சாமி பேரு வந்தாலே வசூல் வேற லெவலா? 4 நாளில் ரவி தேஜாவின் "இருமுடி” கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
சென்னை: ஒரு காலத்தில் சாமி படங்கள் என்றாலே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும். ஆனால் இப்போது அந்த செண்டிமெண்ட் மட்டும் போதாது சாமி + குடும்பம் + எமோஷனல் + மாஸ் என்று சரியான கலவையில் ஒரு படம் வந்தால் வசூலிலும் அதன் தாக்கம் தெரிகிறது. அந்த வரிசையில் இப்போது ரவி தேஜாவின் இருமுடி படமும் இணைந்து இருக்கிறது. இப்போது இந்த படத்தின் நான்கு நாள் வசூல் நிலவரம் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
இரு முடி பட வசூல் நிலவரம்
கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் வெளியான 4 நாட்களில் உலக அளவில் 87.50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவில் சுமார் 72.50 கோடியும் வெளிநாடுகளில் 15 கோடியும் வசூலித்ததாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தொடர் தோல்வி படங்களுக்கு பிறகு ரவி தேஜாவுக்கு இருமுடி ஒரு நல்ல கம்பேக் படமாக அமைந்துவிட்டது.

சமீபத்தில் இந்த படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் இயக்குனர் சிவா நிர்வாணா படம் 3 நாட்களிலேயே பிரேக் ஈவன் நிலையை கடந்து விட்டதாக கூறி இருந்தார். இருமுடி படத்தின் ஸ்பெஷலை அதன் தலைப்பில் மட்டும் கிடையாது. படத்தின் கதையே ஐயப்ப சுவாமி பக்தி முக்கியமான பின்னணியாக இருக்கிறது. ரவி தேஜா நடித்திருக்கும் திரிநாத் கேரக்டர் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். மது பழக்கமும், கோபமும் கொண்ட அவருடைய வாழ்க்கையில் மகளுடன் உறவு முக்கியமானதாக இருக்கிறது.
இரு முடி படத்தின் கதை
ஒரு கட்டத்தில் மகளுக்காக ஐயப்ப தீட்சை எடுக்கும் சூழல் உருவாகிறது. அதற்கு பிறகு அவருடைய வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் தான் கதையின் முக்கிய பகுதியாக இருக்கிறது. அதனால் தான் இந்த படம் வெறும் சாமி படம் கிடையாது. தந்தை, மகள், பாசம், குடும்ப உறவு, ஆன்மீகம் ஆக்ஷன் குற்றப் பின்னணி என பல விஷயங்களையும் ஒன்றாக கலந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் சிவா படத்தின் ஐயப்பன் மாலை, குடும்பக்கதை, கிரைம் என மூன்று அடுக்குகள் இருப்பதாக முன்பே கூறியிருந்தார்.
சாமி கதைகளுக்கு வரவேற்பு
சமீப காலமாக சாமி கதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதை பார்க்கும் போது ஒரு சுவாரஸ்யமான விஷயம் நினைவுக்கு வருகிறது. என்னதான் மார்டன் உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருந்தாலும் ஆன்மீகம், தெய்வ நம்பிக்கை, நாட்டுப்புற தெய்வங்கள், புராணம் மற்றும் பக்தி ஆகியவற்றை கதையின் மையமாக வைத்த படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. அதற்கு மிகப்பெரிய உதாரணமாக காந்தாராவை சொல்லலாம். அதன் முதல் பாகம் மற்றும் இரண்டாவது பெரிய அளவில் வெற்றி பெற்றது.
ரசிகர்கள் கருத்து
அதனால் சாமி கதையா? அப்படினா மக்கள் தியேட்டருக்கு வருவாங்களா? என்ற கேள்விக்கு இப்போது பாக்ஸ் ஆபிஸ் ஆமாம் என்று தான் பதில் கொடுத்திருக்கிறது. சூர்யா நடித்த கருப்பு படம் கூட சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விட்டது. அந்த வரிசையில் இருமுடி படமும் பத்தியை மட்டும் முன்னிலைப்படுத்தாமல் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பாசத்தையும் சேர்ந்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கிறது.
மாஸ் மகாராஜா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரவி தேஜாவுக்கு சமீபகால படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்காத நிலையில் இருமுடி ஆரம்பத்திலேயே நல்ல வசூலை கொடுத்திருப்பது அவருடைய ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
