Diwali: மகனின் தலை தீபாவளியில் மகிழ்ச்சியை பகிர்ந்த நெப்போலியன்.. குவியுது வாழ்த்து
சென்னை: திரையுலகில் கம்பீரமான நடிப்பாலும், அரசியலில் அசைக்க முடியாத ஆளுமையாலும் வலம் வந்த நடிகர் நெப்போலியன், தன் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளை அன்பாலும், மன உறுதியாலும் வென்றுள்ளார். இந்தத் தீபாவளித் திருநாளை, தன் மூத்த மகன் தனுஷ் மற்றும் மருமகள் அக்ஷயாவுடன் இணைந்து கொண்டாடிய நெப்போலியன், அந்த மகிழ்ச்சியான தருணங்களைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்து, ஒரு பாசமிகு தந்தையின் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

நெப்போலியன்
நடிகர் நெப்போலியனின் நிஜப் பெயர் குமரேசன் துரைசாமி தான். திருச்சியில் பிறந்த இவர், செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர்.1991ஆம் ஆண்டு பாரதிராஜாவின் 'புது நெல்லு புது நாத்து' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்த இவர், தமிழோடு மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழித் திரைப்படங்களிலும் முத்திரை பதித்துள்ளார். இவருக்கு தனுஷ் மற்றும் குணால் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். சினிமாவில் ஆரம்ப காலத்தில் ஜெயசுதாவைத் திருமணம் செய்துகொண்டார்.
மகனுக்காக அமெரிக்காவில் குடியேறிய போராளி
நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோய் (Muscular Dystrophy) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். மகனுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகவும், அவரது எதிர்காலத்தை எண்ணியும், நெப்போலியன் தன் ஒட்டுமொத்தக் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறினார். இந்தச் சூழ்நிலை, அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
"நம் பெற்றோரின் கனவுகளுக்காகவும், நமது கனவுகளுக்காகவும், நம் பிள்ளைகளின் கனவுகளுக்காகவும் அவசியம் வாழ வேண்டும்" என்று அவர் இந்தப் போராட்டக் காலத்தில் கூறியுள்ளார்.
விமர்சனங்களை மீறிய திருமணம்
தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மகனுக்குத் திருமணம் செய்து வைப்பது என்ற நெப்போலியனின் முடிவைக் குறித்துச் சிலர் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர். "தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருமண வாழ்க்கை வாழ முடியாது என்று சொல்ல முடியாது" என்று இதே நோயால் பாதிக்கப்பட்டவர்களும், இந்தக் காதல் மற்றும் வாழ்க்கைத் துணை அவசியம் என்றும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த விமர்சனங்களைக் கடந்து, நெப்போலியனும் அவரது மனைவி ஜெயசுதாவும் மகனுக்கு ஒரு துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தனர். சுமார் மூன்று மாதங்கள் இருவரும் போனில் பேசிப் பழகிய பிறகு, தனுஷின் ஆசைப்படி, கடந்த வருடம் (நவம்பர் 2024) ஜப்பானில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது.
பேரன்பின் தீபாவளி
தசை சிதைவு நோய், விமர்சனம், சிகிச்சை எனப் பல சவால்களைக் கடந்து, ஒருவழியாகத் தன் மகன் திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து நெப்போலியன் பெருமகிழ்ச்சி அடைந்தார். இந்தத் தீபாவளி நன்னாளில், தன் மூத்த மகன் தனுஷ் மற்றும் மருமகள் அக்ஷயாவுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடிய வீடியோவை நெப்போலியன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"உலகெங்கும் வாழும் அன்பு நண்பர்களே, தமிழ்ச் சிங்கங்களே, வணக்கம்! உங்கள் அன்போடும் ஆசீர்வாதத்தோடும், தனுஷ்/அக்ஷயா தலை தீபாவளியைச் சிறப்பாகக் குடும்பத்தோடு கொண்டாடினோம்!" என்று நெப்போலியன் உணர்வுபூர்வமானப் பதிவை வெளியிட்டுள்ளார்.
தன் மகனின் தனிப்பட்ட சவால்களைப் பாசத்தால் வென்று, அவருக்கான ஒரு துணையை ஏற்படுத்திக் கொடுத்த இந்த வீரத் தந்தைக்கு, இந்தத் தீபாவளிக் கொண்டாட்டம் அன்பின் வெற்றியைக் கொண்டாடும் திருநாளாகவே அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications