இப்பவும் இளமையா இருக்க காரணம் இதுதான்! அந்த ஹேர் ஸ்டைல் ரகசியம்.. மனம் திறந்த ராம்கி
சென்னை: நடிகர் ராம்கி, "லக்கி பாஸ்கர்" திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு அவர் பற்றிய தேடல்கள் இணையத்தில் அதிகமாக இருந்து வரும் நிலையில், தான் இன்னும் இளமையாக இருப்பதற்கு காரணம் என்ன என்பது பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
நடிகர் ராம்கிக்கு 62 வயது ஆகிறது ஆனால் இப்போதும் செந்தூரப்பூவே திரைப்படத்தில் பார்த்த அதே போலவே இருக்கிறார். இவரை பார்ப்பவர்கள் பலருக்கும் இவருக்கு மட்டும் வயதாகாதா? என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

பிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் படித்து, சிலம்பம், குதிரையேற்றம், நடனம் என பல கலைகளை கற்று துணை இயக்குநர் ஆனவர் ராம்கி. 1980களின் இறுதியில், ஹீரோவாக அடியெடுத்து வைத்தார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, அதில் சுமார் 20 படங்களுக்கும் மேல் 100 நாள் விழாவை கண்டவர்தான் இந்த மல்டி டேலன்டட் நடிகர்.
பிரேக்கிற்கு பிறகு இப்போது தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும், துல்கர் சல்மானுடனான, லக்கி பாஸ்கர் திரைப்படத்திற்கு பிறகு இவரை பலரும் பாராட்டி வருகிறார்கள். லக்கி பாஸ்கர் படத்தில் இவரை முதலில் ரசிகர்கள் வேறு மாதிரி பார்த்தாலும், பிறகு அடடே ராம்கி மட்டும் இல்லைன்னா நம்ம பாஸ்கர் என்னவாயிருப்பானோ, நண்பன்னா இப்படி ஒருத்தர் இருக்கனும் என சொல்ல வைத்திருக்கும் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ராம்கி. இப்படி ஒரு நபர் நம்முடைய வாழ்க்கையிலும் வந்தால் நம்முடைய வாழ்க்கையே மாறிவிடும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.
சின்ன பூவே மெல்ல பேசு என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். படத்தில் பிரபுவும் உண்டு. முதல் படமே 100 நாட்களை கடந்து ஓடியது.

அதற்கு பிறகு செந்தூரப்பூவே, மருதுபாண்டி, இணைந்த கைகள் என்று ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய பரிணாமத்தை கூட்டிக் கொண்டே வந்தார். அதனாலேயே இவருக்கும் அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். குறிப்பாக அப்போதைய இளம் பெண்களுக்கு இவர் மீது ஒரு கிரேஸ் இருந்தது. அதிலும் இவருடைய தலைமுடிக்கு என்று அதிகமான ஃபேன்ஸ் உண்டு. இப்ப கூட அவருடைய ஃபிட்னஸ மாறவில்லையே என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது.
இது பற்றி சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் நான் இப்போதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் டயட் மற்றும் உடற்பயிற்சி தான். அதை முறையாக தினமும் செய்து விடுவேன். அதுபோல என்னுடைய தலைமுடி பற்றி பலரும் கேள்வி கேட்கிறார்கள், இது பரம்பரையாக வந்தது.

அதுபோல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயதில் தலைமுடியிலும், உடலிலும் மாற்றம் ஏற்பட செய்யும். எனக்கும் அதுபோல மாற்றம் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதை பராமரிப்பதன் கஷ்டம் எனக்கு மட்டும்தான் தெரியும். மற்றபடி நான் தலைமுடிக்காக பெரிய ரிஸ்க் எடுத்தது கிடையாது. அது ஜெனிடிக்காக வந்ததுதான் என்று சிரித்தபடியே ராம்கி கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications