Coolie 14th Days Box Office : 'கூலி' படத்தின் 14-வது நாள் வசூல் நிலவரம் - விநாயகர் சதுர்த்தியில் நடந்த அதிசயம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'கூலி' திரைப்படம், கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி உலகெங்கும் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைத்த இந்தப் படம், ரஜினியின் திரை வாழ்க்கையின் 50-வது ஆண்டு நிறைவில் வெளியானதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. திரைப்படம் வெளியாகி நேற்றுடன், அதாவது ஆகஸ்ட் 27-ம் தேதியுடன் 14 நாட்கள் நிறைவடைந்துள்ளது. நேற்று எந்த படம் பெற்ற வசூல் நிலவரம் வெளியாகியிருக்கிறது.

பிரம்மாண்ட தொடக்கம்
ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால சினிமா பயணத்திற்கு ஒரு மகுடமாக வந்த 'கூலி', ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் அறிவிப்பு மற்றும் 'மோனிகா' பாடல் ஆகிய இரண்டும் உலக அளவில் படத்தின் விளம்பரத்திற்குப் பெரும் உதவியாக இருந்தன. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ₹1000 கோடி வசூல் செய்யும் முதல் படமாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
கூலி படத்தின் கதைச்சுருக்கம்
'கூலி' ஒரு அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். இதன் மையக் கதாபாத்திரம் தேவா (ரஜினிகாந்த்). யூனியன் தலைவரான தேவா, தனது நெருங்கிய நண்பரான ராஜசேகரின் (சத்யராஜ்) மர்மமான மரணத்திற்குப் பிறகு, சைமன் (நாகார்ஜுனா) மற்றும் அவரது வலது கையான தயாள் (சௌபின் ஷாஹிர்) ஆகியோரை எதிர்கொள்கிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், உபேந்திரா போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் நடிகர் ஆமிர் கானும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் விமர்சனம்
'கூலி' திரைப்படத்தின் முதல் பாதி, பாடல்கள், பன்ச் டயலாக் மற்றும் மாஸ் காட்சிகள் என அளவுக்கு அதிகமாக இருந்ததால், படத்தின் வேகம் சற்று குறைவதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இரண்டாம் பாதியில் லோகேஷ் கனகராஜ் சிறப்பாகச் செயல்பட்டு, ரசிகர்களுக்கு விருந்தளித்ததாகப் பலரும் தெரிவித்தனர்.
அதிரடி வசூல்
'கூலி' திரைப்படம் வெளியான முதல் நாளில் ₹151 கோடிகளை வசூலித்து, தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற சாதனையைப் படைத்தது. முதல் நான்கு நாட்களில் உலக அளவில் ₹404 கோடிகளை வசூலித்து, முதல் நான்கு நாட்களில் அதிக வசூலைக் குவித்த தமிழ் படம் என்ற சாதனையை உருவாக்கியது.
விமர்சனங்களின் தாக்கம்
முதல் நான்கு நாட்களில் அமோகமாக இருந்த வசூல், ஐந்தாவது நாளில் இருந்து குறையத் தொடங்கியது. இதற்கு முக்கியக் காரணம், படம் ரசிகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றதுதான். "படத்தில் அதிகமான நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும், திரைக்கதையில் பல குறைபாடுகள் உள்ளன" என்று விமர்சகர்களும், பொதுமக்களும் கருத்து தெரிவித்தனர். இதனால், ஐந்தாவது நாளில் இருந்து, அதாவது வார நாட்களில் படத்தின் வசூல் கணிசமாகக் குறைந்தது.
14-வது நாள் வசூல்
'Sacnilk' வலைதளத்தின் தகவலின்படி, 'கூலி' திரைப்படம் 14 நாட்களில் இந்தியாவில் மட்டும் சுமார் ₹268.75 கோடிகள் வசூலித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினமான நேற்று, படம் சுமார் ₹4.5 கோடிகள் வசூலித்திருக்கும் என்று கூறப்படுகிறது.
தயாரிப்பு நிறுவனத்தின் நிலைப்பாடு
'கூலி' படக்குழு, முதல் நான்கு நாட்களுக்குப் பிறகு படத்தின் வசூல் குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும், 'Sacnilk' போன்ற வலைதளங்கள் தோராயமான வசூல் நிலவரத்தைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.
'கூலி' திரைப்படம், ஒருபுறம் வசூல் சாதனைகளைப் படைத்தாலும், மறுபுறம் விமர்சனங்களால் ரசிகர்களின் ஆதரவை இழந்திருப்பது, திரைத்துறையில் ஒரு முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications