சூப்பர் ஹீரோ கீழே விழுந்த கதை.. ராமராஜன் ஸ்கெட்ச்.. பாக்யராஜ், ரஜினி போட்ட ரூட்.. விஜய் CM?: பிரபலம்
சென்னை: அரசியல் என்பது பொதுமக்கள் சம்பந்தப்பட்ட விஷயம்.. மக்களின் வாழ்க்கை பிரச்சனை.. அதற்குள் நுழைந்து எல்லாரும் சி.எம் ஆகணும்னு நினைக்கிறது எவ்வளவு பெரிய தப்பு? மக்களை கெடுக்க கூடாது.. அரசியல் தெரிந்தால் உள்ளே இறங்கலாம்.. ஆனால், எந்த தொழிலில் இறங்கினாலும், அந்த தொழிலுக்கு மரியாதை தந்துவிட்டு போனால்தான், ஜெயிக்க முடியும் என்று பிரபல டைரக்டர் வி.சேகர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Rednool யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள வி.சேகர், "அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வந்துவிடுவதா? எடுத்ததும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். வி சேகர் தந்த பேட்டியின் சுருக்கம் இதுதான்:

"நான் பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தபோது, மற்ற டைரக்டர்களின் அசிஸ்டென்ட்களுடனும் பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஒருநாள் ராமராஜனின் உதவியாளர் என்னிடம் "உங்க பாக்யராஜ் அரசியலுக்கு வரப்போகிறாராமே? கட்சி தொடங்க போகிறாரா? ராமராஜன் சார் கட்சியை ஆரம்பிப்பது முடிவாகிவிட்டது.. அவர்தான் சிஎம் ஆக போகிறார். எனவே பாக்யராஜ் காலி ஆயிடுவார்" என்றார்.
பாக்யராஜ், டி ராஜேந்தர், ராமராஜன்
உடனே இன்னொரு உதவியாளர், "சினிமாவில் சிஎம் ஆவதே தப்பு, இதுல போட்டி வேறயா" என்றார்.. அதற்கு டி.ராஜேந்தரின் உதவியாளர், "நம்ம தலைவர் அரசியலுக்கு ரெடியாயிட்டு இருக்காரு" என்றார். இப்படியெல்லாம் எங்களுக்குள் பேச்சு நடந்தது.
இதற்கு நடுவில், ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்க ஆசை இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.. அதேபோல, விஜயகாந்த்தும் கட்சியை ஆரம்பிச்சிட்டாரு.
ஆனால், எனக்கு என்ன கேள்வி என்றால், 10 வயசிலேயே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த காமராஜர், படிப்படியாக வளர்ந்து இந்தியாவில் மிகப்பெரிய தலைவராக உயர்ந்து, அதற்கு பிறகுதான் தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார்.. அறிஞர் அண்ணா , பெரியாரிடமிருந்து கற்று, அதற்குபிறகுதான் முதல்வர் ஆனார். இதற்கெல்லாம் மக்களின் கஷ்டங்களை உணர்ந்திருக்க வேண்டும்.. களப்பணி செய்திருக்க வேண்டும்..
அரசியல் அனுபவம் முக்கியம்
எம்ஜிஆரை பொறுத்தவரை நாடக காலத்திலிருந்தே நடித்து கொண்டிருக்கிறார்.. நாடோடி மன்னன் படங்களிலிருந்தே தன்னுடைய கருத்துக்களை சொல்லி வந்தார்.. சேவை புரிந்தும் வந்தார்.. 15 வருஷம் திமுகவில் இருந்து பயிற்சியையும் பெற்றார்.. ஆனால், இது எதுவுமே இன்று இல்லாமல் தமிழகத்தின் முதலமைச்சராக வேண்டும் என்று நினைத்தால், நாடு கெட்டு போய்விடாதா? என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது.
ஆனால், அந்தசமயம் திடீரென கட்சி ஆரம்பித்துவிட்டார் பாக்யராஜ்.. நான் சமுதாய விஷயம் அதிகமாக பேசுவதால், 5 பேர் கொண்ட கமிட்டியில் என்னையும் ஒரு நபராக சேர்ப்பதாக சொன்னார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். "சமுதாயமா? வி சேகரா என்றால், சமுதாயம்தான் முக்கியம். நீங்க சினிமாவில் நம்பர் 1 இடத்தில் இருக்கீங்க, மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும்போது அதிலேயே கவனம் செலுத்தலாமே .. அரசியலில் போய் மாட்ட வேண்டாம்" என்றேன்.
வருத்தப்பட்ட பாக்யராஜ்
அதற்கு பாக்யராஜ், "எம்ஜிஆருக்கு அடுத்த வாரிசு இல்லை..ஜெயலலிதா வருவதுகூட எம்ஜிஆருக்கு பிடிக்கலியாம், என்னை வாரிசு என்று எம்ஜிஆர் சொல்லி உள்ளதால், நான் அரசியலுக்கு வர விரும்புகிறேன்" என்று சொல்லி கட்சி ஆரம்பித்தார், கொடி ஏற்றினார்.. 6 மாதத்தில் செலவு அதிகரித்துவிட்டது.
ஒருநாள் ஒருவர் ஊரிலிருந்து போன் செய்து, நம்ம மன்றத்து நபரின் காலை வெட்டிவிட்டார்கள் என்றார்.. இதைக்கேட்டு அதிர்ந்த பாக்யராஜ் "என்னய்யா இது, அரசியல் என்றால் இப்படி கொலைக்காரர்களாக இருக்கிறார்களே" என்று வேதனைப்பட்டார். பின்னாளில் கட்சியையும் கலைத்துவிட்டார்.. என்னிடம், "நீ சொன்னது சரிதான்" என்றும் சொன்னார்.
சிறையில் இருந்த வஉசி, நேரு
எனவே, அரசியல் தலைவர்களாக உயர்வது கஷ்டம்.. வஉசி 30 வருடங்கள் சிறையில் இருந்தார்.. அவ்வளவு பெரிய தலைவர் நேரு, 12 வருடங்கள் சிறையில் இருந்தார். அரசியலுக்கு யார் வருவதாக இருந்தாலும், அதை முறைப்படி கற்று, பயின்று வரவேண்டும். முழுமையாக இறங்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின், 40 வருஷம் மேலாக அவரது அப்பாவுடன் இருந்துதான் வந்துள்ளார்.
அன்று அரசியலுக்கு வருவதாக சொன்னவர்களால், வரமுடியவில்லை.. ரஜினி அரசியலுக்கு வந்தாரா? விஜயகாந்த் நல்ல மனுஷன்தான், ஆனால், அரசியல் சூழ்ச்சிகளால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுவிட்டது.. சிவாஜி, பாக்யராஜ் எல்லாருமே திரும்பி வந்துட்டாங்க..
விஜய் எடுத்ததுமே CM என்றால்?
இப்போது விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலுக்குள் நுழைந்துள்ளார். இது தப்பில்லை. 10 வருடம் அரசியல் கற்றுக் கொள்ளட்டும். ஆனால் எடுத்ததுமே சிஎம் என்றால் காலி செய்துவிடுவார்கள்.. தலைமை பதவி நோக்கி போகலாம் என்று விஜயகாந்த் நினைக்கும்போதுதான், பாதிலேயே விஜயகாந்த் அரசியலை காலி செய்தார்கள்.
அரசியல் என்பது பொதுமக்கள் சம்பந்தப்பட்ட விஷயம்.. மக்களின் வாழ்க்கை பிரச்சனை.. அதற்குள் நுழைந்து எல்லாரும் சி.எம் ஆகணும்னு நினைக்கிறது எவ்வளவு பெரிய தப்பு? மக்களை கெடுக்க கூடாது.. அரசியல் முழுமையாக தெரிந்தால் உள்ளே இறங்கலாம்.. ஆனால், எந்த தொழிலில் இறங்கினாலும், அந்த தொழிலுக்கு மரியாதை தந்துவிட்டு போனால்தான், ஜெயிக்க முடியும் என்று பிரபல டைரக்டர் வி.சேகர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications