"இந்த உலகத்தை விட்டு போக பயமாக இருக்கிறது..." ஏனென்றால்! மறைவுக்கு முன் பாரதிராஜா சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் வரலாற்றை இரண்டு காலங்களாகப் பிரிக்கலாம். பாரதிராஜாவுக்கு முன், பாரதிராஜாவுக்கு பின். அந்த அளவுக்கு தமிழ் திரைப்பட உலகில் புரட்சியை ஏற்படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

ஸ்டுடியோ சுவர்களுக்குள் மட்டுமே சிக்கியிருந்த தமிழ் சினிமாவை கிராமத்து வயல்கள், வரப்புகள், மலைகள், நீர்நிலைகள் என இயற்கையின் மடியில் கொண்டு சென்றவர் அவர். கிராமத்து மக்களின் வாழ்க்கை, காதல், கோபம், பாசம், வீர உணர்வு, வலி என மனித மனத்தின் எல்லா உணர்வுகளையும் திரையில் உயிரோட்டமாக பதிவு செய்த கலைஞன் பாரதிராஜா.

அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக மாறியுள்ள நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அவர் அளித்திருந்த ஒரு பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Bharathiraja

பாரதிராஜாவின் கடைசி பேட்டி

அந்த பேட்டியில் வாழ்க்கை மீதான தனது காதலை மிகவும் உணர்வுபூர்வமாக பகிர்ந்திருந்தார் பாரதிராஜா. "இந்த உலகம் மிகவும் அழகானது. பெண்கள் அழகானவர்கள். பூக்கள் அழகானவை. மேகம் அழகு. மலை அழகு. நீர்வீழ்ச்சி அழகு. இயற்கையில் இருக்கும் ஒவ்வொன்றும் அழகு. இத்தனை அழகுகளையும் விட்டுவிட்டு ஒருநாள் போய்விட வேண்டியிருக்கும் என்று நினைக்கும்போது எனக்கு பயமாக இருக்கிறது.

இந்த உலகத்தை நான் காதலிக்கிறேன். என்னை நான் காதலிக்கிறேன். இந்த வாழ்க்கை நீடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என அவர் பேசியிருந்தார்.

என் உடல் மட்டும்தான் மண்ணில் கலக்கும்

அதே பேட்டியில் மரணம் குறித்த தனது எண்ணங்களையும் வெளிப்படையாக பகிர்ந்திருந்தார்."நான் மறைந்தாலும் என்னுடைய உடல் மட்டும்தான் இந்த மண்ணில் கலக்கும். என்னுடைய படைப்புகள் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கும் என்பது எனக்கு தெரியும். அந்த நம்பிக்கை இருக்கிறது.

ஆனால் நாம் நேசித்த மனிதர்கள், இடங்கள், நினைவுகள், இந்த அழகான உலகம்... இவை அனைத்தையும் விட்டுவிட்டு போக வேண்டுமென்ற எண்ணம் வந்தால் ஒருவித பயம் இருக்கத்தான் செய்கிறது" என்று கூறியிருந்தார்.

அடுத்த பிறவி வருமா?

பிறவி பற்றியும் பாரதிராஜா அப்போது சிந்தித்திருந்தார். "சிலர் ஏழு ஜென்மம் இருக்கும் என்கிறார்கள். அடுத்த பிறவி இருக்கும் என்கிறார்கள். ஆனால் அது உண்மையா என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் அடுத்த பிறவியில் நாம் யாராக பிறப்போம், எப்படி வாழ்வோம் என்பதும் தெரியாது.

இப்போது இருக்கும் இந்த வாழ்க்கை மீண்டும் கிடைக்குமா? இந்த பாரதிராஜாவாகவே மீண்டும் பிறப்பேனா? இந்த மக்களை, இந்த சினிமாவை, இந்த இயற்கையை மீண்டும் இதேபோல் காதலிக்க முடியுமா? என்று தெரியவில்லை.

அதனால்தான் இப்போது கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று அவர் உருக்கமாக பேசியிருந்தார். வாழ்க்கையை இவ்வளவு ஆழமாக நேசித்த மனிதர் இன்று நம்மிடையே இல்லை என்பதுதான் ரசிகர்களை அதிகம் வேதனைப்படுத்துகிறது.

"இந்த உலகம் அழகானது... அதை விட்டுப் போக பயமாக இருக்கிறது" என்று சில மாதங்களுக்கு முன்பு பேசிய பாரதிராஜா, இன்று அதே உலகையே கண்ணீரில் மூழ்கடித்துவிட்டு சென்றிருக்கிறார்.

ஆனால் அவர் சொன்னது போல, அவரது உடல் மட்டுமே மண்ணில் கலந்திருக்கலாம். அவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள், அவர் காட்டிய கிராமங்கள், அவர் விதைத்த கனவுகள், அவர் உருவாக்கிய சினிமா மொழி... இவை அனைத்தும் தலைமுறைகள் கடந்தும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

அதனால்தான் ரசிகர்கள் இன்று ஒரே குரலில் சொல்கிறார்கள்... "பாரதிராஜா மறையவில்லை... அவர் படைப்புகளாக இன்னும் உயிரோடு இருக்கிறார்!"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+