போட்டோவில் இருந்த வராஹி அம்மன் பிரசாதத்தை குடித்தார்! மகனால் உயிர் பிழைத்தேன்! நடிகை தீபா பாபு உருக்கம்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் 'அன்பே சிவம்', 'அத்திப்பூக்கள்', 'நாம் இருவர் நமக்கு இருவர்' உள்ளிட்டப் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தீபா பாபு. திரையில் அமைதியான கதாபாத்திரங்களில் தோன்றும் இவர், தனது நிஜ வாழ்க்கையில் பலப் போராட்டங்களையும், சோகங்களையும் கடந்து வந்திருக்கிறார். சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தனது முதல் திருமணம் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார். அதேபோல தன்னுடைய வீட்டில் வராஹி அம்மன் புகைப்படத்திற்கு தான் பிரசாதம் வழங்கிய போது நடந்த சம்பவம் குறித்தும் பேசி இருக்கிறார்.

தவறான திருமணம்
தீபா பாபுவின் திருமண வாழ்க்கை சின்னத்திரை வட்டாரத்தில் பெரியளவில் பேசப்பட்டது. கடந்த ஆண்டு, 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மற்றும் 'பாக்கியலட்சுமி' சீரியல்களில் தயாரிப்பு மேலாளராகப் பணியாற்றிய சாய் கணேஷ் பாபு என்பவருடன், தனது சிறுவயது மகனுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தனது முதல் திருமணம் குறித்து அவர் உருக்கத்துடன் பேசியுள்ளார்:
"நான் 14 வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். ரொம்ப வருஷமா கலையுலகில் இருந்ததால் எனக்கு எதுவும் பெரிதாக தெரியவில்லை. ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, இயக்குநர் வெங்கட் பிரபு ஹீரோவாக நடிக்கவிருந்த 'வசந்தம் வந்தாச்சு' படத்தின் தயாரிப்பாளர் என்னை பார்த்து, நடிக்க வைக்கலாமா எனக் கேட்டார். சீரியலில் நடிக்க வந்தபோது பாசிட்டிவ், நெகட்டிவ் என இருபக்கமும் விமர்சனங்கள் வந்தன."
"எனக்கு 17 வயதில் திருமணம் நடந்தது. ரொம்ப தப்பான வயசுல, தப்பான ஆளை, தப்பான நேரத்துல கல்யாணம் பண்ணிட்டேன். என்னோட விருப்பத்தின் பேரில் வீட்டில் உள்ளவர்களின் விருப்பத்துக்கு மாறாக என் கல்யாணம் நடந்தது. அந்த தப்புல கடவுள் கொடுத்த பொக்கிஷம் தான் என்னோட பையன்." "கல்யாணம் ஆன 3வது நாளே எடுத்த முடிவுத் தப்பு எனத் தெரிய வந்தது. என்னை கணவர் அடித்து, 'தாலியை அறுத்து போடு'ன்னு துரத்தி விட்டாரு. ஆனால், வந்துட்டேன், வாழ்ந்துட்டேன், திரும்பப் போய் யாரையும் எதிர்நோக்கும் தைரியம் எனக்கு இல்லை. நான் போகமாட்டேன் என இருந்தேன். அப்புறம் நான் கர்ப்பமாக இருந்ததால் என் அப்பா, அம்மா எதுவும் சொல்ல முடியாமல், இதுதான் விதி என்றால் இருக்கட்டும்னு சொல்லி விட்டார்கள். இப்போ நான் உயிரோட இருக்கக் காரணம் என் பையன் தான்."
சீரியல் ஆதரவு
"கல்யாணம் ஆன ஒரு வருசத்துலப் பையன் பிறந்துட்டான். ஆனால், அந்த நேரம் கூடக் கலையுலகம் என்னைக் கைவிடவில்லை. அந்த நேரத்தில் சன் டிவியில் 'அத்திப்பூக்கள்' சீரியலில் நடித்து வந்தேன். அதில் தோழி கேரக்டரில் நடித்தேன். அதில் என் பையனை நடிக்க வைத்தேன். அப்போதுக் குழந்தை பிறந்து 2 மாதங்கள் தான் ஆனது. அவனது பணத்தில் தான் நாங்கள் சாப்பிடும் நிலை இருந்தது" என்றுத் தனது சோகமான வாழ்க்கையைப் பகிர்ந்துள்ளார்.

வராஹி அம்மன் தரிசனம்
தீபா பாபு, தான் ஒரு தீவிரமான கடவுள் பக்தி உள்ளவர் என்றும், தனது வாழ்க்கையில் நடந்த ஒரு மறக்க முடியாத சம்பவத்தையும் பகிர்ந்து, இணையத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளார். அவர் தொடர்ச்சியாக 40 நாட்கள் வராஹி அம்மனுக்கு விரதம் இருந்து பூஜை செய்தாராம். அதன் பலனாக, அவர் வீட்டில் வைத்திருந்த வராஹி அம்மன் புகைப்படத்திற்குத் தான் ஊட்டிய பிரசாதத்தை, அந்தக் கண்ணாடி புகைப்படத்தில் இருந்த அம்மனே சாப்பிட்டாராம்.
கண்முன் நடந்த அற்புதம்
தீபா பாபுவும், அவருடையத் தோழியும் சேர்ந்து பூஜை செய்து கொண்டிருந்தபோது, ஒரு கப் நிறையப் பிரசாதத்தை வைத்து பிரசாதத்தை ஸ்பூனில் வராஹி அம்மன் புகைப்படத்திற்கு ஊட்டிவிட்டிருக்கிறார். அப்போது, அந்தப் புகைப்படத்தில் இருந்த வராஹி அம்மன் அந்த பிரசாதத்தைக் குடித்ததாகவும், ஒரு டம்ளர் முழுக்க காலியானதாகவும் அது கீழே ஒரு சொட்டு கூட சிந்தாமல் முழுவதும் குடித்துவிட்டதாகவும் அவர் நெகிழ்ச்சியோடுப் பேசியிருக்கிறார்.

இன்ப அதிர்ச்சி
தான் ஸ்பூனில் கொடுக்கும்போதுக் குடித்ததைப் பார்த்துத் தான் ரொம்பவும் அதிர்ச்சி அடைந்ததாகவும், அதைத் தன்னுடையத் தோழியிடம் சொன்னபோது, அவரும் அதே போல ஸ்பூனில் ஊட்டும்போது முழுமையாக வராஹி அம்மன் குடித்துவிட்டார் என்றுச் சொல்லி இருக்கிறார். 'வீட்டில் சிலை வைத்துப் பூஜை செய்தபோது சிலை பிரசாதத்தை உட்கொண்டதாகச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், என்னுடைய வீட்டில் கண்ணாடிக்குள் புகைப்படமாக இருந்த வராஹி அம்மன் தான் கொடுத்தப் பிரசாதத்தை என் கண்முன்னேக் குடித்தது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது' என்று அவர் பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிலர் இதை 'தெய்வ அருள்' என்று சொல்லி வரும் நிலையில், இன்னும் சிலரோ இதை 'மூடநம்பிக்கை' என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தனது சோகமான வாழ்க்கை போராட்டத்தைக் கடந்து வந்த தீபா பாபு, இதுபோன்ற ஆன்மீக அனுபவங்கள் தான் தன்னைக் காப்பாற்றியதாக நம்புகிறார்.












Click it and Unblock the Notifications