அட்டக்கத்தி தினேஷின் காதலி யார் தெரியுமா? எப்போது திருமணம்? சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் எந்தவிதமான அலட்டலும் இல்லாமல் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகர்களில் அட்டக்கத்தி தினேஷும் ஒருவர். ஆரம்பத்தில் 'அட்டக்கத்தி' தினேஷ் என்று பிரபலமானார், 'லப்பர் பந்து' படத்துக்கு பிறகு பலராலும் கெத்து தினேஷ் என்று கொண்டாடப்படும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். இப்படி சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் தினேஷின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய ஒரு விஷயம் இப்போது வெளிப்படையாக வந்திருக்கிறது.

தினேஷ் காதலித்து வருகிறாரா என்ற கேள்வி கடந்த சில காலமாகவே ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அவரும் சில பேட்டிகளில் தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் சூசகமாக சொல்லியிருந்தார். ஆனால் அந்த பெண் யார் என்பதை மட்டும் அவர் வெளிப்படையாக சொல்லாமல் இருந்தார். இப்போது அந்த கேள்விக்கு அவருடைய பிறந்தநாளிலேயே பதில் கிடைத்திருக்கிறது.

Attakathi Dinesh

தினேஷின் காதலி

தொகுப்பாளினியான விஜே எழிலரசி, நடிகர் தினேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் தினேஷுடன் இருக்கும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவில், "என்னவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எப்போதும் உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கட்டும். வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பயணங்கள் எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் நான் உங்களை மட்டும்தான் தேர்ந்தெடுப்பேன்" என்று எழிலரசி குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வார்த்தைகள்தான் இப்போது ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்திருக்கிறது. பிறந்தநாள் வாழ்த்து மட்டும் சொல்லாமல், வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு முறையும் உங்களைத்தான் தேர்ந்தெடுப்பேன் என்று ஒருவர் சொல்வது சாதாரண வாழ்த்து கிடையாதே... அதுவும் தினேஷுடன் இருக்கும் புகைப்படங்களையும் சேர்த்து வெளியிட்டிருப்பதால், இவர்தான் தினேஷ் காதலித்து வந்த பெண்ணா? என்ற கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டதாகவே ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

விஜே எழிலரசி யார்

தினேஷின் காதலியாக தற்போது பேசப்படும் விஜே எழிலரசி, பொறியியல் பட்டதாரி. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர், சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். முக்கியமான நடிகர்கள் பலரையும் பேட்டி எடுத்திருக்கிறார். இதுவரை தினேஷின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ரசிகர்களிடம் பெரிதாக எந்த தகவலும் இல்லாத நிலையில், எழிலரசியின் இந்த பதிவு மூலமாகத்தான் அவருடைய காதல் வாழ்க்கை இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

Attakathi Dinesh

எப்போ கல்யாணம்?

இதையடுத்து ரசிகர்கள் கேட்க ஆரம்பித்திருக்கும் அடுத்த கேள்வி இதுதான்... காதலை சொல்லிவிட்டீர்கள், திருமணம் எப்போது? தினேஷ் ஏற்கனவே தனது காதல் வாழ்க்கை குறித்து பேசும்போது, திருமணம் குறித்தும் சூசகமாக தெரிவித்திருந்தார். இப்போது எழிலரசியும் அவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தனது காதலை வெளிப்படையாக சொல்லியிருப்பதால், இவர்களுடைய திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் திருமண தேதி குறித்து இருவருமே இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

குக்கூ முதல் லப்பர் பந்து வரை

தினேஷுக்கு சினிமாவில் இது ஒன்றும் திடீரென கிடைத்த வெற்றி கிடையாது. 'அட்டக்கத்தி' படத்தின் மூலம் கவனிக்கப்பட்ட அவர், அதன்பிறகு 'குக்கூ' படத்தில் முற்றிலும் வேறொரு கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பை நிரூபித்தார்.

அதன்பிறகு 'விசாரணை', 'கபாலி', 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரத்துக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக்கொள்ளும் நடிகராகவும் கவனம் பெற்றார்.

ஆனால் கடந்த சில வருடங்களில் தினேஷுக்கு முக்கியமான திருப்பமாக அமைந்த படம் 'லப்பர் பந்து'. அந்தப் படத்தில் அவரது நடிப்பும் கதாபாத்திரமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயரான கெத்து என்பதே அவரை ரசிகர்கள் அழைக்கும் பெயராக மாறிவிட்டது. அதைத் தொடர்ந்து தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வேட்டுவம்' படத்திலும் தினேஷ் நடித்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், அவரது 26-வது படமாக உருவாகியுள்ள புதிய படத்துக்கு 'பந்தா கேங்ஸ்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தினேஷின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் தலைப்பும் முதல் பார்வையும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

ஒருபக்கம் சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் என்று பிஸியாக இருக்கும் தினேஷ், இன்னொரு பக்கம் தனது காதல் வாழ்க்கையையும் வெளிப்படையாக அடுத்த கட்டத்துக்கு கொண்டு வந்திருக்கிறார். இத்தனை நாட்களாக தினேஷின் காதலி யார் என்று ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், இப்போது விஜே எழிலரசியின் பிறந்தநாள் பதிவே அதற்கான பதிலை கொடுத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+