எவனாலும் பண்ண முடியாததை பண்ற எனக்கு கர்வம் வரக்கூடாதா? காட்டு யானை என் பாட்டை ரசித்தது.. இளையராஜா
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா கர்வமானவர் என்று பரவி வரும் விமர்சனங்களுக்கு பதில் அளித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். யாராலும் பண்ண முடியாததை பண்ற எனக்கு கர்வம் வரக்கூடாது? என்னுடைய பாடல்களை கேட்டு மதம் பிடித்த யானை தூங்கி போனது, அதுபோல காட்டு யானை கூட்டம் என்னுடைய பாடலை கேட்பதற்காக தியேட்டருக்கு வந்தது என்று அந்த பேட்டியில் இளையராஜா பேசியிருக்கிறார்.
இசைஞானி என்று எல்லோராலும் கொண்டாடப்படும் இளையராஜா அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவருடைய பாடல்கள் பலருடைய மனதிற்கு இதமாகவும், பலருடைய வலியை போக்கும் மருந்தாகவும் இருக்கிறது. ஆனால் அவர் பேசும் வார்த்தைகள் சில நேரங்களில் பரபரப்பை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் அவர் செய்யும் சாதனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

திரைப்படங்களில் பிஸியாக பாடல்களை எழுதி இசையமைத்துக் கொண்டிருக்கும் இளையராஜா சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருந்தார். அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து பல ஊர்களில் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப் போவதாகவும் கூறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் 35 நாட்களில் சிம்பொனியை உருவாக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
சிலர் பல வருட கணக்காக சிம்பொனியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இளையராஜா 13 நாளில் சிம்பொனியை உருவாக்கி முடித்திருக்கிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் இளையராஜா இது பற்றி பேசும் போது, இதிலிருந்து நீங்கள் ஒன்று புரிந்து கொள்ளுங்கள் சார் வந்து சாதாரண ஆள் இல்லை என்று... ஆனால் வெளியில் உள்ளவர்களுக்கு இதைப் பற்றி போற்றுவதற்கோ புகழ்வதற்கோ மனசு வரல வயிறுதான் எரிகிறது.
எல்லோருடைய மனதும் மாசடைந்துவிட்டது என்று நான் சொல்லுவேன். மனம் திறந்து பாராட்டுவோம் என்ற எண்ணம் பலருக்கு வருவதில்லை. மனசு சுத்தமா இருந்தா தானே வெளியில் தெரியும்? அப்படி யாருக்குமே இல்லை. ராஜா சார் ராஜா சார் தான் என்று இன்னும் நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் வேற வழி இல்லை.
இப்போது வரும் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூட நான் போட்டி போட செய்வேன். இப்போது உள்ள இளைஞர்கள் பலர் அவர்களுக்கு என்று எந்த திறமையும் உருவாக்கிக் கொள்ளாமல் அதை சாதித்து விட்டேன், இதை சாதித்து விட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஹார்மோனியம் அறிமுகப்படுத்தியது, மெலோடி அறிமுகப்படுத்தியது என எத்தனையோ அம்சங்களை நான் செய்திருக்கிறேன்.
உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் தெரியாது அதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். என்னுடைய பாடலை கேட்க காட்டு யானை கூட்டம் தியேட்டருக்கு வந்திருக்கிறது. ஒரு மலைப்பிரதேசத்தில் மலை பக்கத்தில் உள்ள ஒரு ஊரில் தியேட்டரில் ஒரு படம் தொடர்ந்து ஆறு வாரம் ஒளிபரப்பாகி இருக்கிறது.
அந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட பாட்டு கேட்பதற்காக யானை கூட்டம் வயல் வரம்புகளையும், வாழை தோட்டத்தையும் எதுவும் செய்யாமல் கூட்டமாக தியேட்டர் வாசலில் வந்து நிற்கிறது. பிறகு பாட்டு முடிந்ததும் அதுபோல எந்த இடையூறும் செய்யாமல் மீண்டும் காட்டுப்பகுதிக்கு சென்று இருக்கிறது. அது என்ன பாட்டுன்னா "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு" என்ற பாட்டு தான். இது உலக சரித்திரத்திலேயே நடக்காத நிகழ்வு.
வேற எந்த ஒரு இசையமைப்பாளரின் பாடலுக்காக இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்ததா? உலகத்தில் சரித்திரத்தில் எந்த சிறந்த கம்போஸர்களின் வாழ்க்கையிலும் இப்படி நடந்தது உண்டா? ஒரு குழந்தையின் உயிர் வந்ததும், ஒரு யானை கூட்டம் பாட்டை கேட்டு போனதும், மதம் பிடிக்க வந்த ஒரு யானை பாட்ட கேட்டு தூங்கியதும் எங்காவது நடந்திருக்கா?
இந்த இசையில் ஏதோ ஒரு அப்பாற்பட்ட சக்தி இருக்கிறது என்று கேட்கிறார்கள். இதை நான் சொன்னால் அவருக்கு ரொம்ப தலைக்கனம் என்ற முத்திரை குத்தி விடுவார்கள். எனக்கு வராம வேற யாருக்குடா கர்வம் வரும்? எனக்கு தான் இந்த திமிரு ஜாஸ்தியா இருக்கணும்.. ஏன்னா இந்த உலகத்துல யாரும் செய்யாததை நான் செய்து கொண்டிருக்கிறேன்.
உலகத்தில் யாரும் செய்ய முடியாததை நான் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு திமிரு இல்லாமல் எப்படி இருக்கும் இதையெல்லாம் நினைக்கும்போது எனக்கு திமிர் வருமா? இல்லையா? ஆனா எனக்கு திமிர் இல்ல.. வெளியில் இருந்து சொல்றாங்க எனக்கு திமிர் இருக்குன்னு. அப்போ அவனுக்கு எவ்வளவு திமிரு இருக்கும்?
நான் பாட்டுக்கு என் வேலையை பார்த்துக்கிட்டு நீ என்ன வேணும்னாலும் பேசிக்கோனு நான் என் வேலையை பார்த்துட்டு இருந்தா ரொம்ப கர்வம் ஜாஸ்தி டா என்று சொல்றாங்க. கர்வம் எப்ப வரும்? நல்லதா ஒரு வேலையை பண்ணிட்டா உனக்கு கர்வம் வரும். நீ ஒண்ணுமே பண்ணாம அவருக்கு மட்டும் கரர்வம் இருக்குன்னு சொன்னா.. எப்படி? என்று இளையராஜா கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications