100 கோடி பாக்ஸ் ஆபீஸில் இணைந்த சூரி.. மண்டாடி வசூல் சொல்வது இதுதான்!
சென்னை: சினிமாவில் ஒரு நடிகருடைய பயணத்தை பார்த்தால் சில வெற்றிகள் சாதாரண வெற்றியாக இருக்காது. அந்த வெற்றிக்கு வந்த பிறகு அவரை சினிமா பார்க்கும் விதமே மாறிவிடும். சூரிக்கு இப்போது அப்படி ஒரு தருணம் வந்திருக்கிறது. காமெடி நடிகராக பல வருஷங்கள் ரசிகர்களை சிரிக்க வைத்த சூரி விடுதலை படத்தில் கதையின் நாயகனாக களம் இறங்கிய போது சூரி ஹீரோவா என்று கேட்டவர்களும் இருந்தார்கள். ஆனால் அந்த கேள்விக்கு அவர் ஒவ்வொரு படமாக பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.

அடுத்தடுத்து வெற்றி
கருடன், மாமன் என்று அந்த பயணம் தொடர்ந்த நிலையில் இப்போது மண்டாடி அவரை 100 கோடி வசூல் படத்தின் கதாநாயகனாக கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. இதுதான் அந்த வசூல் செய்தியில் இருக்கும் மிகப்பெரிய விஷயம். மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான மண்டாடி செப்டம்பர் 10ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. சூரியுடன் மஹிமா நம்பியார், சுகாஷ், சத்யராஜ், ரவீந்திர விஜய், மிதுன் ஜெய்சங்கர், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
மண்டாடி கதை
ராமநாதபுரம் கடலோர மக்களின் வாழ்க்கை அவர்களுடைய பாரம்பரிய பாய்மர படகு போட்டி ஆகியவற்றை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் வழக்கமான ஹீரோ படம் மாதிரி இல்லாமல் கடல், படகு, போட்டி, ஊர் வாழ்க்கை என்று வேறொரு களத்தில் சூரியை பார்க்க முடிந்தது. முதல் சில நாட்களிலேயே படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 5 நாட்களில் உலக அளவில் 65 கோடியை கடந்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மண்றாடி 100 கோடி வசூல்
அதன் பிறகு 8வது நாளில் 80 கோடியை கடந்ததாக மீண்டும் அறிவிப்பு வந்தது. அங்கிருந்த எல்லோருடைய கண்களும் ஒரே எண்ணை நோக்கி தான் இருந்தது. அது 100 கோடி. முதல் முறையாக சூரி 100 கோடி கிளப்புக்குள் போகிறாரா? என்ற பேச்சு ஓடிக்கொண்டிருந்த நிலையில் இப்போது அந்த எண்ணையும் படம் தொட்டுவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சூரிக்கு இது வெறும் இன்னொரு வெற்றி இல்லை, ஏனென்றால் சூரி சினிமாவுக்கு வந்த பாதையும் கொஞ்சம் திரும்பி பார்த்தாலே இந்த 100 கோடியின் முக்கியத்துவம் புரியும்.
புதிய மைல்கல்
பல வருஷங்களாக ஹீரோக்களுக்கு பின்னாடி நின்று நின்று கொண்டிருந்தார். பிறகு ஹீரோ பக்கத்தில் நின்றார். இப்போது ஹீரோவாகவே அவர் மாறிவிட்டார். சூரி சினிமாவுக்குள் வந்தபோது அவருக்கு முன்னால் இருந்தது மற்ற ஹீரோக்களின் நிழல். இப்போது அந்த நிழலில் இருந்து வெளியே வந்து தனக்கென்று ஒரு பாக்ஸ் ஆபீஸ் அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார். அதனால் தான் மண்றாடியின் 100 கோடி என்பது வெறும் ஒரு போஸ்டரில் போடப்பட்ட எண்ணாக மட்டும் பார்க்காமல் நடிகரிலிருந்து கதையின் நாயகனாக மாறிய சூரியின் பயணத்தில் இன்னொரு பெரிய மைல்கள் என்று பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications
