தடுமாறுது தக் லைஃப்.. கமல் முகத்தில் கரி பூச ரெடியான கர்நாடக மக்கள்.. கடுப்பேற்றிய கன்னட மொழி பேச்சு
பெங்களூர்: கமல்ஹாசனுக்கு கர்நாடகாவில் தொடர்ந்து எதிர்ப்புகளும், கண்டனங்களும் பதிவாகி வருகின்றன.. கன்னட மொழி குறித்த நடிகர் கமலின் கருத்துக்கு கர்நாடக அரசியல் கட்சி தலைவர்களும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.. கமல் மன்னிப்பு கேட்காவிடில் 'தக் லைஃப்' படத்துக்கு தடை விதிக்கப்படும் என்று ஒட்டுமொத்த தலைவர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளது, பெரும் பரபரப்பை தந்து வருகிறது.
தக் லைஃப் விழாவில் பேசிய கமல்ஹாசன், ''கன்னட நடிகர் ராஜ் குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனை நீங்களும் (சிவராஜ்குமார்) ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்" என்று கூறியிருந்தார்.

கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் கன்னட ரக்ஷன வேதிகே, கன்னட சலுவளி உள்ளிட்ட அமைப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்... பெங்களூருவிலுள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் வைக்கப்பட்டிருந்த தக் லைஃப் படத்தின் விளம்பர பேனர்களை கிழித்து எறிந்தார்கள்..
புறக்கணிக்க வேண்டும்
தக் லைப் படத்தை புறக்கணிக்க வேண்டும், கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கக் கூடாது என்றும் சோஷியல் மீடியாவில் கண்டனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.. கமலின் இந்த பேச்சு அரசியல் ரீதியாகவும் எதிரொலித்து வருகிறது.
அம்மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா சொல்லும்போது, "கமல்ஹாசன் ஒன்றும் வரலாற்றாசிரியர் இல்லை. எந்த மொழியில் இருந்து எந்த மொழி பிறந்தது என்பதை அவரால் எப்படி சொல்ல முடியும்? அவரது பேச்சால் 6.5 கோடி கன்னடர்களின் மனம் புண்பட்டுள்ளதால், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்.இந்து மதத்தையும், இந்துக்களின் மனதையும் கமல் காயப்படுத்தி வருகிறார் என்று தெரிவித்திருக்கிறார்.
கமலுக்கு பைத்தியம்
முதல்வர் சித்தராமையா சொல்லும்போது, ''கமல்ஹாசன் பாவம். அவருக்கு கன்னட மொழி குறித்த வரலாறு தெரியவில்லை'' என்று விமர்சித்துள்ளார்.
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால், கர்நாடகாவில் அவரது படத்துக்கு தடை விதிக்கப்படும். கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கும் கடிதம் எழுத உள்ளதாக, கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி தெரிவித்துள்ளார்.
அதேபோல கர்நாடகா மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி (பாஜக) தலைவர் ஆர். அசோக் சொலலும்போது, "கமல்ஹாசனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது; கமல்ஹாசன் ஒரு அர்பன் நக்சலைட். கன்னடர்கள் கமல்ஹாசனைப் புறக்கணிக்க வேண்டும் என்றார்..
முகத்தில் கருப்பு மை
இந்நிலையில், கமல்ஹாசன் முகத்தில் கறுப்பு மை பூச தங்களது அமைப்பு முயற்சித்ததாக கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பின் பிரவீண் ஷெட்டி பிரிவு தலைவர் பிரவீண் ஷெட்டி கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரவீண் ஷெட்டி சொல்லும்போது, கமலின் பேச்சு கன்னட மொழியை அவமதித்துள்ளது.. எனவே, கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்-. அவர் இப்போது பெங்களூருக்கு வந்துள்ளதாவும், எலகங்கா பகுதியில் தங்கியிருப்பதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதனால், எலகங்கா பகுதிக்குச் சென்று அவரது முகத்தில் கறுப்பு மை பூச திட்டமிட்டோம்.
ஆனால் நாங்கள் அங்கே செல்வதற்கு முன்பே கமல் கிளம்பிசென்றுவிட்டார். ஆனாலும், இந்த பிரச்சனை தீரும்வரை தக் லைப் படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம். என்றார்.
அன்பு மன்னிப்பு கேட்காது
இத்தனை எதிர்ப்புகள் நாளுக்கு நாள் பெருகிய போதும், கமல் தன்னுடைய கருத்திலிருந்து பின்வாங்கவில்லை..மாறாக, ''அரசியல்வாதிகள் மொழி குறித்து கருத்து சொல்வதற்கு தகுதியற்றவர்கள். மொழியியல் அறிஞர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள் அதுபற்றி கருத்து சொல்லட்டும்.
தமிழகத்தில் எனக்கு நெருக்கடி வந்தபோது, கன்னடர்கள் தங்களது ஊருக்கு வருமாறு என்னை அழைத்தார்கள். அன்பின் காரணமாகவே நான் அவ்வாறு கூறினேன். அன்பு எப்போதும் மன்னிப்பை எதிர்ப்பார்க்காது" என கூறியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications