அப்பாடா.. ஒரு வழியா பிஎஸ்என்எல் 4ஜி வந்தாச்சு.. ஆனால் அதுல கூட இருக்கே ட்விஸ்ட்.! முடியல
டெல்லி: நீண்ட தாமதத்திற்குப் பிறகு முதல்முறையாக பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது 4ஜி சேவையில் இறங்கப் போகிறது. இதற்கான இறுதிக்கட்ட வேலையில் பிஎஸ்என்எல் இறங்கியுள்ளது.
நமது நாட்டில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த டெலிகாம் நிறுவனம் என்றால் அது பிஎஸ்என்எல் தான்.. ஆனால், அதன் பிறகு தனியார் டெலிகாம் நிறுவனங்களின் வளர்ச்சி உள்ளிட்ட பல காரணங்களால் பிஎஸ்என்எல் மாயமானது.

இப்போது பிஎஸ்என்எல் பயனாளர்களைக் கண்டுபிடிப்பது சிரமம் என்ற சூழல் உருவாகியுள்ளது. அந்தளவுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தை மற்ற தனியார் நிறுவனங்கள் காலி செய்துவிட்டது என்றே சொல்லலாம்.
பிஎஸ்என்எல் : மேலும், பிஎஸ்என்எல் நிறுவனம் கடும் நஷ்டமடைந்ததால் அது மூடப்படலாம் அல்லது தனியாருக்கு விற்கப்படலாம் என்று கூட இடையில் தகவல் பரவியது. இருப்பினும், மத்திய அரசு அதைச் செய்யவில்லை. மாறாக பிஎஸ்என்எல் மற்றும் எம்என்டிஎல் நிறுவனங்கள் இணைக்கப்பட்டது. மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆட்குறைப்பு தொடங்கி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இருப்பினும், மற்ற நிறுவனங்கள் 5ஜி சேவையையே ஆரம்பித்துவிட்ட நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் 4ஜி சேவையைக் கூட தொடங்கவில்லை. தனியார் நிறுவனங்களுக்கு 4ஜி சேவையைத் தொடங்கிய போதிலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தால் 4ஜி சேவை தொடங்க முடியவில்லை. இதுவே பொதுமக்கள் பிஎஸ்என்எல் பக்கம் செல்லாமல் இருக்க முக்கிய காரணமாக இருந்தது. இருப்பினும், இடையில் 4ஜி சேவை இப்போது வரும் அப்போது வரும் என்று பிஎஸ்என்எல் தரப்பில் இருந்து அறிவிப்புகள் மட்டுமே வந்து கொண்டு இருந்தது.
ஏமாற்றம்: கடந்த மே மாதம், பிஎஸ்என்எல் 4ஜி சேவை விரைவில் தொடங்கப்படும் என்றும் டிசம்பரில் பிஎஸ்என்எல் 5ஜிக்கு அப்டேட் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இது பிஎஸ்என்எல் பயனாளர்களுக்குச் சற்று உற்சாகத்தைக் கொடுத்தது. இருப்பினும், அறிவித்தபடி 4ஜி சேவை தொடங்கப்படவில்லை.
சமீபத்தில் நடந்த இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பேசிய பிஎஸ்என்எல் தலைவர் பி கே புர்வார், வரும் டிசம்பர் மாதம் 4ஜி சேவையைக் கொண்டு வரப்படும் என்றார். தொடர்ந்து அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் நாடு முழுவதும் 4ஜி சேவை அறிமுகப்படுத்தும் என்று குறிப்பிட்ட அவர், அதைத் தொடர்ந்து உடனடியாக 5ஜி தொழில்நுட்பத்திற்கு அப்டேட் ஆகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அறிவிப்பு: இப்படித் தொடர்ந்து அறிவிப்புகள் மட்டுமே வந்து கொண்டிருந்தது. இதற்கிடையே முதல்முறையாக இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது முதற்கட்டமாக ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பிஎஸ்என்எல் பயனர்கள் தங்கள் பழைய 2ஜி, 3ஜி சிம்களை கொடுத்துவிட்டு, இலவசமாக 4ஜி சிம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விஸ்ட்: மேலும், அப்படி பிஎஸ்என்எல் 4ஜிக்கு அப்கிரேட் ஆகும் பயனாளர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக 4 ஜிபி டேட்டாவையும் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இது முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. பிஎஸ்என்எல் அலுவலகத்திற்குச் சென்று 4ஜி சிம்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர். அதேநேரம் எப்போது 4ஜி மற்றும் 5ஜி சேவையை அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கும் என்பது குறித்து எந்தவொரு கருத்தையும் கூறவில்லை.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை ஒரு தரப்பினர் நக்கலடித்தும் வருகின்றனர். தனியார் டெலிகாம் நிறுவனங்கள் கிராமங்கள் வரை 4ஜி கொடுத்துவிட்ட நிலையில், பிஎஸ்என்எல் இப்போது தான் நகரங்களில் 4ஜி சேவையை ஆரம்பித்துள்ளதாகச் சாடியுள்ளனர். மேலும், மற்ற நிறுவனங்கள் 5ஜி சேவையைத் தொடங்கிவிட்ட நிலையில், யாரும் 4ஜி சேவைக்காக பிஎஸ்என்எலுக்கு வர மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications