அமேசான் பிரைம்.. இனி பழையபடி யூஸ் பண்ண முடியாது.. முக்கிய விதிகளில் மாற்றம்! புது ரூல்ஸ் என்ன?
மும்பை: இந்தியாவில் மிகவும் பிரபலமான ஓடிடி தளங்களில் ஒன்றாக இருக்கும் அமேசான் பிரைம் தனது விதிகளை இப்போது மாற்றி இருக்கிறது. ஒரு கணக்கை எத்தனை பேர் பயன்படுத்தலாம் என்பதில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வரும் வகையில் இந்த மாற்றத்தை அமேசான் கொண்டு வந்துள்ளது. அடுத்த மாதம் முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வருவதால் இது குறித்து விரிவாக நாம் பார்க்கலாம்.
இந்த காலத்தில் ஓடிடி என்பது ரொம்பவே முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. குடும்பத்தில் உள்ள 4 பேர் தியேட்டருக்கு சென்று சென்று படம் பார்த்தாலே இப்போது ரூ.1500 வரை அசால்ட்டாக ஆகிறது.

ஓடிடி தளங்கள்:
இதன் காரணமாக ஓடிடி தளங்கள் இப்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஓடிடி தளங்களில் ஆண்டுக்கே நாம் அதிகபட்சம் ரூ.1500 தான் கட்ட வேண்டும். எத்தனை படங்களை வேண்டும் என்றாலும் பார்க்கலாம்.. அதுவும் விரும்பிய நேரத்தில்.! இப்போதெல்லாம் ஒரு படம் ரிலீசானால் 4 வாரங்களில் அது ஓடிடியில் வந்துவிடுவதால் ஓடிடி மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே ஒரே கணக்கை நிறையப் பேர் பயன்படுத்துவதைத் தடுக்க இப்போது ஓடிடி தளங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளம் கூட இதுபோலத் தான் நடவடிக்கை எடுத்து இருந்தது. இந்தச் சூழலில் இந்தியாவில் மிக முக்கியமான ஓடிடி தளமாக இருக்கும் அமேசான் பிரைம் தளத்திலும் இப்போது முக்கிய மாற்றம் வருகிறது.
அமேசான் பிரைம் விதிகள் மாற்றம்:
இதற்கு முன்பு வரை ஒரே ஒரு அமேசான் பிரைம் கணக்கின் மூலம் 10 சாதனங்களைப் பயன்படுத்த முடிந்தது. ஆனால், இப்போது அதை 5ஆக குறைக்க அமேசான் பிரைம் முடிவு செய்து இருக்கிறது. இது தவிர டிவி லாகின் தொடர்பான கட்டுப்பாடுகளையும் அமேசான் அறிவித்துள்ளது. இவை அனைத்துமே அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஜனவரி 2025 முதல் ஒரு கணக்கில் இருந்து 5 சாதனங்களில் மட்டுமே லாகின் செய்ய முடியும். அதிலும் இரண்டு டிவிக்களில் மட்டுமே ஒரே நேரத்தில் ஸ்ட்டிரீம் செய்ய முடியும் என்று அமேசான் பிரைம் அறிவித்துள்ளது. வழக்கம் போல எதில் பயன்படுத்தலாம் என்பதை பிரைம் பயனர்கள் செட்டிங்ஸ் பக்கத்தில் நிர்வகிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் திட்டங்கள்:
அமேசானை பொறுத்தவரை இப்போது ஆண்டு சந்தா கட்டணமாக ரூ. 1,499 இருக்கிறது. இதில் அமேசான் பிரைம் வீடியோ மட்டுமின்றி, அமேசான் ஷாப்பிங் சலுகைகளையும் நம்மால் பெற முடியும். குறைந்தபட்ச ஆர்டர் இல்லாமல் அனைத்துக்கும் இலவச ஷிப்பிங்கை பெறலாம். குறிப்பிட்ட கார்டுகள் மூலம் பொருட்களை வாங்கினால் கேஷ்பேக் ஆஃப்ரளையும் பெற முடியும். ரூ. 299 (மாதாந்திர கட்டணம்) மற்றும் ரூ. 599 (மூன்று மாத கட்டணம்) என வேறு இரு பிளான்களிலும் இந்த திட்டம் வழங்கப்படுகிறது.
இது தவிர அமேசான் லைட் என்று மற்றொரு திட்டமும் இருக்கிறது. 12 மாதங்களுக்கு ரூ.799 என்ற கட்டணத்தில் வழங்கப்படும் இந்தத் திட்டத்திலும் அமேசான் ஷாப்பிங் மற்றும் பிரைம் வீடியோவை பார்க்கலாம். ஆனால், இதில் அதிகபட்சம் 720p-இல் தான் வீடியோவை பார்க்க முடியும். மேலும், இதில் விளம்பரங்களும் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications