கண்முன்னே நடந்த அதிசயம்.. கிருஷ்ண பக்தையாக மாறிய காரணம் இதுதான்! நடிகை காஜல் அகர்வால் உருக்கம்
சென்னை: சினிமாவில் ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது என்னென்ன ஆபத்துகள் நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. திரையில் சில நொடிகள் மட்டுமே வரும் காட்சிகளுக்குப் பின்னால் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலருடைய உழைப்பு இருக்கிறது. ஆனால், அந்த படப்பிடிப்பு தளமே ஒருவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தினால் எப்படி இருக்கும்? அப்படியொரு சம்பவத்தைத்தான் நடிகை காஜல் அகர்வால் இப்போது மனம் திறந்து பகிர்ந்திருக்கிறார்.
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த கிரேன் விபத்தைப் பற்றி காஜல் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. 2020-ம் ஆண்டு நடந்த அந்த விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய அனுபவத்தை பற்றி பேசிய அவர், அந்த ஒரு சம்பவத்துக்கு பிறகு தனது வாழ்க்கையிலும் நம்பிக்கையிலும் ஏற்பட்ட மாற்றத்தை பற்றியும் உருக்கமாக பேசியிருக்கிறார்.

கண் முன்னால் நடந்த பயங்கரம்
2020 பிப்ரவரி மாதம், சென்னைக்கு அருகே பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்பட்ட சுமார் 100 அடி உயர கிரேன் ஒன்று எதிர்பாராத விதமாகச் சரிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். கமல்ஹாசன், ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோரும் அன்றைய படப்பிடிப்பில் இருந்தனர்.
நடிகை காஜல் அகர்வால் பேட்டி
இத்தனை ஆண்டுகளுக்குப பிறகு அந்த சம்பவத்தை பற்றி ஹியூமன் சாப் பாம்பே சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கும் காஜல், அன்றைக்கு தான் எந்த மாதிரியான சூழலில் இருந்தேன் என்பதை சொல்லி இருக்கிறார். படப்பிடிப்பின்போது நடிகர்கள் வழக்கமாக மானிட்டர் அருகே அமர்ந்திருப்பார்கள். அன்றும் அப்படித்தான் எல்லோரும் இருந்திருக்கிறார்கள். ஒரு ஆக்ஷன் காட்சிக்காக காஜல் 80 வயது மூதாட்டி போல தோற்றமளிக்கும் வகையில் புரோஸ்தெடிக் மேக்கப்புடன் இருந்திருக்கிறார். திடீரென அங்கே பரபரப்பு ஏற்பட்டு அனைவரும் ஓடத் தொடங்கியிருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்று புரியாமல் காஜலும் ஓடியிருக்கிறார். அப்போது வழியில் இருந்த மேஜை மீது மோதி கீழே விழுந்திருக்கிறார். பின்னர் திரும்பி பார்த்தபோதுதான் அந்த 100 அடி உயர கிரேன் தன்னை நோக்கி விழுந்து கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறார்.
காப்பாற்றிய நபர்
அந்த நொடி என்ன செய்வதென்றே தெரியாமல் உறைந்து போய்விட்டதாக காஜல் கூறியிருக்கிறார். கிரேன் என்னை நோக்கி வருவதை பார்த்தபோது என்ன நடக்கிறது என்பதையே என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை அடுத்த சில நொடிகளில் யாரோ ஒருவர் என்னை வேகமாகப் பிடித்து அந்த இடத்திலிருந்து இழுத்ததனர். கிரேன் எனக்கு மிக அருகில் விழுந்திருக்கிறது. அந்த இடத்தில் இருந்து தப்பித்த பிறகும் பயத்தில் நடுங்கி கொண்டிருந்ததாகக் கூறியிருக்கிறார்.
தன்னுடைய ஊழியர்கள் ஓடி வந்து விசாரித்தபோது, தன்னை இழுத்தது அவர்களா என்று கேட்டிருக்கிறார். ஆனால் அவர்கள் அப்போது தன்னருகில் இல்லை என்பதை அறிந்ததும், தன்னை யார் காப்பாற்றியது என்ற கேள்வி அவருக்குள் வந்ததாம். அந்த சம்பவத்தை நினைத்தாலே இப்போதும் உடல் நடுங்குகிறது, அந்த ஒரு நொடி மட்டும் வேறு மாதிரி நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைக்கும்போது அதிர்ச்சியாக இருப்பதாகவும் காஜல் பேசியிருக்கிறார்.
கிருஷ்ண பகவானின் பக்தையாக மாறிய காஜல்
இந்த விபத்துக்கு முன்பும் கடவுள் நம்பிக்கை இருந்தாலும், அந்த சம்பவத்துக்கு பிறகு கிருஷ்ண பகவானின் மீது தனக்கு ஏற்பட்ட பக்தி முற்றிலும் வேறொரு நிலைக்கு சென்றதாக காஜல் கூறியிருக்கிறார். அந்த இக்கட்டான நேரத்தில் ஏதோ ஒரு தெய்வீக சக்திதான் தன்னை காப்பாற்றியதாக அவர் நம்புகிறார். அதன்பிறகு கிருஷ்ணரின் தீவிர பக்தையாக மாறிவிட்டதாகவும், அந்த சம்பவம் தன்னுடைய வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தையே மாற்றிவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
நொடி பொழுதில் உயிர் தப்பியவர்களுக்கு தானே அதோட கஷ்டம் தெரியும். தன் கண்முன்னே பலர் உயிரிழந்த சமயத்திலும் தனக்கு ஏதோ ஒரு சக்தி தன்னை காப்பாற்றியதால் தான் இன்று உயிரோடு இருக்கிறேன் என்று அவர் நம்பிக் கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
