கும் போதே தியானத்தில் ஈடுபட்டார். அப்போதே அவர் மகானாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது. உடல்நலம் சரியில்லை என வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி அவர்களுடைய நோயையும் குணப்படுத்தி அனுப்பினார். இவர் முதல் அவதார புருஷர் என போற்றப்படுகிறார். 1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி இந்த வாழ்க்கையை விட்டு நீங்கினார் என்கிறார்கள். சீரடியில் அவர் சமாதியான இடத்தில் இன்றும் பல்லாயிரக்கணக்கானோர் வணங்குகிறார்கள்.












Click it and Unblock the Notifications