வாரணம் ஆயிரத்தில் சிம்ரன் ரோலுக்கு கவுதம்மேனன் கேட்டார்! 7 முறை தற்கொலைக்கு முயன்றேன்! மோகினி பகீர்
சென்னை: என் வாழ்க்கையில் நான் 7 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளேன் என நடிகை மோகினி பகீர் தகவலை தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக அவர் சில டிவி சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில் அவர் எப்படி தற்கொலை முயற்சியில் இருந்து மீண்டு வந்தார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

மோகினி, 90-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர்.
மோகினியின் இயற்பெயர் மகாலட்சுமி. 1991 ஆம் ஆண்டு வெளியான 'ஈரமான ரோஜாவே' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மட்டுமல்லாமல், மலையாள திரையுலகிலும் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
திருமணம்
தமிழில் கார்த்திக், பிரசாந்த், சிவாஜி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். 1999 ஆம் ஆண்டில் பரத் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் குடியேறினார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இந்தியா வந்துள்ள மோகினி ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
மகிழ்ச்சியான குடும்பம்
அதில் அவர் கூறுகையில், எனக்கு திருமணமான பிறகு குழந்தை, கணவர் என மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் நான் ஏதோ ஒருவிதமான மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்படுவதை தெரிந்து கொண்டேன். எனது வாழ்க்கையில் தவறாக எதுவும் நடக்கவில்லை, ஆனால் நான் மன அழுத்தத்திற்கு ஆளானேன்.
ஜோதிடர் சொன்ன பகீர் தகவல்
ஒரு கட்டத்தில் தற்கொலைக்கும் முயற்சி செய்தேன். ஒரு முறை அல்ல, 7 முறை நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன். அப்போது நான் ஒரு ஜோதிடரை சந்தித்தேன். அவர் எனக்கு சூனியம் வைத்து இருப்பதாக சொன்னார். அதை கேட்டு முதலில் எனக்கு சிரிப்பு வந்தது.
7 முறை தற்கொலை முயற்சி
பிறகு தற்கொலைக்கு செல்ல வேண்டிய காரணம் என்ன என்பதை யோசித்தேன். அதன் பிறகுதான் அதிலிருந்து வெளிப்படுவதற்கான முயற்சிகளை எடுத்தேன். அதற்கு எனக்கு உறுதுணையாக இருந்தது எனது ஜீசஸ்தான் என தெரிவித்துள்ளார்.
பிரசாந்துடன் திருமணம்
அவர் மேலும் கூறுகையில், நானும் பிரசாந்தும் கல்யாணம் பண்ணிக்க போறோம் என்பதுதான் என்னை பற்றி வந்த முதல் வதந்தியே! அதை கேட்டு நானும் பிரசாந்தும் "கல்யாணமா?, உன்னையா?, சான்ஸே இல்ல"னு சொல்லிகிட்டோம்.
சின்ன பசங்க நாங்க
நாங்க அப்போ ரொம்ப சின்ன பசங்க. நான் 10ஆவது முடிச்சிட்டு சினிமாவுக்குள் வந்தேன். பிரசாந்த் 12 ஆவது முடிச்சிட்டு நடிக்க வந்தார். நாங்கள் ரெண்டு பேரும் குழந்தைகள் மாதிரிதான் விளையாடிட்டு இருப்போம்.
கண்மணி படம்
பிரசாந்துடன் கண்மணி என்ற படத்தில் நடித்த போது நீச்சல் உடை அணிந்து நடிக்க சொன்னார்கள். எனக்கு அது போன்ற உடை அணிந்து பழக்கமில்லை. நான் மறுத்தேன். இதனால் அரை நாள் படப்பிடிப்பு நின்று போனது. அதன் பிறகு தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படக் கூடாது என்பதற்காக அந்த சீனில் நான் நடித்தேன். அத்துடன் முடியவில்லை. ஊட்டியில் நீச்சல் உடையில் நடிக்க வேண்டும் என கேட்டார்கள். என்ன செய்வது விருப்பம் இல்லாமல் நடித்தேன்.
வாரணம் ஆயிரம்
கவுதம் மேனன் இயக்கிய 'வாரணம் ஆயிரம்' படத்தில் சிம்ரன் நடித்த பாத்திரத்தில் நடிக்க முதலில் என்னை கேட்டார்கள். ஆனால் நான் நடிக்க மறுத்துவிட்டேன். காரணம் திருமணத்திற்கு பிறகு நான் சினிமாவில் நடிப்பதில்லை என்ற உறுதியுடன் இருந்தேன். இவ்வாறு மோகினி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
