75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்
சென்னை: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித், பிரசாந்த் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து, பிறகு ஹீரோவாகவும் முத்திரை பதித்தவர் நடிகர் கரண்.. கடந்த 10 ஆண்டுகளாகத் திரையுலகில் எந்தப் படங்களிலும் நடிக்காமல் முழுமையாக விலகியுள்ளார். அவர் ஏன் விலகினார், எங்கு இருக்கிறார் என்பது குறித்த பல சுவாரசியமான தகவல்களையும், சோஷியல் மீடியாவில் உலாவும் வதந்திகளின் பின்னணியில் உள்ள உண்மையையும் ஆஸ்கார் மூவிஸ் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
media circle என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, நடிகர் கரண் சிறு வயதிலேயே மிகவும் துருதுருவென்று, எழிலோடு பிரமாதமாக நடிக்கக்கூடியவராகத் திகழ்ந்தார். அவர் மாஸ்டர் ரகு என்ற பெயரில் மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.

நடிகர் கரண்
டீனேஜ் வயதில் ரஜினிகாந்தின் 'அண்ணாமலை' திரைப்படத்தில் நடித்த கரண், அதன் மூலம் கவனம் பெற்றார். பிறகு இயக்குநர் வசந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து 'நம்மவர்' படத்திற்காகக் கரணைத் தேர்ந்தெடுத்தனர். கல்லூரிக் பின்னணியைக் கொண்ட அப்படத்தில், ஒரு முரடான கல்லூரி மாணவன் மற்றும் ஆன்டி ஹீரோ கதாபாத்திரத்திற்கு கரண் சரியாக இருப்பார் என்று கமல் நம்பினார்.
கமல்ஹாசன் எப்போதுமே திறமையானவர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பார் என்பதால், கரண் நிச்சயம் பெரிய ஆளாக வருவார் என்று அவர் கணித்தது வீண் போகவில்லை. ஒரு கட்டத்தில் மிகவும் பிஸியான நடிகராக வலம் வந்த அவர், ஒரு நாளைக்கு 3 படங்கள் வரை நடித்தார். அவரது நடிப்பு கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்று சிலர் விமர்சனம் செய்தாலும், அந்த எதார்த்த ஸ்டைல்தான் தமிழ்நாட்டு மக்கள் அனைவரிடமும் அவரை எளிதாகக் கொண்டு சேர்த்தது.
ஹீரோவாகவே 25 படங்கள்
ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும், வில்லனாகவும் பெரிய மார்க்கெட்டை உருவாக்கிய கரணுக்கு, தானும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை உருவானது. அதன்படி, குஷ்பூவுடன் இணைந்து 'கலர் கனவு' என்ற படத்தில் நடித்தார். 'கொக்கி' படம் அவரது ஸ்டைலில் மிகவும் வித்தியாசமாக இருந்தது. 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்', 'கந்தா', 'காத்தவராயன்', 'படித்துறை பாண்டி', 'கருப்புசாமி குத்தக்காரர்' என ஹீரோவாகவே சுமார் 20 முதல் 25 படங்கள் வரை தொடர்ந்து நடித்தார்.
ஆனால், 2016-ல் அவர் நடித்த 'உச்சத்துல சிவா' படம் வெளியான பிறகு, கடந்த 10 ஆண்டுகளாக அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. நல்ல மார்க்கெட்டும், திறமையான நடிகர் என்ற முத்திரையும் இருக்கும்போதே அவர் திடீரெனக் காணாமல் போனார். எந்தவொரு காரணமும் சொல்லாமல் விலகிவிட்டார்.
75 பவுன்ஸ் ஆன செக்குகள்
கரணின் விலகலுக்கு பின்னால் திரையுலக ஏமாற்றங்களும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. சினிமாவில் நடித்த படங்களுக்குப் பேங்கில் போட்டு பணம் வராமல் நிலுவையில் உள்ள செக்குகளின் மதிப்பு மட்டுமே லட்சக்கணக்கில் இருக்குமாம். அவரிடம் பவுன்ஸ் ஆன செக்குகள் மட்டுமே சுமார் 75 இருக்கும் என்று கூறுகிறார்கள்.
சில தயாரிப்பாளர்கள் வியாபாரத்தில் தோற்றுப் போனதால் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம், சிலர் வேணுமென்றே ஏமாற்றியிருக்கலாம். இப்படி சினிமாவில் பல தயாரிப்பாளர்களால் கரண் பண விஷயத்தில் ஏமாற்றப்பட்டுள்ளார்.
ரசிகர்களை சம்பாதித்த கரண்
ஆனால் எந்தவொரு பத்திரிகையாளரைப் பார்த்தாலும் பெயர் சொல்லி அழைத்து, குடும்பத்தினரின் நலம் விசாரிக்கும் அளவுக்குத் திமிர் இல்லாத எளிமையான மனிதராக இருந்தார் கரண். ஒருமுறை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், "இவ்வளவு படங்கள் நடித்திருக்கிறீர்களே, எவ்வளவு சம்பாதித்தீர்கள்?" என்று கேட்டபோது, கரண் மிகவும் எதார்த்தமாக, "நான் பணம் சம்பாதிக்கல, ரசிகர்களைத்தான் சம்பாதிச்சேன். பணம் சம்பாதிச்சா செலவாகிடும், ஆனா ரசிகர்கள் எப்பவுமே செலவாக மாட்டாங்க" என்று பதிலளித்தார்.
சென்னை தேவர் சிலை பக்கத்தில் இருந்த அவரது ஆபீஸில் ரசிகர் மன்றத்திற்காகவே ஒரு தனி அறையை ஒதுக்கியிருந்தார். ஏழை ரசிகர்கள் தங்களின் பிள்ளைகளின் பள்ளி கட்டணம் போன்ற தேவைகளுக்காக உதவி என்று கேட்டு வந்தால், தம்மால் முடிந்த பணத்தை உடனே எடுத்துக் கொடுப்பார். கமல்ஹாசனை பின்பற்றி, தன் ரசிகர் மன்றத்தை வெறும் புகழ்பாடும் மன்றமாக மட்டும் வைத்திருக்காமல், நற்பணி இயக்கமாக மாற்றிப் பல ரத்ததான முகாம்களையும், அன்னதானங்களையும் நடத்தினார்.
ஆண்டி ஹீரோ சப்ஜெக்ட்
கரண் சினிமா பக்கமே வராமல் போனதற்கு, "நான் இனிமேல் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன், குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலோ அல்லது அப்பா, தாத்தா வேடங்களிலோ நடிக்க மாட்டேன்" என்று எடுத்த முடிவும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
3 வருடங்களுக்கு முன்பு, பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்கு நடிகர் கரண் போன் செய்து, "சார், எனக்கு ஏத்த மாதிரி ஒரு கிரைம் சப்ஜெக்ட் இருக்கா? நானே தயாரித்து, நானே ஹீரோவாக நடிக்கப் போகிறேன்" என்று கதை கேட்டதாக ஒரு தகவல் உள்ளது. அதேபோல், ஒரு முக்கிய இயக்குநர் கரனைத் தொடர்புகொண்டு ஒரு 'ஆண்டி ஹீரோ' சப்ஜெக்ட் குறித்துக் கேட்டபோது, கரண் அதற்கு "விருப்பமில்லை" என்று ஒரே வார்த்தையில் மறுத்துவிட்டார்.
யாரந்த பெண் மேனேஜர்
சமூக வலைத்தளங்களில் "ஆண்டியால் அழிந்தாரா கரண்?" என்பது போன்ற கொச்சைப்படுத்தப்பட்ட தம்ப்னைல்களுடன் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை. சோசியல் மீடியா வந்த பிறகு யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதுகாக்க முடிவதில்லை. ஒரு சில ஊடகங்கள் வியூஸ்களுக்காகவும், கன்டென்ட்க்காகவும் ஒருவரது வாழ்க்கையைக் கொச்சைப்படுத்தி நெறிதவறி எழுதுவது கண்டிக்கத்தக்கது.
உண்மை என்னவென்றால், கரணின் சினிமா காலகட்டத்தில் ஒரு பெண்மணி அவருக்கு மேனேஜராக இருந்தார். கரணின் கால்ஷீட் பார்ப்பது, கதைகளைக் கேட்பது, சம்பளம் பேசுவது எனப் பல விஷயங்களை அந்தப் பெண்மணிதான் கவனித்து வந்தார். ஆனால், சமூக வலைத்தளங்கள் தவறாகச் சித்தரித்துப் பேசி வருகின்றன. ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்களை வைத்து யாரையும் நாம் களங்கப்படுத்த முடியாது.
திருத்தணி தோட்டம்
கரண் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் என்றும், அங்கு அவரது மகளோடு வசித்து வருவதாகவும் ஒரு தகவல் கூறப்படுகிறது. ஆனால், திருத்தணியில் உள்ள தனது தோட்டத்தில் வெளி உலகத் தொடர்பு இல்லாமல், ஒரு சாதாரண எதார்த்தமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. எனினும், கரண் நினைத்தால் அரவிந்த் சாமி போல மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்து மார்க்கெட்டைப் பிடிக்க முடியும்" என்றெல்லாம் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications