கொண்டாடப்படும் "மொத ராத்திரி” பட காட்சி.. இதை கவனிச்சீங்களா? Gen Z கிட்ஸ்களுக்கு பாடம்
சென்னை: ஒரு படம் வெளியானதும் நல்ல படம் என்று 4 பேர் சொல்வது பெரிய விஷயம் இல்லை. ஆனால் படத்தை பார்த்த பிறகு ஒவ்வொருவரும் அவரவருக்கு பிடித்த ஒரு விஷயத்தை எடுத்து பேச ஆரம்பித்தால் அங்கு தான் அந்த படத்துக்குள் ஏதோ இருக்கிறது என்பது உண்மை. இப்போது மொத ராத்திரி படத்துக்கு அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.
ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியான இந்த படம் அறிமுகம் இயக்குனர் ராஜா கருப்பசாமியின் முதல் படமாகும். ரிஷி காந்த், அனிஷ்மா குமார் இருவரும் கதையின் ஹீரோ ஹீரோயினியாக இருக்க, சேத்தன் பகவதி பெருமாள், அப்துல், ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு பரத் சந்தர் இசை அமைத்திருக்கிறார். பரஞ்சோதி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அசோக் அர்ஜுனன் படத்தொகுப்பு வேலைகளை கவனித்திருக்கிறார்.

மொத ராத்திரி பட ரிவ்யூ
பொதுவாக ஒரு படம் தியேட்டரில் பாசிட்டிவ் ரிவியூ பெற்று ஓடிடி வந்த பிறகு கூட அதிகமாக அடிவாங்கும். ஆனால் மொத ராத்திரி படத்திற்கு நிலைமை அப்படி இல்ல. காரணம் உள்ளே சொல்லப்பட்டிருக்கும் பல விஷயங்களை சொல்லலாம். இந்த படத்தின் கதாநாயகன் மருதநாயகம் காதல் தோல்வியால் திருமணமே வேண்டாம் என்று வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டு குடும்பத்திற்கு பணத்தை மட்டும் அனுப்பி கொண்டிருக்கிறார். மறுபக்கம் முத்து செல்வியாக வரும் அனிஷ்மா இன்னொரு பையனை காதலித்துக் கொண்டிருக்கிறார். அதனால் அவருக்கு குடும்பத்தினர் அவசர அவசரமாக திரும்ப ஏற்பாடுகளை செய்கின்றனர்.
இதில் தான் இயக்குனர் ராஜா கருப்பசாமி ஒரு சின்ன விஷயத்தை அழகாக செய்து இருக்கிறார். கல்யாணம் நடக்குது அதனால எல்லாரும் சந்தோஷமாக இருக்காங்க என்ற வழக்கமான சினிமாவாக எடுத்துக்கொள்ளாமல் அந்த கல்யாணத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனையை வைத்திருக்கிறார். பொதுவாக படங்கள் என்றால் ஹீரோ ஹீரோயினி, வில்லனுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இந்த படத்தில் எல்லா கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது.
இயக்குனரின் சாமர்த்தியம்
குறிப்பாக நிதிஷ் என்ற கேரக்டரில் இயக்குனரே நடித்திருக்கிறார். அவரைதான் எல்லோரும் சோசியல் மீடியாவில் திட்டி தீர்த்து வருகின்றனர். அவர் தற்போதைய ஜென்சி கிட்ஸ்களின் மனநிலையை பிரதிபலிப்பது போல இருக்கிறார். காதலிக்க வேண்டும், ஆனால் ஒரு காதல் கல்யாணம் பண்ணினால் அடுத்து என்ன செய்ய வேண்டும்? அதற்கான செலவுகள் என்ன? குடும்ப பொறுப்புகளை எப்படி கையாளுவது? என தெரியாத ஒரு இளைஞனை அப்படியே கண் முன்பு காட்டி இருக்கிறார். இதை பார்க்கும் போது இன்றைய ஜென்சி கிட்ஸ்களுக்கு பொறுப்பு வந்தால் சரி என்று சிலர் சொல்லி வருகின்றனர்.
அதே நேரத்தில் ராஜா கருப்பசாமியும் ஒரு ஜென்சி கிட்ஸ் தான். அவர் இப்படி ஒரு எதார்த்தமான படத்தை கொடுத்திருக்கிறார் என்றால் இன்றைய தலைமுறை எல்லோருமே பொறுப்பில்லாமல் இல்லை என்றும் சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்கட்டும் படத்துக்குள் சில விஷயங்களை மட்டும் சொல்லலாம். படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கோவில் காட்டுவார்கள். அங்கு சேத்தன் பூஜை செய்தபடியே புலம்பி கொண்டிருப்பார். அந்த படத்தின் அதிகமான கதை அந்த கோவிலை சுற்றி தான் இருக்கும். அதனால் அந்த கோவில் கூட ஒரு கேரக்டர் போலவே இருக்கும்.

கோவில் காட்சி
கதாநாயகி முடிவெடுக்க குழம்பும் நேரத்தில் மணி அடிப்பது, பிறகு கதாநாயகி மனதிற்குள் குழப்பமாக இருக்கும் போது அவருக்கு சில சமிச்சை செய்வது என கோவில் கூட ஒரு கேரக்டராகவே மாறிவிட்டது. அதுபோல ஹீரோவும் ஹீரோயினியும் முதல் ராத்திரி ரூமில் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் வெளியே படுத்து இருக்கும் பெண்களுக்கு அவர்கள் இருவரும் ரொமான்ஸ் செய்வதுபோல சத்தம் கேட்கும். அப்போது ஹீரோயினியின் சித்தி மகள் தலையை தூக்கி எட்டி பார்க்க, அந்த சமயத்தில் ஹீரோயினியின் சித்தி அந்த பெண்ணை பார்த்து முறைத்துக் கொண்டே இருப்பார்.
கல்யாண வீட்டு பஞ்சாயத்து
அதை பார்க்கும் போது என்னதான் பிள்ளைங்க தப்பு பண்ணினாலும் சரி, என்ன திருட்டுத்தனம் பண்ணினாலும் சரி, அம்மா கண்ணுல இருந்து தப்பவே முடியாது என்பது போலவே அந்த காட்சி இருக்கும். அதுபோல பெண் வீட்டார் மாப்பிள்ளை விட்டார் இரண்டு குடும்பத்திற்குள் சண்டை நடக்கும் போது கூட ஏதோ ஊர் பக்கம் கல்யாண வீட்டில் நடக்கும் சண்டைகளை கண் முன்பு பார்ப்பது போலத்தான் இருந்தது. ஜாலியான அதே நேரத்தில் பல அழுத்தமான விஷயங்களையும் எதார்த்தமாக சொன்ன இந்த படத்தில் சாதிய நடைமுறைக்கும் ஒரு குட்டு கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
ஜாதி பிரச்சனை
இப்பல்லாம் யாரு சார் ஜாதி பார்க்கிறாங்க என்று கேட்கிறவர்கள் பல பேர் இருந்தாலும் இப்போதும் ஜாதி பிரச்சனையும் ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதையும் அழகாக காட்டி இருக்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு பெண்ணுடைய படிப்பு, பொருளாதார சுதந்திரம், குடும்பத்திற்குள் பெண்கள் எதிர் கொள்ளும் அடக்குமுறை போன்ற பல விஷயங்களை கதைக்குள் இயல்பாக வருகிறது.
அதிலும் திருமண விஷயத்தில் கூட பெண்ணும் சரி, ஆணும் சரி தங்களுடைய விருப்பப்படி முடிவெடுக்கும் சுதந்திரம் இன்னும் பலருக்கு இல்லை. அப்படி இருக்கக்கூடாது, இப்படி இருக்கக் கூடாது என்று அடக்குமுறைக்குள் அடங்கி அடங்கியே இருக்கும் ஒரு பெண்ணின் மனது திடீரென வெடித்தால் எப்படி இருக்கும் என்பதை ஹீரோயின் ஹீரோ இரண்டு பேருமே அழகாக காட்டி இருக்கிறார்கள்.
முடிவு காட்சி
படத்தின் கடைசியில் மொத்த குடும்பத்தின் முன்பும் செல்வி கத்திவிட்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து நடந்து போவது, அப்போது கண்களாலேயே மருதநாயகத்தை பார்ப்பதும்... மருதநாயகமும் மொத்த குடும்பத்தையும் முதல் முறையாக எதிர்த்து பேசிவிட்டு முத்து செல்வி பின்னாடியே போகும் காட்சிகளில் இருவருடைய பல வருட வலி, வேதனை எல்லாமே தெரிகிறது.
சமீப காலமாக வெளிவந்த பல படங்கள் சுபம் என்பதை மறந்து அடுத்த பாட்டுக்கு லீடு கொடுப்பது போலவும், பல பிரச்சனைகள் முடிவுக்கு வராது போலவுமே படத்தை முடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது இந்த படம் ரசிகர்கள் மனதிற்கு ஒரு விதமான மகிழ்ச்சியை கொடுப்பது போலவே படத்தை முடித்து இருக்கிறார்கள். அது கூட இந்த படத்திற்கு பாசிட்டிவ் வைப் கொடுத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
