என்னால முடியாதா? நான் ப்ரூவ் பண்ணுறேன்! விமர்சனங்களுக்கு நெப்போலியன் மகன் திடீர் வீடியோ
சென்னை: நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் சிறுவயதிலேயே பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதால் சிலர் இவர் திருமணம் செய்வது தவறு என்று விமர்சித்து வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனுஷ் இன்று வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
இணையத்தின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் அதை ஒரு சிலர் சரியாக பயன்படுத்துகிறார்கள். இன்னும் ஒரு சிலர் தேவையில்லாத கமண்ட்டுகள் மூலம் அடுத்தவர்களின் மனதை கஷ்டப்படுத்துகிறார்கள். உலகத்தில் எல்லோரும் எல்லாவிதத்திலும் சிறப்பாக இருந்து விட முடியாது. ஒரு சிலருக்கு சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த குறைபாடுகளை வைத்து கூட சிலர் விமர்சிக்கிறார்கள். சமீபகாலமாக நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் திருமணம் பற்றி சிலர் விமர்சித்து வருகிறார்கள்.

நெப்போலியன் சினிமா நடிகராகவும், அரசியல் பிரமுகராகவும் தமிழகத்தில் பிரபலமானவர்தான். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் சினிமாக்களில் நடித்திருக்கிறார். தமிழில் அவருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதுபோல மலையாளத்திலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவருடைய மூத்த மகன் தனுஷுக்காக தன்னுடைய அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கையை விட்டு விலகி அமெரிக்காவில் பிசினஸ் செய்து வருகிறார்.
அமெரிக்காவில் ஐடி நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நெப்போலியன் பல தமிழர்களுக்கு அங்கு வேலை கொடுத்து கொண்டிருக்கிறார். நெப்போலியனின் மூத்த மகன் தனுஷிற்கு நான்கு வயதில் இருக்கும் போது தசைசிதைவு நோய் பாதிக்கப்பட்டது. அதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பார்த்தும் குணமாகாத நிலையில் தன்னுடைய மகன் ஆசைப்பட்டதால் இப்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.
தன்னுடைய மகனுக்கு 24 வயது ஆகிவிட்ட நிலையில் திருமணம் செய்ய வேண்டும் என்று பெண் பார்த்த நெப்போலியன் தமிழக பெண் தான் எனக்கு மருமகளாக வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கிறார். அவர் எதிர்பார்த்தபடியே திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த பெண் ஒருவரோடு தனுஷிற்கு எங்கேஜ்மென்ட் முடிவடைந்து இருக்கிறது. நவம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது.
நெப்போலியன் அமெரிக்காவில் வசித்து வருவதால் அங்கு திருமணம் நடத்தினால் குடியுரிமை பிரச்சனை வரும் என்பதால் ஜப்பானில் தன்னுடைய மகன் திருமணத்தை நடத்த இருக்கிறார். இந்த நிலையில் இந்த திருமண செய்தி இணையத்தில் வெளியானதுமே பலர் நெப்போலியன் மகனால் திருமண வாழ்க்கையில் ஈடுபட முடியாது, பணம் இருக்கிறது என்பதற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கிறார்கள் என்று அதிகமாக விமர்சித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் சிலர் தனுஷிற்கு வாழ்த்துக்கள் சொல்லியும் வருகின்றனர். இந்த நிலையில் தனுஷ் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் எல்லோருக்கும் வணக்கம் சமீப காலமாகவே என்னைப் பற்றி பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். நான் இணையத்தில் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். என்னை பற்றி சிலர் நெகட்டிவாக பேசிக்கொண்டு இருந்தாலும் அது எனக்கு மோட்டிவாக தான் இருக்கிறது.
ஆனால் என்னால் முடியாது என்று சிலர் சொல்வதை கேட்கும் போது நான் யார் என்று ப்ரூவ் பண்ணி ஜெயிச்சு காட்டணும் என்று நினைக்கிறேன். என்னை மாதிரி இருக்கிறவங்க இதை பண்ண முடியாது, அதை பண்ண முடியாதுன்னு நிறைய பேரு சொல்லுவாங்க. அதையெல்லாம் நீங்க கேட்காதீங்க. விடாமுயற்சியோடு ட்ரை பண்ணிட்டே இருங்க. நம்மால் அச்சீவ் பண்ண முடியும் என்று அந்த வீடியோவில் தனுஷ் தன்னம்பிக்கையோடு பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications