அங்க போகாதேப்பான்னு அம்மா, அப்பா கூட சொன்னாங்க! ஆனா நான்தான்.. தழுதழுத்த நடிகர் விஷால்
சென்னை: என் கைகள் இப்போது நடுங்கவில்லை. நான் சரியாக மைக்கை பிடித்துள்ளேன். மேலும் என் அம்மா அப்பா கூட புரமோஷன் நிகழ்ச்சிக்கு போக வேண்டாம் என்றார்கள், அதையும் மீறி நானாகத்தான் வந்தேன் என நடிகர் விஷால் உணர்ச்சிபொங்க பேசினார்.
விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் மதகஜராஜா என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இது 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம். எனினும் ஏதோ சில காரணங்களால் ரிலீஸ் செய்ய முடியாமல் போன நிலையில் தற்போது 13 ஆண்டுகள் கழித்து ரிலீஸ் செய்யப்படுகிறது.

இதற்கான ஸ்பெஷல் காட்சி நேற்றைய தினம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வுக்கு நடிகர் விஷால் வந்திருந்தார். அவர் பழைய நிலையில் இருந்ததை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு மதகஜராஜா புரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்த அவர், கைகள் நடுங்கியது. முகமும் வீக்கமாக இருந்தது. அவர் பேசிய போது குழறியது. இதனால் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் குழம்பினர். பிறகு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திவ்யதர்ஷினி வந்து, விஷாலுக்கு அதிக காய்ச்சல் என்பதால் அவருக்கு உடல்நிலை பிரச்சினைகள் இருப்பதாக கூறினார்.
ஆனால் இதை யாருமே நம்பவில்லை என்றுதான் தெரிகிறது. காய்ச்சல் என்றால் உடல் சோர்வாக இருக்குமே தவிர கைகள் மட்டும் எப்படி நடுங்கும் என கேள்வி எழுந்தது. இதனால் விஷாலுக்கு என்ன ஆச்சு என சமூகவலைதளங்கள் முழுக்க கேள்வி எழுந்தது.
விஷாலுக்கு நரம்பு பிரச்சினை, அந்த பிரச்சினை, இந்த பிரச்சினை என ஆளாளுக்கு உறுதிப்படுத்தப்படாத விஷயங்களை விவாதித்து வந்தனர். இதனிடையே அப்பல்லோ மருத்துவமனையும் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் என அறிக்கை விட்டது.
இந்த நிலையில் நேற்றைய தினம் மதகஜராஜா திரைப்படத்திற்கு விஷால் வந்ததை பார்த்தவர்கள் நிம்மதி அடைந்தனர். இந்த விழாவில் விஷால் பேசுகையில், அன்றைய தினம் எனக்கு வைரஸ் காய்ச்சல் அதிகமாக இருந்தது.
அதனால்தான் என் கைகள் நடுங்கின. என் அம்மா, அப்பா கூட நிகழ்ச்சிக்கு போக வேண்டாம் என சொன்னார்கள். ஆனால் நான்தான் சுந்தர் சி-க்காகவும் படத்திற்காகவும் வந்தேன். அப்போது எல்லாரும் என் மீது காட்டிய அன்பை பார்த்து கலங்கினேன். நீங்கள் காட்டிய அன்பை நான் மறக்கவே மாட்டேன்.
நான் எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லஸை. தன்னம்பிக்கைதான் எனது பலம். எத்தனை சர்ச்சை வந்தாலும் அதையெல்லாம் தாண்டி வருவேன்.
நிலநடுக்கம் வந்தா எப்படி பரபரப்பாகுமோ அது போல் என் கை நடுக்கம் வந்ததால் பரபரப்பு ஆகிடுச்சி. இப்போது என் கை நடுங்கவில்லை, பாருங்க, சரியாக மைக்கை பிடித்துள்ளேன் என கலங்கியபடி பேசினார்.
புரமோஷன் நிகழ்ச்சியில் சுந்தர் சி பேசுகையில், மதகஜராஜா படத்தின் சண்டை காட்சியில் விஷாலின் தலை தரையில் ஓங்கி அடித்ததால் நான் அஞ்சினேன். பிறகு அவர் சர்வசாதாரணமாக வந்தார். இந்த படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக அவர் உணவே அருந்தாமல் வெறும் தண்ணீரை மட்டும் அருந்திக் கொண்டிருந்தார் என சொன்னதும் அங்கிருந்த விஷால் கலங்கினார். குஷ்புவும் விஷால் குறித்து உருக்கமாக பேசினார்.
13 ஆண்டுகள் கழித்து பொங்கல் அன்று இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மணிவண்ணன், மனோபாலா, சந்தானம் என காமெடியன்கள் எல்லாம் இந்த படத்தில் இருப்பதால் சிரித்து சிரித்து வயிறு புண்ணாக போவது நிச்சயம்!












Click it and Unblock the Notifications