Kavin: பத்து நிமிஷத்தில் விஜய் சேதுபதி செய்த உதவி! மிஸ்கின் கொடுத்த பெயர்! எமோஷனலாக பேசிய கவின்
சென்னை: நடிகர் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி ஜோடியாக நடித்திருக்கும் கிஸ் திரைப்படம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கவின் பேசிய பல சுவாரசியமான தகவல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

யார் இந்த கவின்
விஜய் டிவியில் ஒரு தொகுப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கிய கவின், பிறகு நடிகராக உயர்ந்தவர். சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்து, சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதிலும் குறிப்பாக, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனது இயல்பான பேச்சு மற்றும் விளையாட்டுத் திறன் மூலம் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்த கவின், நட்புன்னா என்னானு தெரியுமா, லிப்ட், டாடா போன்ற படங்களில் நடித்து, நடிகர் என்ற தனது அடையாளத்தை வலுப்படுத்திக்கொண்டார். இவருடைய தன்னம்பிக்கை பேச்சுக்கள், இளைஞர்களுக்கு எப்போதும் உத்வேகம் கொடுப்பதாக இருக்கும். "எல்லோருக்கும் லக் வரும், நமக்கு லக் வந்தா அதை வெச்சு என்ன செய்யணும்னு தெரிஞ்சிருக்கணும்" என்று அவர் பேசியது, பந்தா இல்லாத அவருடைய இயல்பான பேச்சை காட்டியது.
கிஸ் படத்திற்கு மிஷ்கின் கொடுத்த தலைப்பு
கிஸ் திரைப்படத்தின் தலைப்பைப் பற்றி பேசிய கவின், இந்தப் படத்திற்கு இந்தத் தலைப்பு கிடைத்தது ஒரு முக்கியமான விஷயம் என்று கூறினார். "இந்தத் தலைப்பை இயக்குநர் மிஷ்கின் சாரிடமிருந்துதான் கிடைத்தது. அவரிடம் கேட்டதும், எந்தத் தயக்கமும் இல்லாமல் ஒப்புக்கொண்டார். இந்தத் தலைப்பு எல்லோருக்கும் தங்களுடைய ஒரு தனிப் பொருளைக் கொடுக்கும். அந்த நம்பிக்கையுடன் மிஷ்கின் சார் இந்தத் தலைப்பை வழங்கியது நிஜமாகவே மிகப் பெரிய விஷயம்" என்று கவின் நெகிழ்ந்து பேசியுள்ளார்.
மேலும், இந்தப் படத்தின் வாய்ஸ் ஓவர் கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி குறித்தும் கவின் பேசினார். "யார் பேசினா கதைக்கு உயிர் வரும் என்று யோசித்தபோது, உடனே எங்களுக்குச் சேது அண்ணாதான் நினைவுக்கு வந்தார். அவரது இயல்பான பேச்சு நடை, கதையின் உணர்வோடு பொருந்திப் போகும். அவரைச் சந்தித்துச் சொன்ன பத்து நிமிடங்களுக்குள் டப்பிங்கை முடித்து, தனது பிசியான ஷெட்யூல் மத்தியிலும் இதற்கு நேரம் ஒதுக்கித் தந்தார்" என்று விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications