நடிகர் ராமராஜனை பார்த்து தான் எனக்கு அந்த ஆசையே வந்தது.. பல வருடம் கழித்து உண்மையை பகிர்ந்த சேரன்
சென்னை: இயக்குனராகவும், நடிகராகவும் பிரபலமடைந்த சேரன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் ராமராஜன் பற்றி பல தகவல்களை கூறி இருக்கிறார்.
தான் சினிமாவிற்கு வருவதற்கு என்ன காரணம் என்பது பற்றி அந்த பேட்டியில் பேசிக் கொண்டிருக்கும்போது நடிகர் ராமராஜனால் தான் நான் சினிமா வாழ்க்கையை தேர்ந்தெடுத்தேன் என்றும் சேரன் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதோடு ராமராஜனால் தனக்குள் எப்படி சினிமா தாக்கம் ஏற்பட்டது என்ற உண்மையையும் பல வருடம் கழித்து மனம் திறந்து சேரன் பேசியிருக்கிறார்.
கே எஸ் ரவிக்குமாருக்கு சில திரைப்படங்களுக்கு உதவியாளராக இருந்து பிறகு பாரதி கண்ணம்மா என்கிற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக மாறியவர்தான் சேரன். ஆரம்ப காலகட்டத்தில் நடிகராக வேண்டும் என்று பெரும் ஆசையோடு இருந்த சேரன் முதலில் இயக்குனராக மாறியதற்கு என்ன காரணம் என்பது பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

பொதுவாக சேரனின் திரைப்படங்களில் சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகள், குடும்ப ஒற்றுமை காதல் என பல உணர்வுபூர்வமான கதையாக இருக்கும். அதற்கு எடுத்துக்காட்டாக சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், பொக்கிஷம், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை, யுத்தம் செய், முரண், சென்னையில் ஒரு நாள், ஆனந்தம் விளையாடும் வீடு போன்ற பல திரைப்படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
திரைப்படங்களில் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்ன திரையிலும் இவர் பலருக்கும் பரீட்சயமானவர் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய நிஜ கேரக்டரை உலகிற்கே காட்டி இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேசி கொண்டு இருந்தார்.

அப்போது சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எனக்கு நடிகராக வேண்டும் என்று ஆசை இருந்தது. நடிகர் ராமராஜன் எங்க ஊரில் மேலூரில் இருந்த கணேஷ் தியேட்டரில் வேலை பார்த்தவர் தான். அதற்குப் பிறகு சென்னை வந்து உதவி இயக்குனராக இருந்து பிறகு நடிகராகவும் மாறிவிட்டார்.
எனக்கு அவர்தான் ரோல் மாடல். அவரால் முடிகிறது என்றால் நம்மாலும் முடியும் என்று நினைத்து சென்னைக்கு வந்தால் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இங்க வந்த பிறகு தான் எனக்கு பெரிய உண்மை எல்லாம் தெரிய ஆரம்பித்தது. இங்கே நடிப்பு வாய்ப்பு கேட்டு பெரும் கூட்டமே காத்திருப்பது நான் பிறகு தான் பார்த்தேன்.

என்னை விட உயரமாகவும், அழகாகவும், கட்டு மஸ்தான உடம்பை வைத்துக் கொண்டும் எனக்கு முன்பு பல ஆயிரம் பேர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களின் பக்கத்தில் கூட என்னால் நிற்க முடியவில்லை. அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் கூட்டத்தில் ஒருவராகத் தான் நிற்க வைப்பார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். அதனால் இந்த ரூட்டில் நடிகராக முடியாது என்று நான் புரிந்து கொண்டேன்.
அப்போது பாக்யராஜ், கே எஸ் ரவிக்குமார், பாலச்சந்தர் போன்ற சில இயக்குனர்கள் ரசிகர்களிடம் பிரபலமாக இருந்தனர். எனவே இயக்குனராகி விட்டு பிறகு நடிக்கலாம் என்று நான் அப்போது தான் கணக்கு போட்டேன்ய அதன் அடிப்படையில் தான் கே எஸ் ரவிக்குமாருக்கு உதவியாளராக சேர்ந்தேன். நான் நினைச்ச மாதிரியே பிறகு நடிகராகவும் மாறினேன் என்று சேரன் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications