ஜெயச்சந்திரனுக்கு தமிழ் மொழி மேல இவ்ளோ காதலா? சூப்பர் ஹிட் பாடல்களை தந்த பாடகர் ஜெயச்சந்திரன் யார்?
சென்னை: தமிழ் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 14000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் ஜெயச்சந்திரன்... 80 வயதான இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நம்மை விட்டு பிரிந்துவிட்டார். யாரிந்த ஜெயச்சந்திரன்?
சிறு குழந்தையிலேயே இசையின் மீது ஆர்வம் கொண்டவரான ஜெயச்சந்திரனுக்கு, அன்னை, தந்தை, குருவாக விளங்கியவர் அவரது அண்ணன் சுதாகரன்தான்.. புகழ்பெற்ற பாடகர் யேசுதாஸின் நெருங்கிய நண்பராக இருந்தவர் சுதாகரன்.
தான் படித்த பள்ளியின் இசை ஆசிரியர் கேவி ராமநாதனிடமே சங்கீதம் முற்பபடி கற்றார் ஜெயச்சந்திரன்.. 6 வயதிலேயே மிருதங்கம் வாசிக்கவும் கற்றுக் கொண்டார். பல்வேறு இசைப்போட்டிகளில் பங்கேற்று, பரிசுகள் இல்லாமல் வீடு திரும்ப மாட்டாராம் ஜெயச்சந்திரன். 1958-ல் 14 வயதில், மாநில பள்ளி சிறுவர்களுக்கான இசைப்போட்டிகளில் கலந்து கொண்டு, சிறந்த மெல்லிசை பாடகர் மற்றும் சிறந்த மிருதங்க கலைஞர் எனவும் இரட்டிப்பு பரிசினை ஒரே மேடையில் பெற்றார்..

அத்துடன், தான் செல்லும் தேவாலயங்களிலும் பக்தி பாடல்களை பாடி வந்துள்ளார். இளங்கலை படித்து முடித்ததுமே சென்னைக்கு பாடுவதற்கு வாய்ப்பு தேடியிருக்கிறார். ஆனால் எந்த வாய்ப்பும் கிடைக்காமல் பாரிமுனையில் நிறுவனம் ஒன்றில் கெமிஸ்ட்டாக வேலையில் சேர்ந்துள்ளார்.
பாடல் வாய்ப்புகள்: பிறகு 1965ம் ஆண்டு இந்தியா- பாக் போர், எல்லை பாதுகாப்பு பணிக்காக நிதி திரட்ட ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில், எம்பி சீனிவாசன் இசையில் முதல்முதலாக பாட வாய்ப்பு கிடைத்துள்ளது.. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல டைரக்டரும், ஒலிப்பதிவாளருமான வின்சென்ட், உடனடியாக மலையாள படத்தில் ஜெயச்சந்திரனுக்கு பாட வாய்ப்பு வாங்கி தந்துள்ளார்.
1967-ல் பிரேமா என்ற பாடகியுடன் இணைந்து முதன்முதலாக மலையாளத்தில் பாடினார்.. அடுத்தடுத்த பாடல்களால் மலையாள மக்களின் மனதில் இடம்பிடித்ததுடன், கேரள மாநில அரசின் சிறந்த பின்னணி பாடகருக்கான விருதையும் பெற்றார்.
தமிழ் ஆர்வம்: ஜெயச்சந்திரன் குரல் பிடித்துவிட்டதாலும், ஜெயச்சந்திரனுக்கு தமிழ் மீதுள்ள ஆர்வத்தை கண்டும் திகைத்துப்போன, எம்எஸ் விஸ்வநாதன், 1973ம் ஆண்டு, அலைகள் மற்றும் மணிப்பயல் என்ற இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் பாட வாய்ப்பு தந்து, தமிழில் அறிமுகப்படுத்தினார்.. பொன்னென்ன, பூவென்ன என்ற ஜெயச்சந்திரனின் முதல் தமிழ் பாடல், பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.
ஜெயச்சந்திரனுக்கு, எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் இவர்கள் 3 பேரையுமே மிகவும் பிடிக்குமாம். இவர்களது 3 பேரின் படங்களையும கேரளாவில் பார்த்துதான், தமிழ் மொழி மீது ஆர்வம் அதிகமாகி இருக்கிறது. பிற மொழி கலைஞர்கள், தமிழில் பாட நேர்ந்தால் அவரவர் தாய்மொழியிலேயே எழுதி வைத்து பாடுவார்கள்.. ஆனால், ஜெயச்சந்திரன் மட்டும், தான் பாட போகும் பாடலை தமிழிலேயே எழுதி கொடுக்கும்படி கேட்பாராம்.
இளையராஜா: எம்எஸ்விக்கு இளையராஜா, ஜெயச்சந்திரன் குரலை சரியாக பயன்படுத்தி கொண்டார்.. 80களில் வெளிவந்த இளையராஜா பாடல்களில் பெரும்பாலும் அனைத்து பாடலகளுமே ஹிட்டடித்தன.
முதல்முதலாக 'காற்றினிலே வரும் கீதம்' படத்தில் பாடிய 'சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்' பாடலும், கிழக்கே போகும் ரயிலின் 'மாஞ்சோலைக் கிளிதானோ' பாடலும் இன்றுவரை அனைவராலும் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.. பூவை எடுத்து, கொடியிலே மல்லியப்பூ போன்ற பாடல்கள் இன்னும் நூறறாண்டுக்கு ஒலிக்கக்கூடிய பாடல்களாகும்.
1975ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமானின் அப்பா சேகர் இசையமைத்த 'பெண்படா' என்ற மலையாள படத்தில், "வெள்ளி தேன் கிண்ணம் போல்" என்ற பாடலை ஜெயச்சந்திரன் பாடினார். இதுதான் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த முதல் பாடல் என்று கருதப்படுகிறது.. சோகம், காதல் பாடல்கள், ஜெயச்சந்திரனுக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது கூடுதல் பிளஸ் ஆகிவிட்டது. அதனால்தான், ஏஆர் ரஹ்மானின் ஆரம்ப கால படங்கள் கிழக்கு சீமையிலே, மே மாதம் உள்ளிட்ட படங்களில், வண்டி மாடு எட்டு வச்சு, என் மேல் விழுந்த மழைத்துளியே உள்ளிட்ட பாடல்களை பாடவைத்தார்
சோக பாடலகள்: ஏஆர்.ரகுமானுக்கு பிறகு எஸ்ஏ ராஜ்குமாரும், ஜெயச்சந்திரனின் குரலுக்கேற்ற சோகம் + காதல் டைப் பாடல்களை அதிகமாக தந்து, தங்கள் படங்களில் மிக நேர்த்தியாக பயன்படுத்தி கொண்டார்.
'ஒருதலை ராகம்' படத்தில் 'கடவுள் வாழும் கோவிலிலே,' 'இரயில் பயணங்களில்' படத்தில் 'வசந்த காலங்கள்' ஆகிய பாடல்கள் டி.ராஜேந்தரின் இசையில் ஜெயச்சந்திரன் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை. தென்னிந்திய மொழிகளில் மட்டுமன்றி இந்தியிலும் ஜெயச்சந்திரனின் குரல் ஒலித்திருக்கிறது என்பதை இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது.
எம்எஸ்வி தொடங்கி, இளையராஜா, சங்கர் கணேஷ், தேவா, வித்யாசாகர், ஏஆர் ரகுமான், எஸ்ஏ ராஜ்குமார், ஜி. வி. பிரகாஷ் வரை, தலைமுறை தலைமுறைகளாக பணியாற்றி, ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை யாராலும் மறக்க முடியாத அளவுக்கு திகட்ட திகட்ட தந்துள்ளார் ஜெயச்சந்திரன்..
விருதுகள்: எத்தனையோ விருதுகள், பாராட்டுகளை பெற்றாலும், தன்னை வளர்த்து உயரத்தில் ஏற்றிவிட்ட அண்ணன் சுதாகரனின் மரணம், ஜெயச்சந்திரனை நிறையவே உலுக்கிவிட்டதாம்.. இந்த இழப்பிலிருந்து அவரால் நீண்ட காலத்துக்கு வரமுடியவில்லையாம்.. அந்த அளவுக்கு ஆறாத வடு, ஜெயச்சந்திரனின் மனதில் நிரந்தரமாகவே தங்கிவிட்டதாகவும், தன்னுடைய அண்ணன் மறைவுக்கு பிறகு, மற்றொரு அண்ணனாக விளங்கியவர், பாடகர் ஜேசுதாஸ் என்பதை அடிக்கடி நன்றியுடன் கூறுவாராம் ஜெயச்சந்திரன்.
பாடிய பாடல்களிலெல்லாம் வெற்றி கண்டவர் என்று கமல்ஹாசனும், "மனித உணர்வின் அனைத்து நிலைகளுக்கும் அவரது குரல் மிகப் பொருத்தமாக அமைந்தது. அலைகள் திரைப்படத்தின் "பொன்னென்ன பூவென்ன கண்ணே" பாடல் தொடங்கி அவர் பாடிய பாடல்களில் உள்ள குழைவுத்தன்மை நம்மை கட்டிப்போட்டு விடும்" என்று தங்கர் பச்சனும் தங்களின் கண்ணீர் அஞ்சலியில் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications