மூச்சுகூட விட முடியாமல்.. "காதல்" பட நடிகை மல்லேஸ்வரியின் கோலம்.. சென்னை அரசு மருத்துவமனையில் கதறல்
சென்னை: பிரபல நடிகை காதல் மல்லேஸ்வரி தற்போது கடுமையான உடல்நலப் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அவரது உருக்கமான வீடியோ ஒன்றும் வெளியாகி ரசிகர்களை கலக்கமடைய செய்துள்ளது.. என்ன நடந்தது? நடிகைக்கு என்னாச்சு?
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை மல்லேஸ்வரி.

பிரபல நடிகை மல்லேஸ்வரி
கூலி, வில்லாதி வில்லன், கட்டபொம்மன், அரவான், தோட்டா, உடன்பிறப்பு, சோலையம்மா, பாட்டு வாத்தியார் போன்ற பல வெற்றிப் படங்களில் அவர் நடித்துள்ளார்.
குறிப்பாக, தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவான்களான கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோருக்கு ஜோடியாகவும், அவர்களுடன் இணைந்தும் பல படங்களில் நடித்துள்ளார். "வில்லாதி வில்லன்" படத்தில் கவுண்டமணி, மல்லேஸ்வரி மீது தண்ணீர் ஊற்றி, "எந்த கடையில நீ அரிசி வாங்கின" என்ற பாடலைப் பாடி கிண்டல் செய்ய, பதிலடியாக மல்லேஸ்வரி அவர் மீது கல் வீசும் காட்சி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.
காதல் படம் நடிகை
இப்படி பல படங்களில் நடித்திருந்தாலும், 2004ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் - சந்தியா நடிப்பில் வெளிவந்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற "காதல்" படத்தில், நடிகை சந்தியாவின் அம்மா கேரக்டரில் நடித்ததன் மூலம் தான் அவர் மிகவும் பிரபலமானார். அந்தப் படத்திற்குப் பிறகு சினிமாவில் மற்றும் ரசிகர்கள் அவரை 'காதல்' மல்லேஸ்வரி என்றே அழைத்து வருகிறார்கள்.
பல படங்களில் தோன்றினாலும், தனது இயல்பான நடிப்பால் மிகக் குறுகிய காட்சிகளில் வந்தாலும் கவனம் ஈர்த்தவர் என்ற பெயரையும் அவர் பெற்றிருந்தார்.
இந்நிலையில், நடிகை மல்லேஸ்வரி தற்போது கடுமையான உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
நுரையீரல் தொற்று
நுரையீரல் தொற்று காரணமாக மூச்சு விடுவதற்கே மிகவும் சிரமப்பட்டு வரும் அவர், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், பி-பிளாக், 6-வது மாடியில் உள்ள T2F614 பெண்கள் வார்டில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கான செலவுகளை சமாளிக்க முடியாத பொருளாதார சூழ்நிலையில் அவர் தவித்து வருவதாகத் தெரிகிறது.
இப்போது எனக்கு உதவ யாரும் இல்லாத நிலையில், சிகிச்சைக்காகவும், சாப்பாட்டிற்காகவும் பண உதவி கோரி அவர் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜிபே நம்பர்
அதில், "நுரையீரல் தொற்று காரணமாக என்னால் மூச்சு விடவே முடியாமல் சிரமப்பட்டு வருகிறேன். செயற்கை சுவாசம் உதவியால் தான் சுவாசித்து வருகிறேன். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டு வரும் நான், இப்போது இந்த நோயாலும் அவதிப்பட்டு வருகிறேன். அதனா்ல எனக்கு முடிந்தவரை உதவி செய்யுங்கள் என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது ஜிபே நம்பர் 9176945876 என்றும் வீடியோவில் பகிர்ந்து உதவி கேட்டுள்ளார். ஒரு காலத்தில் ரசிகர்களை மகிழ்வித்த நடிகை, தற்போது இக்கட்டான நிலையில் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரிய பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி ரசிகர்களையும் உருக்கியுள்ளது..!!












Click it and Unblock the Notifications