ஜெயிலர் 2 ஆடியோ லான்ச் ரத்தா? பின்னணியில் விஜய் அரசு? ரசிகர்களுக்கு வந்த ஷாக்!
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் 2 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. முதல் பாகம் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து உருவாகியிருக்கும் இரண்டாம் பாகம் அக்டோபர் 15-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதனால் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. குறிப்பாக இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு முக்கிய காரணம் முதல் ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச்.
முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய விஷயங்கள் அப்போது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன. ரஜினியின் பேச்சு என்றாலே அதில் ஏதாவது ஒரு குட்டிக் கதை, சினிமா அனுபவம் அல்லது அவர் மனதில் பட்ட விஷயம் இருக்கும் என்பதால், ஜெயிலர் 2 ஆடியோ லான்சிலும் அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே இருந்தது.
அதிலும் இப்போது ரஜினி ஒரு பக்கம், விஜய் அரசியல் களத்தில் இன்னொரு பக்கம் இருப்பதால், ரஜினி மேடையில் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் வைத்து சமூக வலைதளங்களில் விவாதம் உருவாகும் சூழல் இருக்கிறது. அதனால் ஜெயிலர் 2 ஆடியோ லான்ச் மேடை மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது வந்திருக்கும் புதிய தகவல்தான் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆடியோ லான்ச் இல்லையா?
முதலில் ஜெயிலர் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் முதல் வாரத்தில் சென்னையில் அக்டோபர் 2-ம் தேதி நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது தனியாக வழக்கமான ஆடியோ லான்ச் நடத்துவதற்கு பதிலாக வேறு மாதிரியான இசை நிகழ்ச்சியை படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுதான் 'Jailer 2 Rave'.
சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, செப்டம்பர் 30-ம் தேதி ஜெயிலர் 2 படத்தின் முழு இசை ஆல்பமும் வெளியாகிறது. அதே நாளில் 'Jailer 2 Rave' என்ற பெயரில் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. இதில் அனிருத் மற்றும் படத்தின் பாடல்களுடன் தொடர்புடைய பாடகர்கள், இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு பாடல்களை நேரடியாக வழங்கும் வகையில் நிகழ்ச்சி அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது வழக்கமான ஆடியோ லான்ச் மாதிரி ரஜினி, இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் என எல்லோரும் மேடையில் அமர்ந்து பேசும் நிகழ்ச்சியாக இல்லாமல், முழுக்க இசையை மையமாக வைத்த நிகழ்ச்சியாக இது இருக்கப்போகிறதாம்.
அப்போ ரஜினி பேச்சு?
இதுதான் இப்போது ரசிகர்களின் முக்கியமான கேள்வி. ஜெயிலர் 2 படத்தின் ஆடியோ லான்ச் நடந்தால் ரஜினிகாந்த் கண்டிப்பாக வருவார், அவர் என்ன பேசுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, தற்போது வெளியாகியிருக்கும் 'Rave' அறிவிப்பு கொஞ்சம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் இந்த நிகழ்ச்சி இசையை மையமாக வைத்திருப்பதால், ரஜினிகாந்த் கலந்து கொள்வாரா என்பது பற்றி படக்குழு இதுவரை தெளிவாக எதுவும் சொல்லவில்லை. அதனால் ரஜினியின் பேச்சு இருக்குமா, இல்லையா? என்பதற்கு இப்போதைக்கு அதிகாரப்பூர்வ பதில் இல்லை. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் இன்னொரு எதிர்பார்ப்பும் ஓடிக்கொண்டிருந்தது.
ரஜினி இப்போது பட விழாக்களில் பேசும்போது அவருடைய வார்த்தைகள் அரசியல் ரீதியாகவும் கவனிக்கப்படும் சூழல் இருக்கிறது. விஜய் அரசியலுக்கு வந்திருக்கும் நிலையில், இருவரையும் ஒப்பிட்டு பேசும் விவாதங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதனால் ஜெயிலர் 2 ஆடியோ லான்ச் நடந்தால், ரஜினி விஜய் பற்றி ஏதாவது பேசுவாரா? அல்லது விஜய்யை சுற்றி ஏற்கனவே பேசப்பட்டு வரும் சர்ச்சைகளுக்கு ஏதாவது விளக்கம் கொடுப்பாரா? என்றெல்லாம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அனுமதி மறுப்பு
ஆனால் இப்போது தனி ஆடியோ லான்ச் நிகழ்ச்சியே இருக்காது என்ற தகவல் வெளியாகியிருப்பதால், அந்த எதிர்பார்ப்புக்கே பெரிய கேள்விக்குறி வந்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த ஆடியோ லான்ச் நடத்த தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து படகுழு அறிக்கை வெளியானால் தான் உண்மை என்னவென்று உறுதியாக தெரியும்.


Click it and Unblock the Notifications
