காதலர் தினத்தில் திருமண தேதியை அறிவித்த பாவனி-அமீர்..பிக் பாஸ் பிரபலங்கள் கொடுத்த சர்ப்ரைஸ் கமெண்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5வது நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகை பாவனி ரெட்டி மற்றும் டான்ஸ் மாஸ்டர் அமீர் இருவரும் தங்களுடைய காதலை மூன்று வருடங்களாக தொடர்ந்து வந்த நிலையில் தற்போது தங்களின் திருமண தேதியை அறிவித்திருக்கிறார்கள். இந்த ஜோடிக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி உருவாக்கி விடுகின்றனர். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் உருகி உருகி காதலித்தாலும் வெளியே வந்து நீ யார் நான் யார் என்பது போல கண்டுகொள்ளாமல் பிரிந்து போன காதல் கதை ஏராளமாக உண்டு. உள்ளே டிஆர்பிக்காக இவர்கள் காதலிக்கிறார்களா? அல்லது நிஜத்தில் இவர்கள் காதலிக்கிறார்களா? என்பது புரியாமலே ரசிகர்களும் அவர்களுக்கு மாறி மாறி ஓட்டுக்களை வழங்கி வருவதை பார்த்து இருப்போம்.

ஆனால் ஒரு சில ஜோடிகள் மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் காதலை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் பாவனி மற்றும் அமீர் இருவரும் இணைந்து இருக்கிறார்கள். பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பாவனி கலந்து கொண்டதும் அவருக்கு இணையத்தில் அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.
ஏற்கனவே பாவனி போட்டோ ஷூட் மூலமாக இளைஞர்களின் கனவு கன்னியாக தான் திகழ்ந்து வந்தார். அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் சின்னத்தம்பி உட்பட ஒரு சில சீரியல்களிலும் நடித்து குடும்ப ரசிகர்கள் பலருக்கும் பரிச்சயமானவராக இருந்தார். அந்த நேரத்தில் அவருடைய முதல் கணவர் இறப்பு, அதற்குப் பிறகு அவர் பட்ட கஷ்டங்கள் குறித்து பிக் பாஸில் பேசியது இவருக்கு அனுதாப அலை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக அமீர் கலந்து கொண்டார். முதல் சில வாரங்கள் அமைதியாக இருந்த அமீர் அதற்கு பிறகு பாவனி பின்னாடி சுற்ற தொடங்கி விட்டார். பாவனியை காதலிக்கிறேன் என்று நிகழ்ச்சியில் வெளிப்படையாக சொல்லி இருந்தார். ஆனால் பாவனி அப்போது அவருக்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் பிக் பாஸ் டான்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர். பிறகு டைட்டில் ஜெயித்ததும் பாவனி தன்னுடைய காதலை அமீரிடம் சமூக வலைத்தளம் மூலமாக தெரிவித்து இருந்தார். பிறகு இந்த ஜோடி 3 வருடங்களாக காதலர்களாக சுற்றி வருகின்றனர். அவர்களுடைய திருமணம் எப்போது என்பது இவர்களின் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.
இந்த நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு பாவனி மற்றும் அமீர் இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் மூன்று வருடங்களாக இவர்களுக்குள் இருந்த காதல், சண்டை, கோபம் என பல விஷயங்களையும் பகிர்ந்து இருக்கிறார்கள்.
அதோடு தங்களுடைய திருமண தேதியையும் அறிவித்திருக்கிறார்கள் அதாவது வரும் ஏப்ரல் 20ஆம் தேதி தங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.. என்னுடைய எங்களுடைய பயணத்தை முழு மனதோடு தொடர போகிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள். இவர்களுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார்கள்.
அதிலும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான ராஜு, பாவனியின் மனதிற்குள் ஒலிக்கும் ரஜினியின் வாய்சை கேட்க முடியாது என்று கிண்டல் செய்து இருக்கிறார். அது போல பிரியங்கா, நிரூப், சிபி உட்பட பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications