மலையாள சினிமாவில் ஹீரோவாகும் காமெடி நடிகர் சிவராமனின் மகன்.. உழைப்புக்கு கிடைத்த வெற்றி
சென்னை: தமிழ் சினிமாவில் இத்தனை வருடங்களாக நமக்கு தெரிந்த முகம்.. ஆனால் பெயர் மட்டும் பலருக்கும் தெரியாமல் போயிருக்கலாம். பேட்ட, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்த ஆதேஷ் பாலா இப்போது மலையாள சினிமாவில் கதாநாயகனாக தனது அடுத்த கட்டத்தை தொடங்கி இருக்கிறார்.
சினிமாவில் சில நடிகர்களை பார்த்தவுடன் முகம் நமக்கு நன்றாக தெரியும். இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே? என்று தோன்றும். ஆனால் பெயர் மட்டும் சட்டென்று நினைவுக்கு வராது. அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர்தான் ஆதேஷ் பாலா. இவர் வேறு யாரும் இல்லை 80ஸ் களில் காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்த நடிகர் சிவராமனின் மகன்தான். அப்பாவை போலவே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று நினைத்த ஆதேஷ் பாலா அப்பா பெயரை சொல்லி வாய்ப்பு தேடாமல் தன்னுடைய திறமையால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார்.

நடிகர் ஆதேஷ் பாலா
ஆதேஷ் பாலா இதுவரைக்கும் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தாலும் இப்போது மலையாள சினிமாவில் கதாநாயகனாக என்ட்ரி ஆகியிருக்கிறார். இது அவருடைய 100வது படம். இதற்கு முன்பு முண்டாசுப்பட்டி, கோவில், மண்ணின் மைந்தன், மலைக்கோட்டை, இங்கிலீஷ் காரன், குருவி, பேட்ட என பல படங்களில் அவருடைய முகத்தைப் பார்த்து இருக்க முடியும். ஆனால் இவர் நடிகர் சிவராமனின் மகன் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நடிகர் சிவராமன்
நடிகர் சிவராமன் விஜயகாந்த், பாக்யராஜ் போன்ற பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தூரல் நின்னு போச்சு, இன்று போய் நாளை வா, பவுனு பவுனுதான், செந்தூரபூவே என 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இப்போது அவரின் மகன் மலையாள சினிமாவில் "ரகு ராம்" படத்தில் ஹீரோவாக நடிக்கும் நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சைனு சாவக்காடன் இயக்கியுள்ள ரகு ராம் படம் ஆக்ஷன்,ஹாரர், த்ரில்லர் பிண்னணியில் உருவாகியுள்ளது. படத்தின் கதையில் தென் கேரளாவில் இருக்கும் பழமையான ஒரு மாளிகை, தீய சக்திகள், அந்த குடும்பத்தின் சாபம் என வித்தியாசமாக கதை நகர்கிறது. இந்தப் படத்தில் ஆதீஷ் பாலா ரகு ராம் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். அவருடன் ராதாரவி, ஆதிஷ்வா மோகன் சம்பத் ராம் அரவிந்த் வினோத் சார்மிளா, ரெய்னா பாரிக்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரகு ராம் படம்
அதுபோல படத்தின் கதை திரைக்கதை மற்றும் வசனங்களை சுதீர் சி. சக்கனாட்டு எழுதியுள்ளார். ஒளிப்பதிவை ரஞ்சித் புன்னப்புறா, சந்து மேப்பாயூர் ஆகியோர் கவனித்துள்ளனர் இசை சாய் பாலன் எடிட்டிங் டிராகன் ஜிரோஷ் செய்கிறார். கேப்டன் வினோத் தயாரித்துள்ளார். Celastia Productiona நிறுவனத்தின் சார்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
ரிலீஸ் தேதி
இந்த படம் 2026 பிப்ரவரி 6ஆம் தேதி மலையாளத்தில் வெளியாக இருக்கிறது. மலையாளத்திலிருந்து பல நடிகர்கள் தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் தமிழில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து இப்போது மலையாளத்தில் ஹீரோவாக ஆதீஷ் பாலா அறிமுகம் ஆவது பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

உழைப்புக்கு கிடைத்த பலன்
சினிமா குடும்பத்தில் பிறந்த பலருக்கு சினிமாவில் உடனே வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை, அதுபோலத்தான் ஆதீஷ் பாலாவிற்கும் நடந்திருக்கிறது. பல வருடங்களாக மற்ற நடிகர்களின் பின்னால் நிற்கும் காட்சிகளில் நடித்துக் கொண்டிருந்தவர் இன்று தன்னுடைய பெயரில் ஒரு படத்தின் போஸ்டரின் நடுவில் நிற்கிறார். ஒரு காலத்தில் இந்த படத்தில் அந்த சின்ன கேரக்டரில் நடித்தாரே என்று அடையாளப்படுத்தப்பட்ட ஆதேஷ் பாலா இப்போது ரகு ராம் படத்தின் ஹீரோ என்று சொல்லும் அளவிற்கு அவருடைய சினிமா பயணம் வளர்ந்திருக்கிறது. அவருடைய படம் வெற்றி பெற நம்முடைய சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
