ஓடியாங்க.. ஓடியாங்க.. பெத்தலகேம் குடும்ப யூனிட் படத்தை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை: மென்மையான இலவம் பஞ்சு மெத்தை.. காதுகளில் விலை உயர்ந்த ஹெட்செட்டில் 90களின் ரம்யமான பாடல்கள்.. ஜன்னல் வழியாக வரும் தென்றல் காற்று.. இரைச்சலே இல்லாத ஜில் மலைவாசஸ்தலம்.. இப்படி நீங்கள் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென உங்கள் மனதுக்கு பிடித்தமான துணை, உங்கள் உடல் மீது மயில் இறகை வைத்து உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை மெதுவாக இழுத்துச் சென்றால் எப்படி இருக்குமோ.. அப்படி ஒரு உணர்வை தருகிறது பெத்தலகேம் குடும்ப யூனிட் (Bethlehem Kudumba Unit) திரைப்படம்.
ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் அக்டோபர் 2ம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், டப்பிங்கில் பார்த்த தமிழ் ரசிகர்களும் சிலாகிக்க தொடங்கிவிட்டனர். அதன் விமர்சனம் இதோ..
25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 335 கோடி வசூல் செய்து மலையாள சினிமா வரலாற்றில் நம்பர் 1 மகுடத்தை சூட்டியபோதே இந்த படம் பற்றிய எதிர்பார்ப்பு ரொம்பவே உருவாகியது. ஆனால், சும்மா வசூல் கணக்கு காட்டியிருப்பார்கள் என உள்மனசு சொல்ல.., பிரேமலு இயக்குநர் கிரீஷ் ஏ.டி. பண்ண படமாச்சே.. நிஜமாகவே ஹிட் அடிச்சிருக்கும்ப்பா என்று இன்னொரு மனசு சொல்ல.. உறுதிப்படுத்த, நேற்று இரவு பெத்தலகேம் குடும்ப யூனிட் படத்தை பார்த்து முடித்தோம்.
சும்மா சொல்லக் கூடாது.. Worth for every penny என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே.. அப்படி ஒவ்வொரு நிமிடத்திற்கும், ஜிவ்வென்ற உணர்வை தந்து வொர்த்தாக இருந்தது படம்.

ஆரம்பத்தில் என்ன நடந்துச்சுன்னா..
படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம், மலையாள சினிமாவில் "ஸ்கேம்" ஏதும் நடக்கிறதா என்ற சந்தேகம் எங்களுக்கும் வந்தது. ஏன்னா, எந்த க்ரிப்பும் இல்லாமல் படத்திற்குள் வரும் குறும்படம் போலவேதான் முழு படமும் இருந்துவிடுமோ என்ற சந்தேகம் அப்போது குபீரென எழுந்தது.
நிவின் பாலி சிகெரட்டுடன் வந்ததும்தான்.. அதுவரை ரன்வேயை நோக்கி மெதுவாக ஊர்ந்து செல்லும் விமானம் போல இருந்த படம், ரன்வேயில் ஓட ஆரம்பித்த ஃபீலிங்கிற்கு வந்தது. ஆனாலும், டேக்-ஆப் ஆக, மமிதா பைஜுவின் கடைக்கண் பார்வை தேவைப்பட்டது.

விழியில் விழுந்து இதயம் கலந்த உறவே
பைஜு ஜன்னல் வழியாக பாலியை எட்டிப் பார்த்ததும், படமும் டேக்ஆப் ஆனது. அப்புறம் என்ன.. வானத்தில் பறக்க ஆரம்பித்த பிறகு அலுக்குமா, குலுக்குமா? அப்படியே மேகத்தை கிழித்து பயணிக்கும் விமானத்தின் சொகுசு போலவே மாறிப்போனது.
அழகான சின்ன ஊர், அங்கே சொந்தங்களும், நட்புகளும் சூழ்ந்திருக்கும் வாழ்வியல். சில காரணங்களால் குடும்பத்தோடு அங்கே இடம்பெயர்கிறார் மமிதா பைஜு. "ஜஸ்டின்" அண்ணன் புகழ் பாடும் ஏரியாக்காரர்களால் கவரப்பட்டு காதலில் விழுகிறாள் "ஆஷ்லி".
"குறுக்கே இந்த கவுசிக் வந்தா.." என்பது போல மைசூர்பா-வுடன் வளைக்க பார்க்கும் வாலிபர்களை தாண்டி.. அவளது கண்கள் என்னவோ நிவின் பாலி மீதுதான் நிலைகுத்தி நிற்கின்றன.
திருமண வீட்டு குரூப் போட்டோவில் கூட, அவன் கூட இல்லையே, என்று, அவள் பார்வை, பந்தி வைக்கும் திசை நோக்கியே பயணிக்கிறது. நெருங்கி நின்று நிழற்படம் எடுத்து மகிழும் ஒருதலைக்காதலனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்.. "என்னோட உடல்தான் இங்கே.. உயிர் உன்கிட்டதான்" என்று உள்ளத்திற்குள் உருகுகிறாள்.
10 வயது அதிகம் என்ற மனப்பான்மையில் உள்ளேயே காதலை பூட்டி வைத்து குமுறுகிறான் நம்ம ஹீரோ. "கர்த்தருக்கு நெருக்கமான ஒருவர்" ஆஷ்லியை உடைத்து, உள்ளேயிருக்கும் காதலை உளி கொண்டு செதுக்க, உடைபட்ட அணையாய் ஓடிச் சென்று வீட்டுக்குள் அடைகிறாள் பேதை.
"நீ சொன்னாதான் அவ வருவா.." என தங்கைகள் தூதுவிட.. காரை எடுத்துக் கொண்டு ஆஷ்லியை ஜஸ்டின் அழைத்து வரும் வரும் காட்சி கவிதை சார்.. கவிதை..

கவிதையாக மாறிய கார் ஸீன்
காருக்குள் காதலை வெளிப்படுத்தும் அந்த தருணத்தில் மமிதா முகத்தில்தான் எத்தனை உணர்ச்சிகள் கொப்பளிக்கின்றன. வெட்கப்பட்டு சிணுங்கி திமிறும் நிவின் பாலியிடத்தில் கேட்கத் தோணுவது ஒரே விஷயம்தான். "தலைவா.. இந்த "பிரேமத்தை" இத்தனை நாள் எங்கே ஒழிச்சி வச்சிருந்த".
விஷ்ணு விஜய் இசை, புல்லாங்குழல் உள்ளே ஐஸ் கட்டிகளை ஊற்றியதுபோல அத்தனை இதம், அவ்வளவு சுகம். காட்சியை கவனிக்கவா, இசையை காதில் வார்க்கவா என்று ஏக குழப்பம்.
ஒரு தலைக்காதலன் வாங்கித் தந்த மைசூர்பா-வை தோழிகளோடு பங்கிட்டு சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அந்த வழியாக வரும் நிவின் பாலியை வைத்த கண் வாங்காமல் மமிதா பைஜு பார்ப்பார் பாருங்கள் ஒரு பார்வை.. ப்பா.. "ஆஸ்கார் கொடுடா ட்ரம்பே.." என்று தியேட்டர் கூட்டத்திலும் கத்த தோணும் கண்டிப்பா சொல்றேன். வேணும்னா "ஸ்லோ மோஷனில்" கூட ஓடவிட்டு பாருங்கள், உண்மை தெரியும்.
கார் சீனுக்காக மட்டும் இரட்டை ஆஸ்கார் கொடுக்கலாம் போல! அவ்வளவு அழகு மமிதா பைஜு!

நிவின் பாலி எனும் மகா நடிகன்
நிவின் பாலியிடம் ஒரு யூனிக்கான குணம் உண்டு. ஒரே சீனில் காமெடியாகவும், அடுத்த விநாடியே பேராண்மை கொண்டவனாகவும் அவரால் பரிணமிக்க முடியும். பிரேமம் அதற்கு ஒரு நல்ல உதாரணம்.
பேராசிரியை காதலிப்பதை, நெளிந்து குழைந்து பேசிக்கொண்டிருக்கும்போது அவ்வளவு க்யூட்டாக இருக்கும் நிவி்ன் பாலி, அங்கு வரும் ப்யூனை கழுத்தை பிடித்து அந்தரத்தில் தொங்க விட்டு ஒரு முறைப்பு முறைத்து மீசையை முறுக்குவார் பாருங்க.. சரி பார்க்கலைன்னா விடுங்க, பெத்தலகேம் பார்த்துக்கோங்க.
ஒரே காட்சியில் கம்பீரமானவராகவும், காதலிக்காக உருகுபவராகவும் வேறுபாடை காட்டி.. ஆஸ்கரை அவ்வளவு ஈஸியாக மமிதாவுக்கு கொடுக்க விடமாட்டேன் என கங்கணம் கட்டியதை ரசிக்கலாம்.
இந்த காட்சிகளையெல்லாம் சோஷியல் மீடியாவில் வெட்டிப்போட்டு உருகி வருகிறார்கள் தமிழ் ரசிகர்கள். மலையாளத்தில் வெளியானபோதே, சென்னையில் பிரேமம் படத்தை 100 நாட்கள் ஓட்டிய நம்மவர்கள், தமிழ் டப்பிங்கோடு ஹாட்ஸ்டாரில் வெளியாகிய படத்தை சும்மா விடுவார்களா என்ன?
எத்தனை வயசு ஆகியிருந்தாலும் சரி.. அத்தனை பேருக்கும் தங்கள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்க ஒரு காட்சி இருக்கிறது இந்த படத்தில். அப்பப்போ ஒன்லைனர் காமெடிகள் வேறு முகத்தை எப்போதும் மலர்ச்சியாகவே இருக்க வைக்கிறது.
இப்படி ஒரு ஃபீல்குட் மூவி இப்போதெல்லாம் அடிக்கடி வருவது ரத்தம் தோய்ந்த "டிசி"களுக்கு மத்தியில் உண்மையிலேயே ஒரு ஆறுதல்தான். இப்படிப்பட்ட நிவின் பாலியை.. தமிழில் நடிக்க ஆசைப்படும் ஒரே குற்றத்திற்காக.. ரிச்சி, ஏழுமலை ஏழு கடல் என்றெல்லாம் நடிக்க வைத்து ஏமாற்றுவதை மட்டும் மன்னிக்கவே முடியாது. ஓடிடியில் தவற விடக்கூடாத படம் பெத்தலகேம் குடும்ப யூனிட். ஒருமுறையாவது பார்த்துவிடுங்கள்.
நடிகர்கள்: நிவின் பாலி, மமிதா பைஜூ, சங்கீத் பிரதாப், வினய் போர்ட், சுரேஷ் கிருஷ்ணா மற்றும் பிந்து பணிக்கர்.
தயாரிப்பு: பஹத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் (Bhavana Studios).
இசை: விஷ்ணு விஜய்.


Click it and Unblock the Notifications
