பிக் பாஸில் நடந்த மாற்றம்.. கமல் பாராட்டினார்.. இப்படி நடக்கும்னு நினைக்கல! கேப்ரில்லா ஓபன்
சென்னை: விஜய் டிவியில் குழந்தை நட்சத்திரமாக சீரியலில் அறிமுகமான கேப்ரில்லா இப்போது கதாநாயகியாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் ஃபிலிமிபீட் தமிழ் சேனலின் பேட்டியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது நடந்த மாற்றம் குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார்.
நடிகை கேப்ரில்லா 7c என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார். ஆனால் அதற்கு பிறகு நடிகர் தனுஷ் நடித்த திரைப்படத்திலும் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதுபோல சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார்.

பிக் பாஸில் எடுத்த முடிவு
ஈரமான ரோஜாவே சீரியல் முடிவடைந்ததும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலிலும் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கேப்ரில்லா கலந்து கொண்ட போது கடைசி நேரத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்காத செயலை செய்துவிட்டார். அதாவது இவர் இந்த நிகழ்ச்சியில் கடைசி வரைக்கும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் பணப்பெட்டி டாஸ்க்கில் சற்றும் எதிர்பார்க்காமல் 5 லட்சம் பணப்பெட்டியோடு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருந்தார்.
தெரியாத ரகசியம்
இந்த குறித்து சமீபத்தில் ஃபிலிமிபீட் தமிழுக்கு பிரத்தியோகமாக பேசி இருக்கிறார். அப்போது தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நடந்த மாற்றம் குறித்து பேசி இருக்கிறார். அதில், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கு கேமரா பயம் ஆரம்பத்தில் இருந்து இருக்கிறது. நான் என்னதான் சீரியலும், திரைப்படத்திலும் நடித்திருந்தாலும் என்னை அதிகமான கேமரா பார்க்கிறது என்றால் எனக்கு பயம் வந்துவிடும்.

மேடை பயம்
மேடையில் என்னால் பேச முடியாது. மேடையில் மைக்கை தந்தால் வணக்கம் மட்டும்தான் சொல்ல முடியும். அந்த அளவிற்கு பதட்டமாக இருப்பேன். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் அத்தனை கேமரா முன்பு தினமும் இருந்து பழகிவிட்டதால் எனக்கு அந்த கேமரா பயம் குறைய தொடங்கியது.
கமல்ஹாசன் பாராட்டு
அதுபோல நான் பணம் பெட்டியை எடுத்தது குறித்து பலர் பாராட்டினார்கள். சிலர் கடைசி வரைக்கும் இருந்திருக்க வேண்டும் என்று கூறி வந்தார்கள். ஆனால் நான் அந்த முடிவு எடுப்பதற்கு அதிகமாக யோசித்து தான் எடுத்தேன். வெளியே வந்த பிறகு கமல்ஹாசன் சார் கூட என்னை பாராட்டினார். சரியான நேரத்தில் நீங்கள் யோசித்து செயல்பட்டு இருக்கீங்க என்று சொன்னார். அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.

எதிர்பார்த்தது நடக்கவில்லை
நான் யோசித்து எடுத்த முடிவு நல்ல விஷயமாகத்தான் இருக்கிறது என்பது எனக்கு ஒரு பெருமையான சந்தோஷம் என்று கேப்ரில்லா கூறி இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கேப்ரில்லா சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர் மீண்டும் சின்னத்திரைக்கு வந்தது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தம் தான்.
அழுகை முடிந்தது
அதிலும் ஈரமான ரோஜாவே சீரியலில் ஒரே அழுகை காட்சியாக தான் இருந்தது. இவர் அழுது கொண்டிருப்பது குறித்து அதிகமாக ட்ரோல்களும் வந்தது. இவர் நிஜத்தில் அப்படி இல்லை என்றாலும் சீரியலில் மட்டும் இவருக்கு ஏன் இவ்வளவு அழுகை காட்சிகள் என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. ஆனால் இப்போது மருமகள் சீரியலில் இவருக்கு நல்ல கேரக்டர் கிடைத்திருக்கிறது என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் அவர் தற்போது திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அது குறித்த பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications