பணம் கட்டினாலும் கூட.. இனி ஓடிடி தளங்களிலும் விளம்பரம் வரும்.. வெளியான ஷாக் அறிவிப்பு! பின்னணி
டெல்லி: இந்த காலகட்டத்தில் மக்கள் பலரும், குறிப்பாக இளைஞர்கள் அதிகம் ஓடிடி தளங்களை யூஸ் செய்கிறார்கள். இதற்குக் கணிசமான தொகையைச் செலுத்தவும் வேண்டி இருக்கிறது. இப்போது நாம் சந்தா கட்டணம் செலுத்தினால் ஓடிடியில் விளம்பரங்கள் வருவதில்லை. ஆனால், இந்த நிலை விரைவில் மாறலாம். சீக்கிரமே சந்தா கட்டினாலும் கூட விளம்பரங்களும் வரப் போகிறது.
இந்த காலத்தில் இளைஞர்கள் பலரும் டிவி பார்ப்பதில்லை. அவர்கள் நேரடியாக ஓடிடி தளங்களையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.

ஓடிடி: முதலில் டிவி என்றால் ஒரே இடத்தில் தான் பார்க்க வேண்டும். மேலும், நாம் விரும்பிய விஷயத்தைப் பார்க்க முடியாது. அதில் என்ன ஒளிபரப்பாகிறதோ.. அதைத் தான் பார்க்க முடியும். ஆனால், ஓடிடி என வரும் போது இணையச் சேவை இருந்தால் போதும் எங்கு வேண்டுமானாலும் பார்க்கலாம். மொபைல் போன், டிவி, லேப்டாப் என எதில் வேண்டுமானாலும் பார்க்கலாம்.
அடுத்து முக்கிய காரணம் விளம்பரம். டிவியில் ஒரு படத்தைப் பார்க்க வேண்டும் என்றால்.. அதிலும் விழாக் காலங்களில் 2.5 மணி நேரம் ஓடும் படத்தைப் பார்க்கவே 4 மணி நேரம் ஆகிவிடும். அந்தளவுக்கு விளம்பரங்களைப் போட்டுத் தள்ளுவார்கள். ஆனால், ஓடிடியில் நாம் குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்திவிட்டால் போதும் விளம்பரமே வராது. எனவே, ஒரு நல்ல பட அனுபவம் வேண்டும் என்றால் அதற்கு ஓடிடி தான் பெஸ்ட் ஆப்ஷனாக இருந்தது. ஆனால், இதில் இப்போது மிக விரைவில் ஒரு மாற்றம் வரப் போகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமேசான்: இந்தியாவில் ஓடிடி தளத்தில் மிக முக்கிய நிறுவனமாக உள்ளது அமேசான் பிரைம். ஆண்டுக்கு 1500 ரூபாய் செலுத்தினால் போதும் அமேசான் ப்ரைம் வீடியோவுடன் ஷாப்பிங் உள்ளிட்ட கூடுதல் சலுகைகளும் கிடைக்கும் என்பதால் பலரும் இதையே விரும்புகிறார்கள். இதற்கிடையே அமேசான் பிரைமில் படம் உட்பட எந்தவொரு நிகழ்ச்சியைப் பார்க்கும் போதும் பார்வையாளர்கள் இனி விளம்பரங்களையும் பார்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு முதல் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பரம் வரும்: இது தொடர்பாக அமேசான் நிறுவனம், "இந்தியாவில் தொடர்ந்து முதலீடு செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ள நிலையில், அதைக் கருத்தில் கொண்டு 2025 முதல் இந்தியாவில் பிரைம் வீடியோ நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் இனி விளம்பரங்களும் வரும். அதேநேரம் டிவி மற்றும் பிற ஸ்ட்ரீமிங் நிறுவனங்களைக் காட்டிலும் குறைவான விளம்பரங்களே இருக்கும்" என்று அறிவித்துள்ளது.
தற்போது அமேசான் பிரைம் விலையில் மாற்றம் வராது என்ற போதிலும், விளம்பரம் இல்லாமல் படங்கள், டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டும் என்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து அமேசான் பிரைம் யூசர்களுக்கும் மெயில் அனுப்பப்படும் என்றும் அவர்கள் விளம்பரங்கள் ஓகேவா இல்லை கூடுதல் கட்டணம் செலுத்தலாமா என்பதை அவர்கள் முடிவு செய்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மாறப் போகிறது: இப்போது அமேசான் நிறுவனம் மட்டுமே இதை அறிவித்துள்ளது என்ற போதிலும், விரைவில் எல்லா நிறுவனங்களும் இதைப் பின்பற்ற வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லப்படுகிறது. டிவியில் தான் ஓவர் விளம்பரம் என ஓடிடி பக்கம் சென்றால் அங்கும் விளம்பரங்களைப் போட்டுத் தாக்கத் தொடங்கிவிடுவார்கள் போல.. இந்த முடிவுக்கு நீங்க என்ன சொல்கிறீர்கள்!












Click it and Unblock the Notifications