எதிர்நீச்சல் முடிவுக்கு பட்டம்மாள் வந்ததே இதற்காகத்தானா? வீண் சபதம் எல்லாம் நாளையோடு முடிவு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜூன் 7-ம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் எதிர்நீச்சல் பெண்கள் எல்லோரும் குணசேகரனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது இறந்து போனதாக கூறப்பட்ட அப்பத்தா (பட்டம்மாள்) மீண்டும் உயிரோடு நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறார்.
பெரிய அளவில் எதிர்பார்ப்போடு எதிர்நீச்சல் சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சீரியல் தொடங்கி ஒரு சில மாதங்களிலேயே மக்கள் மனதில் நம்பர் ஒன் சீரியலாக இடத்தைப் பிடித்து விட்டது. சீரியலே பார்க்காத ஆண்களை கூட இந்த சீரியல் டிவி முன்பு காத்திருக்க வைத்தது. அதனாலேயே இணையத்தில் இந்த சீரியலை பலரும் பாராட்டிக் கொண்டிருந்தனர்.

அரசியல் பிரபலங்கள் முதல் நடிகர் விஜய்யின் அம்மா வரை பலரும் இந்த சீரியலை பற்றி தொடர்ச்சியாக பேட்டிகளில் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் சில மாதங்களாகவே இந்த சீரியல் குறித்து ரசிகர்கள் அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள். அதற்கு காரணம் இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்துவின் மரணமும் தான். அதுவரைக்கும் வில்லனாக இருந்தாலும் மாரிமுத்து மக்கள் மனதில் ஹீரோவாகவே வலம் வந்துவிட்டார்.
அவருடைய இறப்பிற்கு பிறகு வேலராமமூர்த்தியை சீரியல் தரப்பினர் களம் இறக்கி இருந்தனர். ஆனால் வேலராமமூர்த்தி செய்யும் வில்லத்தனம் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. இதுவரைக்கும் ஒருவரை ஒரு கேரக்டரில் பார்த்துவிட்ட நிலையில் அவருக்கு பதிலாக இன்னொருவர் அந்த கேரக்டரில் வந்தால் மக்கள் மனதில் அது ஒரு போட்டி மற்றும் ஒப்பீடு தன்மையை ஏற்படுத்த தான் செய்யும்.
அதன் தாக்கமாகவே வேல ராமமூர்த்தி மீது மக்கள் கோபத்தை கொட்ட தொடங்கினார். அதோடு எதிர்நீச்சல் பெண்கள் எப்போதுமே சவால் மட்டும் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடைசியில் குணசேகரன் தான் ஜெயித்துக் கொண்டிருக்கிறார். இது மேலும் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி அது பாசிட்டிவாக போனால் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பதற்கு இப்போது எதிர்நீச்சல் சீரியலும் ஒரு உதாரணமாக மாறிவிட்டது.

எப்போதுமே எதிர்நீச்சல் பெண்கள் தோற்று கொண்டு இருந்தால் இதை பார்க்கும் மக்கள் மனதிலும் சலிப்பு ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அப்பத்தாவிற்கு குணசேகரன் மயக்க மருந்து கொடுத்து அவரை காரில் கொண்டு போகும்போது அவர் கார் வெடித்து இறந்து போய்விட்டார் என்று காட்சி வைத்திருந்தனர். ஆனால் அப்போது நாம் அப்பத்தா இறந்திருக்க வாய்ப்பு இல்லை.
கண்டிப்பாக ஒருநாள், "நான் வருகிறேன்" என்று மீண்டும் வருவார் என்று சொல்லி இருந்தோம். அது போல தான் இப்போது நடந்திருக்கிறது. அந்த நேரத்தில் கூட அப்பத்தா இறந்து போய்விட்டார் என்று குணசேகரன் அஸ்தியை கடலில் கரைக்க போயிருந்தார். ஆனால் அப்பத்தாவின் உடல் கிடைக்கவில்லை என்று போலீஸ் குறிப்பிட்டிருந்தது அன்றைய எபிசோடை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

அப்பத்தா போட்டு இருந்த வளையல் மட்டும் தான் ஜனனி கையில் கிடைத்தது. இந்த நிலையில் நாளையோடு இந்த சீரியல் முடிவடைய இருக்கிறது. இன்று அப்பத்தா மீண்டும் உயிரோடு வந்து இருக்கிறார். இது ஜீவானந்தத்தின் ஏற்பாடாகத்தான் இருக்கும். அப்பத்தா குணசேகரனின் பிளானை அறிந்து ஆரம்பத்திலேயே ஜீவானந்தத்திடம் சொன்னதால் ஜீவானந்தம் அப்பத்தாவை கார் ஆக்சிடெண்டிலில் இருந்து காப்பாற்றியது போன்று நாளை எபிசோட்டில் இருக்கப் போகிறது.
ஆனாலும் குணசேகரன் ஜீவானந்தத்தின் மனைவியை கொலை செய்தது மற்றும் தர்ஷினியை கடத்தியது, ஆதிரைக்கு கட்டாய திருமணத்தை நடத்தி வைத்தது போன்ற காரணங்களுக்காக ஜெயிலுக்கு போவது போன்று கதை முடிவு போகிறது. ஆனால் எதிர் நீச்சல் பெண்கள் வாழ்க்கையில் ஜெயிக்கவில்லையே என்பது ரசிகர்களின் வருத்தமாகவும் இருக்கிறது.

சில வாரங்களுக்கு முன்பு கதிர் மற்றும் ஞானம் இருவரும் அண்ணனுடைய கேரக்டரை புரிந்து கொண்டு மனம் மாறி இருந்தார்கள். ஆனால் சீரியலில் கடைசியில் மீண்டும் அவர்களை வில்லன்கள் போல காட்டிவிட்டது. ஆண்கள் என்றால் வில்லன்களாக தான் இருப்பார்கள் என்று எதிர்நீச்சல் இயக்குனர் சொல்கிறாரா? என்ற கேள்வி எல்லோருக்கும் வருகிறது. காரணம் இந்த சீரியலில் ஜீவானந்தத்தை தவிர அதிகமான ஆண்கள் ஆண் ஆதிக்கம் உள்ளவர்களாகவும், ரவுடிகள் போன்று தான் காட்டப்பட்டுகிறார்கள்... எப்படியோ ஆரம்பத்தில் பெரிய அளவில் கலகலப்பாக இருந்த சீரியல் நாளையோடு முடிவடைவது ரசிகர்களுக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications