எதிர்நீச்சல் சீரியலில் அந்த "சீன்”.. பிரபல திரைப்படத்திலிருந்து "சுட்டதா”.. இதை கவனிச்சீங்களா..?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஜீவானந்தம் தன்னை சுட்டு விட்டான் என்று நேற்றைய எபிசோட் கனவு கண்டு அலறி இருந்தார்.
இந்த சீன்கள் ஏற்கனவே வடிவேலு திரைப்படத்தில் வந்த காமெடி தான் என்று ரசிகர்கள் ஆதாரத்தோடு வீடியோ வெளியிட்டு கலாய்த்து வருகிறார்கள்.

இது எந்த படம், எந்த சீன் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
தற்போதைய சூழ்நிலையில் சின்ன திரையில் அதிகமான ரசிகர்களால் பேசப்படும் சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலின் கதை மற்றும் நடிகர்களின் திறமை குறித்து அதிகமான ரசிகர்கள் பாராட்டி கொண்டிருக்கின்றனர். சாதாரண ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் இந்த சீரியல் குறித்து தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

பெண் அடிமைதனத்துக்கு எதிராக இருக்கும் இந்த சீரியலின் கதை பல வீட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கதை போன்றுதான் இருக்கிறது என்று பெண் ரசிகர்கள் இந்த சீரியலை பாராட்டிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த சீரியலில் வில்லனாக நடிக்கும் மாரிமுத்துவுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டிருக்கிறது. பொதுவாக வில்லன்கள் என்றால் ரசிகர்கள் திட்ட தான் செய்வார்கள். ஆனால் இங்கே இந்த சீரியலில் வில்லனை கூட ஹீரோ ரேஞ்சுக்கு கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
அதற்கு காரணம் நடிகர் மாரிமுத்து குணசேகரன் கேரக்டரில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று தான் சொல்ல வேண்டும். அவருடைய தனித்துவமான பாடி லாங்குவேஜ், வார்த்தை உச்சரிப்பு மற்றும் முக எக்ஸ்பிரஷன் என அனைத்துமே வித்தியாசமாக குணசேகரன் கேரக்டரில் செட் ஆகிவிட்டது. இதனாலையே தற்போது இவர் மீம்ஸ்களில் டிரெண்டாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2கே கிட்ஸ்களின் ஸ்டார் ஆகவும் எதிர்நீச்சல் குணசேகரன் இடம்பிடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் குணசேகரன் தூங்கிக் கொண்டிருப்பார். அப்போது அவருக்கு ஜீவானந்தம் தன்னை துப்பாக்கியால் சுட்டது போன்று கனவு வரும். அதை கண்டதும் தூக்கத்தில் இருந்து பதறி எழுந்து குழந்தை போல அழுது கொண்டிருப்பார். ஜீவானந்தம் என்ன சுட்டுட்டான். நான் படுத்தா என் நெஞ்சு மேல ஏறி நின்னு என் தலையில சுட்டுட்டு ஓடிடுவான். அந்தப் பக்கமா ஓடுறான் என்று அதிகமாக புலம்பி கொண்டு இருந்தார்.
பிபி மாத்திரை போட்டும் அது கூட நினைவில்லாமல் மீண்டும் ஈஸ்வரி இடம் எனக்கு மாத்திரை வேண்டும் என்றும் அடம்பிடிப்பார். இப்படியாக இருக்கையில் இந்த எபிசோடு ஏற்கனவே நடிகர் அஜித் நடித்த "மைனர் மாப்பிள்ளை" என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற காமெடி தான் இது என்று ரசிகர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர் .காரணம் அந்த திரைப்படத்தில் வடிவேலு பிச்சைக்காரராக இருப்பார். அப்போது ஒரு குப்பை தொட்டியில் பெட்டி ஒன்று இருக்கும். அதை எடுத்த வடிவேலு உள்ளே பணம் இருப்பதை பார்த்து அதை மறைத்து கொண்டு போவார்.

அப்போது அந்த பெட்டியை குப்பை தொட்டிக்குள் போட்ட ரௌடிகள் வந்து அது எங்களோட பெட்டி நாங்க போலீஸ் வராங்கனு என்பதற்காகத்தான் அதுக்குள்ள போட்டோம். அதை எங்ககிட்ட கொடு என்று சொல்லுவாங்க. ஆனா வடிவேலு கொடுக்காம பெட்டியை கொண்டுட்டு ஓடிப் போவார். அப்போது துப்பாக்கியோடு இருக்கும் அவர்கள் வடிவேலை சுட்டு விடுவார்கள். இதை ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் கனவாக கண்டு வடிவேலு என்ன சுட்டுட்டான் என்ன சுட்டுட்டான் என்று கத்துவார்.

இந்த நிலையில் இதே கதை தான் எதிர்நீச்சல் சீரியலில் வச்சிருக்காங்களா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இது சுட்ட கதையோ..? இல்லை சுடாத கதையோ...! ஆனா குணசேகரனின் நடிப்பு வேற லெவல் என்று அதற்கான பாராட்டுகளும் குவிகிறது. வில்லனாக இருந்தாலும் இவர் அழுது ஆர்ப்பாட்டம் செய்யும்போது பார்க்க பாவமாகத்தான் இருக்கிறது என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணுவதையும் கமெண்ட்களில் காண முடிகிறது.
அதே நேரத்தில் 90ஸ் கிட்ஸ்கள் நாங்கள் இந்த காமெடியை ஏற்கனவே வடிவேலு வெர்ஷனில் பார்த்தோம். இப்போது 2கே கிட்ஸ்கள் குணசேகரன் வெர்ஷனில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications