மிகவும் வேதனையான கட்டத்தை கடக்கிறேன்.. தனது அம்மா குறித்து திடீர் பதிவு வெளியிட்ட சத்யராஜ் மகள்
சென்னை: நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய அம்மாவின் உடல்நிலை குறித்து சமூக வலைதள பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
பல சினிமா பிரபலங்களின் குழந்தைகள் அவர்களை போல சினிமாவில் நடிப்பதில்லை. ஆனாலும் அவர்களும் சமூக வலைத்தளத்தில் பிரபலங்களாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யாவும் ஒருவர். இவர் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.

திவ்யா சத்தியராஜ் ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வரும் நிலையில் உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான பதிவுகளை தன்னுடைய சமூக வலைத்தளங்களின் மூலமாக பலருக்கும் தெரிவித்து வருகிறார். இதனால் ரசிகர்களின் பாராட்டையும் பெறுகிறார். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய அம்மா கோமாவில் இருக்கும் அதிர்ச்சிகரமான செய்தியை பகிர்ந்து இருந்தார்.
அதற்கு பிறகு பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில் தன்னுடைய அம்மாவின் தற்போதைய நிலை குறித்து தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் என்னுடைய அம்மாவின் உடல்நிலை பிரச்சனையால் கடந்த சில ஆண்டுகள் எங்களுக்கு மிகுந்த சவாலான காலகட்டமாக அமைந்தது.
எங்கள் வீட்டிலேயே தீவிர சிகிச்சை பிரிவு போன்றதொரு அமைப்பை ஏற்படுத்தி கோமா நிலையில் உள்ள எனது அம்மாவை கவனித்து வருகிறோம். இது கடினமான விஷயம். எனது பெற்றோர்களை பாதுகாக்க இந்த உலகில் எதையும் மாற்றி அமைப்பேன். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் வலியும் வேதனையும் மிகுந்ததொரு காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறேன்.

நான் ஒரு ஊட்டச்சத்து மருத்துவ நிபுணராக இருப்பதால் என்னை முன்னோக்கி செல்ல இது உந்து சக்தியாக அமைந்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள சமூகப் பிரிவினருக்கு சத்தான உணவுகள் கிடைக்க தொண்டு நிறுவனம் ஒன்றை நான் தொடங்கியுள்ளேன். இந்த செயலியின் மூலம் எனக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. நான் இயல்பாக மாறவும் உதவி உள்ளது. எதை கண்டும் அச்சப்பட வேண்டாம் என்பதை இப்போது உணர்ந்துவிட்டேன்.
இருள் சூழ்ந்த இந்த நெடிய சாலையில் சிறு வெளிச்சத்தை என்னால் பார்க்க முடிகிறது. அதை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த இடத்துக்கு விரைவில் சென்று அடைவேன். அப்போது நான் அந்த நல்ல செய்தியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இவருடைய நல்ல செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். அதோடு அவருடைய அம்மாவின் உடல்நிலை விரைவில் குணமாகி அவர் பழைய நிலைக்கு வர வேண்டும் என்று பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்தும் வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
