Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனோரமா வீட்டில் மீண்டும் அக்டோபர் மரணம்: தற்கொலை முயற்சி, நடிப்பில் தோல்வி! ஆச்சி மகனின் மறுபக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் திரையுலகின் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்ட நடிகை மனோரமாவின் ஒரே மகனும், நடிகருமான பூபதி இன்று (அக்டோபர் 23- 2025) காலை 10.40 மணிக்கு உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் காலமானார். அவரது வயது 70 ஆகும். ஆச்சி மனோரமா கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அதே அக்டோபர் மாதத்தில் அவரது மகனும் மறைந்தது மனோரமாவின் ரசிகர்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Manorama Boopathy

மனோரமா: நிகரில்லா நடிப்பு சக்கரவர்த்தி

நடிகை மனோரமா தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கும் மேல் நடித்துச் சாதனை படைத்த ஒரே நடிகை என்ற பெருமையைப் பெற்றவர். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டப் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து எண்ணற்றப் படங்களில் நடித்தவர். 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் ஜில் ஜில் ரமாமணியாக நடித்து ஒட்டுமொத்தத் தமிழ் சினிமா ரசிகர்களையும் சிரிப்பலையில் ஆழ்த்தினார்.

'சம்சாரம் அது மின்சாரம்' படத்தில் விசுவே வியந்து பாராட்டும் நடிப்பை வழங்கினார். 'அண்ணாமலை' படத்தில் ரஜினிகாந்துக்கு அம்மாவாக மனோரமா நடித்த நடிப்பை யாராலும் மறக்க முடியாது. அதுபோல நாட்டாமை படத்தில் பலருடைய அனுதாபத்தையும் பெற்றுவிட்டார். இன்றளவும் நகைச்சுவை உலகில் அவரது இடத்தை நிரப்ப ஒருவரால் கூட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பூபதியின் சினிமா பயணம்: சோக பக்கம்

மனோரமாவிற்கு பூபதி பிறந்த சில நாட்களிலேயே அவருடைய கணவர் அவரை பிரிந்து சென்று விட்டார். அதற்குப் பிறகு தன்னுடைய ஒரே மகனுக்காக தன் மொத்த வாழ்க்கையையும் மனோரமா தியாகம் செய்திருந்தார். தனது ஒரே மகனான பூபதியை எப்படியாவது சினிமாவில் ஒரு பெரிய நடிகராக மாற்ற வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்தார். பூபதி, தனது தாயார் மனோரமாவுடன் இணைந்து 'தூரத்து சொந்தம்' படத்தில் நடித்துச் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர், சரணம் ஐயப்பா, காஷ்மீர் காதலி, குடும்பம் ஒரு கதம்பம் மற்றும் மணல் கயிறு எனச் சுமார் 5 படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.

தோல்வியின் காரணம்

மனோரமாவின் முயற்சிகள் அனைத்தும் வீணாகி, பூபதியால் சினிமாவில் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை. பூபதி மதுவுக்கு அடிமையான நிலையில், சினிமாவில் இருந்து விலகி வாழ்ந்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. கொரோனா காலக்கட்டத்தில் மது கிடைக்காத விரக்தியால் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை, அவரது குடும்பத்தினர் போராடி காப்பாற்றிய செய்தி அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.

Manorama Boopathy

குடும்ப வாழ்வில் பூபதியின் வெற்றி

சினிமாவில் தோல்வியைச் சந்தித்தாலும், குடும்ப வாழ்க்கையில் பூபதிக்கு அமைந்த மனைவி மற்றும் குழந்தைகள் அருமையானவர்கள். தனலட்சுமி என்பவரைத் திருமணம் செய்துகொண்ட பூபதிக்கு ராஜராஜன், அபிராமி மற்றும் மீனாட்சி என 3 குழந்தைகள் உள்ளனர். பூபதியின் மூன்று குழந்தைகளும் தற்போது மருத்துவத் துறையில் சாதித்து வருகின்றனர். ராஜராஜன் MS Ortho மருத்துவராகவும், அபிராமி M.Sc Psychology மற்றும் மீனாட்சி M.Phil Corporate Secretaryship ஆகிய உயர் கல்விப் பெற்றுள்ளனர். மகனின் நடிப்பில் தாய் மனோரமா கண்ட கனவு நிறைவேறாவிட்டாலும், பேரக் குழந்தைகள் மருத்துவத் துறையில் சாதிப்பது ஆறுதல் அளிக்கிறது.

கண்ணீருடன் இறுதிச் சடங்கு

நடிகை மனோரமாவின் மகன் பூபதியின் இறுதிச் சடங்குகள் நாளை (அக்டோபர் 24) மாலை 3 மணியளவில் கண்ணம்மாபேட்டையில் நடைபெறவுள்ளது. திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவரது மறைவுக்குத் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+