Bison box office: மாரி செல்வராஜின் 'பைசன்' 5 நாட்களில் இத்தனை கோடி வசூல்!100 கோடியை நோக்கி பயணம்
சென்னை: தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படமாக, மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் 'பைசன் - காளமாடன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, வெறும் ஐந்து நாட்களிலேயே குறிப்பிடத்தக்க வசூலைப் பதிவு செய்துள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர்17 அன்று வெளியான இந்தப் படம், விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. தொடர்ந்து நல்ல வசூலைக் குவித்து வருவதால், விரைவில் இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பைசன் ஒரு யதார்த்த படைப்பு
மாரி செல்வராஜ், தனது 'வாழை' திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்கியிருக்கும் படைப்புதான் 'பைசன்'. இந்தப் படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாகவும், அனுபமா பரமேஸ்வரன், அமீர், லால், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.
கதையின் மையக்கரு
அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசன் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்துத்தான் 'பைசன்' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான சாதியச் சிக்கல்கள் நிறைந்த சமூகப் பின்னணியில், ஒரு இளைஞன் எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டு, அவற்றையெல்லாம் மீறி எப்படி மாநில மற்றும் தேசிய அளவில் வீரராகத் தேர்வு செய்யப்பட்டார் என்பதையும், இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் தங்கப் பதக்கத்தை எப்படி வென்றார் என்பதும்தான் 'பைசன்' படத்தின் கதை.
வரலாற்று உண்மை
1990களில் தென்மாவட்டங்களில், குறிப்பாகத் தூத்துக்குடியில் நிலவிய சமூகச் சிக்கல்களை மையமாக வைத்து, வரலாற்று உண்மைகளை கருப்பொருளாகக் கொண்டே மாரி செல்வராஜ் இந்தப் படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார். மாரி செல்வராஜ் படம் என்றாலே, சில சமூக விவாதங்கள் எழுவது வழக்கம். அது இந்தப் படத்திற்கும் விதிவிலக்கல்ல.
சர்ச்சையும் எதிர்ப்பும்
இந்தப் படத்தைப் பார்த்த பலர் பாராட்டினாலும், 'பைசன்' படம் சாதிய பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகக் கூறிச் சில அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது. இந்தப் போராட்டங்களால் பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படாத சூழலில், 'பைசன்' படத்திற்குக் கிடைக்கப்பெற்ற வரவேற்பால் உற்சாகமடைந்த படக்குழுவினர் மத்தியில், படத்திற்குத் தடை விதிக்கக் கோரி சில அமைப்புகள் நீதிமன்றத்தை நாட முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
5 நாள் வசூல்
அனைத்து சர்ச்சைகளையும் கடந்து, 'பைசன்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சீராக வசூல் செய்து வருகிறது. முதல் நாள்: ₹2.7 கோடி, இரண்டாம் நாள் (சனிக்கிழமை): ₹3.4 கோடி, மூன்றாம் நாள், (ஞாயிற்றுக்கிழமை) ₹5.5 கோடி, நான்காம் நாள் (தீபாவளி): ₹6.6 கோடி, ஐந்தாம் நாள் (நேற்று): ₹5.50 கோடி, மொத்த வசூல்: ஐந்து நாட்களின் முடிவில் இந்த படத்தின் மொத்த வசூல் ₹22.10 கோடியை எட்டியுள்ளது.
எதிர்பார்ப்பு
முதல் வார வசூலில் தொடர்ந்து நல்ல வசூலை அள்ளி வருவதால், இந்தத் திரைப்படம் விரைவில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி, துருவ் விக்ரமின் திரை வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications