15 வருஷ இசை பயணம்.. அனிருத் வெளியிட்ட உருக்கமான பதிவு.. திருமணத்துக்கு பிறகு வந்த ஸ்பெஷல் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பதிவு தற்போது கவனம் பெற்று வருகிறது. சினிமாவுக்குள் அறிமுகமாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதை நினைவுகூர்ந்து, தனது இசை பயணத்தில் கடந்து வந்த முக்கியமான தருணங்களை பற்றி நீண்ட பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் ரசிகர்களுக்கு நன்றி சொன்னதோடு, இன்னும் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அனிருத் என்ற பெயர் வந்தாலே இன்றைய இளைஞர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது அவருடைய துள்ளலான இசையும், உடனே முணுமுணுக்க வைக்கும் பாடல்களும்தான். ஆனால் இந்த இடத்தை அவர் ஒரே நாளில் பிடித்துவிடவில்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான முதல் பாடலில் தொடங்கிய பயணம், இன்று பல மொழி படங்கள், சர்வதேச இசை கூட்டணிகள், பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகள் என்று விரிவடைந்திருக்கிறது. அந்த பயணத்தைத்தான் இப்போது தனது வார்த்தைகளில் திரும்பிப் பார்த்திருக்கிறார்.

Anirudh Kavya Maran

அனிருத் பதிவு

அனிருத் பதிவில், 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் எங்களுடைய முதல் பாடல் உலகத்தை சென்றடைந்ததது. அன்றிலிருந்து இன்று வரை இந்த பயணம் நிற்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் இசையில் தொடங்கிய எங்களுடைய பயணம் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் எனப் பல மொழிகளுக்கு சென்றிருக்கிறது, ஒவ்வொரு மொழியிலும் வெவ்வேறு ரசிகர்களின் அன்பை பெற்றிருக்கிறது. சுயாதீன இசை பாடல்கள் உருவாக்கியது, எங்களுக்கு பிடித்த சர்வதேச இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது, எந்த மொழியில் பாடச் சொன்னாலும் பாடுவதற்கு கிடைத்த வாய்ப்பு என பல அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார். இந்திய சினிமாவின் மிகப்பெரிய படங்களில் ஒரு பகுதியாக இசையமைக்கக் கிடைத்த வாய்ப்புகளையும் பற்றி பெருமையாக பகிர்ந்து இருக்கிறார்.

இசை ஆல்பங்கள், படங்களின் பாடல்கள் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் நடந்த இசை நிகழ்ச்சிகள் பற்றியும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். பல இடங்களில் அரங்குகள் நிரம்பிய ரசிகர்களுக்கு முன்னால் இசை நிகழ்ச்சி நடத்தியது, தங்களுடைய பாடல்களை ஆயிரக்கணக்கானோர் ஒன்றாக பாடியதை பார்த்தது என ஒவ்வொரு தருணமும் கனவில் கூட நினைத்து பார்க்காத அனுபவம் என்று நெகிழ்ந்திருக்கிறார்.

2026 கொடுத்த மகிழ்ச்சி

எனது 15 ஆண்டு பயணத்தை கொண்டாடுவதற்கு 2026-ம் ஆண்டு அமைந்த விதம் மிகவும் சிறப்பானது. இந்த ஆண்டில் லைக், ஜனநாயகன், பாரடைஸ், ஜெயிலர் 2 போன்ற படங்களில் பணியாற்றியது பெருமை. இத்தனை பெரிய படங்களின் இசைப் பயணத்தில் என்னால் பங்கெடுக்க முடிந்ததே 15 ஆண்டுகளை கொண்டாடுவதற்கான ஒரு அழகான வழி என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

Anirudh Kavya Maran

புதிய நிறுவனம்

அதுமட்டுமல்லாமல், இசை துறையில் அடுத்த தலைமுறையை சேர்ந்த கலைஞர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 'Albuquerque Records' என்ற புதிய இசை நிறுவனத்தையும் தொடங்கியிருப்பதாக பதிவில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் புதிதாக இசையமைப்பவர்கள், திறமையான இளம் கலைஞர்கள் தங்களுடைய படைப்புகளை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே தனது எண்ணம் என்றும் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து வரும் வெற்றிகளும் சவால்களும் இருந்தாலும் இசைக்கான ஆர்வம் மட்டும் குறையவில்லை என்றும், ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அவர் எழுதியிருக்கிறார். இனியும் அதே ஆர்வத்துடன் இசை பயணத்தை தொடர போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Anirudh Kavya Maran

திருமண வாழ்க்கையிலும் புதிய அத்தியாயம்

தொழில் வாழ்க்கையில் 15 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் இந்த நேரத்தில், அனிருத்தின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் முக்கியமான மாற்றம் நடந்திருக்கிறது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இணை உரிமையாளரும், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளுமான காவ்யா மாறனை அனிருத் கடந்த நவம்பர் 11-ம் தேதி கிரீஸில் திருமணம் செய்துகொண்டார்.

குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய வட்டாரத்தினர் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணத்தின் புகைப்படங்களை அனிருத் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், 'My once in a lifetime, for a lifetime' என்று குறிப்பிட்டு 11.11 என்ற தேதியையும் சேர்த்திருந்தார். இருவருடைய திருமண புகைப்படங்களும் வெளியானதும் சினிமா, அரசியல், விளையாட்டு என பல துறைகளை சேர்ந்தவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். சென்னையில் நவம்பர் 21-ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இப்படி ஒருபக்கம் திருமண வாழ்க்கையின் புதிய அத்தியாயம் தொடங்கியிருக்க, மறுபக்கம் இசை பயணத்தின் 15 ஆண்டு நிறைவையும் அனிருத் கொண்டாடி வருகிறார். ஆனால் இந்த பதிவில் அவர் அதிகமாக சொல்லியிருப்பது வெற்றிகளை பற்றிய பெருமையைவிட, தன்னுடன் பயணித்த இசைக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவைத்தான். இறுதியில், இந்த பயணத்தில் தன்னை நம்பி இசையை கேட்டவர்கள், பாடல்களை பாடி மகிழ்ந்தவர்கள், ஆதரவு கொடுத்தவர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+