"இதுதான் தாய் பாசம்.." வெறும் மொபைல் லைட் வைத்து கேன்சரை கண்டுபிடித்த தாய்.. உயிர் பிழைத்த மகன்
லண்டன்: வெறும் ஸ்மார்ட்போன் ப்ளாஷ் லைட்டை பயன்படுத்தி தனது மகனுக்கு ஏற்பட்ட அரிய வகை புற்றுநோயைப் பெண் ஒருவர் கண்டறிந்துள்ளார். அவர் எப்படி இதைச் செய்தார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பிரிட்டன் நாட்டின் கில்லிங்ஹாம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான சாரா ஹெட்ஜஸ். நான்கு குழந்தைகளின் தாயான இவர், ஒரு நாள் இரவு உணவைத் தயாரிக்கும் போது இந்த பகீர் கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளார்.

உணவை மும்முரமாகத் தயாரித்துக் கொண்டு இருந்த போது அவரது பார்வை 3 மாத குழந்தையான தாமஸ் பக்கம் திரும்பியுள்ளது. அப்போது அவனது கண்ணில் ஏதோ விசித்திரமாக இருப்பதை அவர் கவனித்துள்ளார். அதாவது இருட்டில் பூனைக் கண்ணில் வெளிச்சம் படும் போது எப்படித் தெரியுமோ.. அதேபோல அந்த 3 மாத குழந்தையின் கண்களிலும் தெரிந்துள்ளது.
ஸ்மார்ட்போன்: உடனே ஸ்மார்ட்போனை எடுத்த அவர் ஃபிளாஷ் லைட் உதவியுடன் நெருக்கமாகப் பார்க்கிறார். அப்போதும் அங்கே ஏதோ வித்தியாசமாக இருப்பது அவருக்குத் தெரிகிறது. உடனே சில போட்டோக்களை எடுத்த அவர், இது குறித்து இணையத்தில் தேட தொடங்குகிறார்.
மீண்டும் ஸ்மார்ட்போனை எடுத்த அவர் அதில் இருக்கும் பிளாஷ் உதவியுடன் தனது குழந்தையின் கண்களை முழுமையாகப் பார்க்கிறார். கண்களில் பளபளப்பு தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் செக் செய்த போது அப்படி எந்தவொரு பளபளப்பும் இல்லை. இதனால் அவர் ரொம்பவே குழம்பிவிட்டார். இதனால் உண்மையாகவே ஏதாவது பிரச்சினையா.. இல்லை லைட்டிங் அதுபோல இருந்ததால் அப்படித் தெரிந்ததா என்பதில் அவருக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சாரா: கண்ணில் தோன்றிய அந்த பளபளப்பிற்கான காரணத்தைக் கண்டறியத் தீர்மானித்த சாரா, அடுத்த நாள் மீண்டும் சோதித்துள்ளார். வீட்டில் உள்ள ஒவ்வொரு ரூமிற்கும் அழைத்துச் சென்று கண்களை வெவ்வேறு ஒளி நிலைகளில் டெஸ்ட் செய்துள்ளார். இருப்பினும், வினோதமான அவரது கண்களில் மீண்டும் பிரகாசம் தெரிந்துள்ளது.
இதனால் கவலையடைந்த சாரா, இதற்கான பதிலை கண்டறிய இணையம் பக்கம் ஒதுங்கினார். அப்போது தான் இந்த அறிகுறிகள் இருந்தால் கேன்சராக இருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. உடனடியாக தனது குழந்தையை அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சாரா சொன்ன கதையைக் கேட்ட போது மருத்துவர்களே முதலில் நம்பவில்லை. இருப்பினும், சாரா கேட்டுக் கொண்டதால் கேன்சர் டெஸ்டிங் செய்துள்ளனர்.
கேன்சர்: துரதிர்ஷ்டவசமாக, அந்த குழந்தைக்கு கேன்சர் இருப்பது உறுதியானது. தாமஸுக்கு ரெட்டினோபிளாஸ்டோமா என்ற ஒரு வகை அரிதான கண் புற்றுநோயாகும். இந்த செய்தி சாரா உள்ளிட்ட அனைவருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து உடனடியாக அந்த குழந்தைக்கு கேன்சர் பாதிப்பிற்கான சிகிச்சை ஆரம்பித்து. முதற்கட்டமாக கீமோதெரபி சிகிச்சைகள் ஆரம்பித்துள்ளது.
சிகிச்சையில் முதலில் பின்னடைவு ஏற்பட்டாலும் கூட ஆறு கடினமான கீமோதெரபி செஷனுக்கு பிறகு குழந்தை கேன்சரில் இருந்து முழுமையாகக் குணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சுமார் 7 மாத சிகிச்சை குழந்தைக்குத் தேவைப்பட்டுள்ளது. இருப்பினும், துளியும் அஞ்சாமல் குழந்தைக்கு கீமோதெரபி சிகிச்சை முழுமையாக முடியும் வரை அவரது தாயார் பக்கபலமாக இருந்துள்ளார். தாய் சாரா மொபைல் போன் லைட்டை வைத்தே கேன்சர் பாதிப்பைக் கண்டுபிடித்ததே அந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது.
அறிகுறிகள்: பொதுவாகக் குழந்தைகளிடையே கேன்சர் ஏற்படும் போது அது ஒரு சில அறிகுறிகளை மட்டுமே வெளிப்படுத்தும். உதாரணமாக எப்படி இந்த குழந்தைக்குக் கண்கள் பிரகாசமாக இருந்ததோ அப்படி.. ஆனால், இது போன்ற லேசான அறிகுறிகளைக் கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சையை ஆரம்பித்தால் மட்டுமே பல லட்சம் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.












Click it and Unblock the Notifications