Bad Girl Movie Review: பேட் கேர்ள் விமர்சனம்.. பெண்ணின் உலகத்தை வித்தியாசமாக பேசிய கதை!
சென்னை: (Bad Girl Movie Review) இயக்குனர் வெற்றி மாறனின் பட்டறையில் உருவான அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி பெரும் சர்ச்சைகளை சந்தித்த பேட் கேர்ள் திரைப்படம் விமர்சனம் பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

'பேட் கேர்ள்' படத்தின் கதை, ஒரு பெண்ணின் சுதந்திரத்தை மிகவும் யதார்த்தமாகப் பேசுகிறது. ஒரு பெண், தான் விரும்பியபடி வாழ வேண்டும் என்று நினைக்கும்போது, அவளுக்குக் குடும்பமும் சமூகமும் என்னென்ன தடைகளை விதிக்கின்றன என்பதை வழக்கமான சினிமா பாணியில் காட்டாமல், தனக்கான சுதந்திரத்தை அடைய, கட்டுப்பாடுகளை விதிப்பவர்களை விட்டு வெளியேற வேண்டும் என முடிவெடுத்து வெளியேறும் ஒரு பெண்ணின் கதைதான் இது. இந்தப் படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிகை அஞ்சலி சிவராமன் நடித்துள்ளார். படத்தின் முதல் ஃபிரேமில் இருந்து கடைசி ஷாட் வரை, ஒரு பெண்ணின் உலகம், அவளது மனதின் ஆழம், பருவ காலத்தில் வரும் காதல், அதன் பின்னர் பாலியல் ரீதியான உணர்வுகள் என அத்தனையையும் ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து காட்டியிருக்கிறது கேமரா.
திரைக்கதை
'பேட் கேர்ள்' படம், வெளியாவதற்கு முன்னர் பல சர்ச்சைகளையும், போராட்டங்களையும் சந்தித்தது. இப்படத்தின் இயக்குனர் வர்ஷா, இந்த கதை ஒரு பெண்ணின் வாழ்க்கையின் யதார்த்தமான பிரதிபலிப்பு என்று கூறி, படத்திற்காகத் தொடர்ந்து போராடினார். ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வர்ஷா பரத், "இன்று சமூகத்தில் பெண்களுக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அவை நியாயமற்றவை. இந்தக் கதையை ஒரு பெண் இயக்குநராகப் பேச வேண்டியது எனது கடமை. என் கதையை, என் உலகத்தை என்னைப் போல ஒரு பெண் புரிந்துகொள்ளும்போது, அது அதிக நேர்மையுடன் இருக்கும்" என்று தெரிவித்தார்.
திரைப்பட உலகில், ஒரு ஆண் இயக்குநரின் பார்வையில் இருந்து, பெண்ணின் உலகம் சொல்லப்பட்ட பல படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்தப் படம் அப்படி இல்லை. தன்னுடைய அனுபவத்தை, தான் பார்த்த உலகத்தை ஒரு பெண் இயக்குநரே படமாக்கியதால், இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக வந்துள்ளதாக விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
சமத்துவத்தை நோக்கி ஒரு சம்மட்டி அடி
படத்திற்குப் பெரிய பிளஸ் என்றால் அது அஞ்சலி சிவராமனின் அட்டகாசமான நடிப்புதான். கதாபாத்திரத்தின் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்தியுள்ளார். அமித் திருவேதியின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. பிரின்ஸ் ஆண்டர்சன் மற்றும் ப்ரீதா ஜெயராமனின் ஒளிப்பதிவு ஒரு உலக சினிமா பார்த்த திருப்தியைக் கொடுக்கிறது. இதுதான் வர்ஷாவின் முதல் படமா என்று கேட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை, அந்த அளவுக்குத் திரைக்கதையில் நேர்த்தி இருக்கிறது.
'பேட் கேர்ள்' திரைப்படம், ஒரு பெண் சுதந்திரமாக இருந்தால், சமூகம் அவளைக் குற்றவாளி என்று முத்திரை குத்தி, அவளைப் 'பேட் கேர்ள்' என்று அழைக்கத் தயங்காது என்பதைத் தைரியமாகப் பேசுகிறது. நிர்பந்திக்கப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும், சுதந்திரமும் இருக்காது; அதில் இருந்து வெளியேறினால் தான் நிம்மதியும், சுதந்திரமும் கிடைக்கும் என இந்தப் படம் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது. சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டு, 'நீ சமத்தானவள்' என்ற சான்றிதழைக் கொடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கு, ஒரு பெண் 'பேட் கேர்ள்' ஆகவே இருந்துவிட்டுப் போகட்டும் என்று இந்தப் படம் வெளிப்படையாகக் கூறுகிறது.
'பேட் கேர்ள்' திரைப்படம் வெறும் பொழுதுபோக்கு படம் மட்டுமல்ல, அது பெண்களின் சுதந்திரம் பற்றிய ஒரு bold மற்றும் தேவையான அரசியல் கருத்து.












Click it and Unblock the Notifications