புன்னகை மன்னன் படத்தில் எந்த நடிகரும் நடிக்க தயங்கும் அந்த காட்சி! அசத்திவிட்டார் கமல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "புன்னகை மன்னன்" திரைப்படத்தில் சிறையில் அடி வாங்கும் போது வாய் வீங்கி எச்சில் வரும் காட்சியில் கமல்ஹாசனை விட்டால் வேறு யாருமே நடித்திருக்க மாட்டார்கள் என அவரது ரசிகர்கள் இன்றும் தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: "புன்னகை மன்னன்" படத்தைப் பற்றி சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் பேசும் வீடியோ பார்க்க நேரிட்டது.

television kamal haasan

உடனே மனம் நொஸ்டால்ஜிக் நினைவுகளுக்குப் போய் விட்டது. புன்னகை மன்னன் ஒரு 'வாவ்' படம்.
ஃபேன் பாய்கள் படம் எடுப்பது என்பதை முதலில் துவக்கியது பாலச்சந்தர் தான். கமலின் பெரிய Fan boy கே.பி சார் தான். அதிலும் புன்னகை மன்னனை அவர் இயக்கிய விதம், வைக்கப்பட்ட திரைக்கதை அட்டகாசம்.

மரோசரித்ராவில் காதலர்கள் தற்கொலை செய்வதால் இதில் காதலர்களுக்கு தற்கொலை முடிவல்ல என பாஸிட்டிவ்வாக எடுத்ததாக சொல்வதுண்டு. இந்தப் படம் வரும் போது கே.பி ரசிகனா இருந்த எங்களுக்கு வேறொரு முக்கிய விஷயம் என்னவென்றால் ஹீசைனி. எங்கள் நட்பு வட்டத்தில் உள்ள ஐந்தாறு நண்பர்களுக்கு அப்போது மாஸ்டர் ஹுசைனி தான்.

அவர் வில்லனாக அதுவும் கமலுக்கு வில்லனாக நடிக்கிறார் என்பதற்காக FDFS பார்க்கப் போனோம். படத்தில் ஏகப்பட்ட அதிர்ச்சிகள் இருந்தன.
முதல் அதிர்ச்சி. ரேகா. கடலோரக் கவிதைகளில் பார்த்த ரேகா கமலுக்கு ஜோடி. போஸ்டர்களில் ரேகா பற்றி இல்லை. இரண்டாவது கமலின் சாப்ளின் வேடம். அதைப் பற்றியும் வெளியே ஒரு செய்தியும் முதலில் இல்லை.

television kamal haasan

கமல் முதல் காட்சியில் தற்கொலை செய்யும் முன்பு ஒரு பாடல். அந்த நான்கு நிமிடத்தில் கமல் ரேகாவுடனான மிச்ச சொச்ச வாழ்க்கையை வாழ முயற்சிருத்திருப்பார். ஓடி ஆடி களைத்ததும் பசி எடுத்துவிடும். சாகப் போகிறோம்... எதற்கு இப்போது சாப்பாடு என நினைக்க மாட்டார்.

ஒரு காட்டிலுள்ள சிறுமியிடம் உணவு வாங்கி அதை வேகவேகமாக விழுங்குவார். பசி சாவை விட முதன்மையானது.. கொடுமையானது. இந்தக் காட்சி நமக்கு உணர்த்துவது இதையே. ரேகாவை திருமணம் செய்து, முதலிரவைக் கொண்டாடி, ரேகாவுக்கு தலை சீவி பொட்டு வைத்து ஹேர்பின் மாட்டி எல்லாம் செய்தாலும் ஒரு காரியம் செய்வார் பாருங்கள்.

ஒரு உடையில்லா மீன் பிடிக்கும் ஆளுக்கு தன் ப்ளேசரை தானமாக கொடுப்பார். அந்த தருமம் தான் அவர் தலையை காப்பாற்றும். வேறொரு பக்கத்தில் பார்த்தால் ப்ளேசர் இல்லாததால் ஷர்ட் கிளையில் மாட்டி அவர் தொங்க நேரிடும்.

television kamal haasan

சிறையில் அடிபட்டு வாய் வீங்கி கமல் பேச வேண்டும். அப்போது வாயிலிருந்து நிஜமாகவே எச்சில் ஒழுகும். வேறொரு நடிகன் இந்தக் காட்சியை சிந்தித்திருக்கவே மாட்டான். ரியலிஸத்துக்கு அருகில். கமல் ஒரு கடைக்குப் போக அங்கு ஒரு குழந்தை என் உயரத்துக்கு வர முடியுமா? எனக் கேட்க கமல் "இங்கப்பார்... இங்கப்பார்" என குள்ளக் கமலாக மாறி வருவது ஓகே.

அதற்காக தன் குரலைக் கூட மாற்றிக் கொண்டே வந்து குழந்தைக் குரலில் சிரிப்பார். அது தான் ஸ்பெஷல்.
மாமாவுக்கு குடுமா பாடலில் இரண்டு வித ஸ்பீட்களில் எடுத்து அதை இணைத்தது என்பது ஆச்சர்யமான விஷயம். அதோடு ரேவதி நார்மலாக கையசைக்கும் போது கமல் ஸ்பீடாக செய்ய வேண்டும்.

இதற்காக ரேவதிக்கு தான் கமலை விட ஸ்பெஷல் ட்ரெயினிங் தேவை.
அந்த தண்ணீர் கலங்கி பின் கமல் தெரியும் ஷாட். ஆஹா... நடிப்பு, டைரக்ஷன்னு நீங்க மட்டும் தான் ஸ்பெஷல் காட்டுவீங்களா?. நானும் காட்டுகிறேன் என ரகுநாத ரெட்டி களத்தில் குதித்த காட்சி.

ஒரு சிறுவன் அழுவதை நிறுத்த கமல் தலைகீழாக வேரைப்பிடித்து தொங்கிக் காட்ட அவன் சிரிக்கிறான். கமல் இறங்கியதும் அவன் அழ ஆரம்பிக்க கமல் அதற்காக தொங்கிக் கொண்டே இருப்பதும் அங்கே வரும் ஸ்ரீவித்யா ஒரே அறையில் அதை நிறுத்துவது பல விஷயங்களை நாம் அணுகும் முறைக்கான ஸ்பெஷல்.

television kamal haasan

ஒரிஜினல் கதைப்படி ரேவதியும் காதல் தோல்வியடைந்தப் பெண். அவர் காதலனாக ரமேஷ் அரவிந்த் அறிமுகமாக முடிவாகி கடைசியில் பரிட்சையில் ஃபெயிலானதால் தற்கொலை செய்து கொள்ள வருவதாக கதை மாறியதால் ரமேஷ் அர்விந்த்தால் நடிக்க முடியவில்லை.

ஹுசைனியும், சுந்தரும், 'மாலினி... மாஸ்டர் எப்படி பேசுவாரு...' எனக் கேட்கும் ஷர்மிலியும், கோபக் கவிதை பேசும் சிலோன் விஜயேந்திரனும், 'அலுத் அவுரத்த சுபபட்டும' மற்றும் விஜயச்சந்திரிகாவின் 'மாலினி தவத்தின்னவா'வும் ரொம்ப நாள் எங்கள் நெஞ்சில் நிழலாடினார்கள்.

கமலை சிரிக்கச் சொல்லும் ரேகாவின் நடிப்பையும், கமலைப் போல் சிரித்தும் அடிக்கடி செய்து பார்த்தோம். டான்ஸ் ஸ்டெப்களுக்காக நான்கு முறை இப்படத்தை நான் பார்த்தேன் என்பது எனக்கே ஆச்சர்யம். One, two, three, four, five பாடல் ரொம்ப பிடித்த பாடல். ராஜாவின் குழுவிலிருந்த விஜி மானுவேல் எழுதிய ஆங்கிலப் பாடல். கமலுக்கு பின்னால் ஆடும் ஜான் பாபு பின்னாளில் தனி மாஸ்டராகி 'குறுக்குப் பாதையிலே' என பாடி ஆடி பெரும் புகழ்பெற்றார்.

வான்மேகம் பாடலின் திரைமொழி அட்டகாசமாக இருக்கும். Singing in the rain படத்திலிருந்து உருவப்பட்டிருந்தாலும் காட்சியமைப்பு சுந்தரம் மாஸ்டரின் நடன அசைவுகளோடு அவரும் தோன்றி ஒரு ஸ்டெப் போட இந்த நடனத் திரைக்கதையை பின்னாட்களில் பிரபுதேவா பல படங்களில் பின்பற்றினார்.

காலகாலமாக பாடல் அழகான நடனம். அதோடு கமல் காதல் வெளியாகும் அந்த தீம் மியூஸிக்...அடடா..ஒரு ஃபேன் பாய் டைரக்டர் தன் ஆஸ்தான நடிகனுக்கு இதற்கு மேல் என்ன காட்சி வைக்க வேண்டும்?. காதலை உள்ளேயே பூட்டி வைக்கும் கமலிடமிருந்து அது வெளியானதும் ரேவதி ஒரு மூவ்மெண்ட் கொடுப்பார் பாருங்கள்...அடடா...
கமலின் தந்தையாக டெல்லிகணேஷ் அதகளம் பண்ணி இருப்பார்.

television kamal haasan

சீட்டாடி தகராறு செய்யும் காட்சியில் அவர் நடிக்கிறாரா, நிஜமா என தோன்ற வைத்து விடுவார். அழகான பையன் உள்ள அப்பாவின் ஜம்பம்.
கே.பி சாருக்கு அவரையே சிலையாக வடித்து மனதில் இடம் பிடித்த வாய்ப்பு சென்ஸார் கத்திரிக்கோலால் நஷ்டப்பட்ட ஹுசைனிக்கு அடுத்தடுத்து வேலைக்காரன், உன்னைச் சொல்லி குற்றமில்லை என இரு படங்களில் வாய்ப்புக் கொடுத்து உதவினார்.

ஆனாலும் ஹுசைனி ஷோபிக்க முடியவில்லை. பின்னாளில் திருட்டு விசிடி ஸேஃப்டி கார்ட் கம்பெனி தொடங்கி 'இந்தியன்' படம் திருட்டு விசிடி வெளிவராமல் தமிழ்நாடு முழுவதும் பாதுகாத்தார் ஹுசைனி. பின் ஜெயலலிதா ரத்த ஓவியம் என்றெல்லாம் என்னென்னவோ செய்து செய்திகளில் வந்து கொண்டிருந்தார் அவர்.

பின் அவர் பாதை வேறு எங்கோ போய்விட்டது. மற்றொரு நடிகன் சுந்தருக்கு முப்பது வருடங்களில் இப்போது வாய்ப்பு வந்திருக்கிறது. பாஸிட்டிவ் செய்தி சொல்லப் படம் எடுத்து சிலோன் பிரச்சினை காட்சிகளால் கன்ட்டினியூட்டி போய் க்ளைமேக்ஸில் மரோசரித்ரா போலவே காதலர் சாவதாக படத்தை முடிக்க வேண்டி வந்தது கே.பி சாரின் துரதிர்ஷ்டம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+