உருகிய விஜய் டிவி நேயர்கள்.. கண்ணீர் வரவைத்த டிக்ஷின்! சென்னை கண்ணகி நகருக்கு இப்படி ஒரு கதையா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு எனப்படும் பேச்சுப்போட்டி நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதில் ஒரு பேச்சாளர் சென்னை கண்ணகி நகர் குறித்து பேசியுள்ளது பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.
பொழுதுபோக்கு ஊடகங்களில் பேசப்படாத பல விசயங்களை தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் பேச்சாளர்கள் பேசி வருகிறார்கள். அந்த வகையில் டிக்ஷின் ரொமாரியோ எனப்படும் சென்னையை சேர்ந்த போட்டியாளர் பேசியுள்ள பேச்சு சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து பலருக்கு கண்ணீரை வரவழைத்து இருக்கிறது.

சென்னை கண்ணகி நகர் குறித்து அவர் பேசிய பேச்சு பலரது உள்ளங்களை உலுக்கி இருக்கிறது. அவர் தனது உரையில், "கண்ணகி நகர்.. 2017 டிசம்பர் 7 அன்று ஆங்கில நாளேட்டிலே கண்ணகி நகர் குறித்து ஒரு செய்தி. கண்ணகி நகர் என்றாலே என்றென்றும் குற்றவாளிகளின் கூடாரமாகவே பார்க்கப்படுகிறது என்று. எப்படி? தலைமயிரிலே சாயம் பூசிக்கொண்டு தாறுமாறாக வாகனம் ஓட்டுகிறவன் எவனோ.. அவன் கண்ணகி நகரை சார்ந்தவன்.
பள்ளிகளுக்கு செல்லாமல் பட்டாக் கத்தியுடன் திரிபவனும், கல்லூரிக்கு செல்லாமல் கஞ்சா அடித்து திரிபவனும் கண்ணகி நகரை சார்ந்தவன். கொலை, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகிறவன், எவனாக இருந்தாலும் அவன் கண்ணகி நகரை சார்ந்தவன். இன்னும் எளிமையாக சொல்லப்போனால் கண்ணகி நகரில் இருந்து வெகு தொலைவிலே, ஏதோ ஒரு இடத்திலே, எங்கோ ஒரு மூளையிலே ஒரு திருட்டு சம்பவம் நடந்தேறுகிறது என்று சொன்னால், முதலில் கேட்கிற கேள்வி திருடன் முகத்தை பார்த்தீர்களா என்று.
உடனே அவர்கள் கேட்கிற மறுகேள்வி, திருடன் பார்ப்பதற்கு கண்ணகி நகர் பையன் மாதிரி இருந்தானா என்று. ஆக, ஒரு கொலைகாரனுக்கும் கொள்ளைக்காரனுக்குமான அடையாள முகங்களாக கண்ணகி நகர் மக்களின் முகங்கள் காட்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. ஆனால், உண்மையில் கண்ணகி நகர் என்றால் என்ன? கண்ணகி நகர் வாழ் மக்கள் என்பவர்கள் யார்? கண்ணகி நகர் என்றால் உழைக்கும் வர்க்கம்.

உண்மையை சொல்லப்போனால் சென்னை மெரினா கடற்கரையிலே உயர்ந்து நிற்கிற உழைப்பாளர் சிலையின் உடைய உண்மையான வாரிசுகள் இவர்கள். 21 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை சென்னை வண்ணாரப்பேட்டையிலும், புதுப்பேட்டையிலும் வணிகம் செய்துகொண்டிருந்த வாணிபர்கள். வியாசர்பாடியிலும், டுமீல்குப்பத்திலும் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள். பாரி முனையிலும், மெரினா கடற்கரையிலும் கைவண்டி இழுத்துக் கொண்டிருந்த கூலித் தொழிலாளர்கள்.
இவர்கள் அத்தனை பேருமே ஒருநாள், குடிசை மாற்று குடியிருப்பு என்ற பெயரிலே தங்கள் வாழ்விடம் இழந்து வாழ்வாதாரம் இழந்து தங்கள் உழைப்பால் உருவாக்கிய சென்னையை இழந்து, சென்னையைவிட்டு மிகத் தொலைவில் கண்ணகி நகர் என்னும் தீவுக்குள் குடிபெயர்ந்தனர். இவர்கள் அங்கு சென்ற வேளையில் எந்தவிதமான வாழ்விட வசதிகளும் இல்லை. வருமானம் ஈட்டும் வசதிகளும் இல்லை. ஒவ்வொரு நாளும் பசியோடு போராட்டம்.
கண்ணகி நகர் மக்கள் என்பவர்கள் யார்? ஏறத்தாழ 6 லட்சத்துக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட சீர்மிகுந்த இந்த சென்னை, சீரற்று நாரி நசநசத்துவிடாமல் இருப்பதற்காக உங்கள் வீட்டுக் கழிவுகளையும் என் வீட்டுக் கழிவுகளையும் சுத்தம் செய்கிறார்களே துப்புரவு பணியாளர்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் கண்ணகி நகர் போன்ற பகுதியை சார்ந்தவர்கள்.
கொரோனா பெருந்தொற்று காலத்திலும், வர்தா பேரிடர் காலத்திலும், நீங்களும் நானும் உயிருக்கு அஞ்சி வீட்டில் தஞ்சம் புகுந்த காலத்திலும் களத்தில் இறங்கி போராடினார்களே.. முன்களப்பணியாளர்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் கண்ணகி நகர் போன்ற பகுதியை சார்ந்தவர்கள். இன்னும் ஒரு படி மேலே போனால் பள்ளிக் குழந்தைகளுக்கு மிட்டாய் வழங்குவது முதல் பிணத்தை பாடையில் ஏற்றுகிற வரை அனைத்திலுமே சாதி பார்க்கிற இந்த சமுதாயத்திலே சாதியற்ற ஒற்றைக் கொடையின் கீழ் வாழ்கிற ஒரு ஒற்றுமை தேசமாக கண்ணகி நகர் இருந்துகொண்டு இருக்கிறது.

இப்படி ஆயிரக்கணக்கான நல்ல முகங்கள் கண்ணகி நகருக்கு இருந்த காணினும் குற்றவாளிகளின் கூடாரம் என்ற ஒற்றைக் குடையின் கீழ் எங்களை இந்த உலகம் சித்தரிப்பதால், கண்ணகி நகர் என்கிற உண்மையான முகத்தை இந்த உலகில் காட்ட முடியாமல் தவிர்க்கிறோம். அதற்காக சோழிங்கநல்லூர் என்றும், துரைப்பாக்கம் என்றும், மேட்டுக்குப்பம் என்றும் பல போலியான முகங்களை நாங்கள் அணிந்துகொள்கிறோம்.
ஆனால், உண்மைகள் அந்த போலி முகத்திரைகளை கிழித்து கண்ணகி நகர் என்கிற எங்கள் உண்மையான முகங்களை காட்டக்கூடிய காலம் வந்திருக்கிறது. காரணம், நான் கண்ணகி நகரை சார்ந்தவன் என்று சொல்லி நல்வாய்ப்புக்கு நன்றி பாராட்டுகிறேன்." என்று உருக்கமாக உரக்க சொல்லி உள்ளார்.












Click it and Unblock the Notifications