தாலியை தந்ததுமே அரண்ட இளையராஜா.. உத்தரத்திலிருந்து விழுந்த மூகாம்பிகையின் துண்டு பேப்பர்! சிலிர்ப்பு
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா சினிமா உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி தமிழக அரசு சார்பில் இன்று மாலை இளையராஜாவுக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' என்ற பெயரில் பாராட்டு விழா நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இப்பாராட்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்துகிறார். கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.. இந்த விழாவை வரவேற்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "இசைஞானி இளையராஜா பணத்தாசை பிடித்தவர் என்பது பெரும்பாலானோரின் கருத்து.. ஆனால் பலரும் அறியாத இன்னொரு முகம் இளையராஜாவுக்கு உண்டு,..

முதலமைச்சர் தலைமையில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.. ஆயிரம் விமர்சனங்கள் இளையராஜா மீது தனிப்பட்ட முறையில் வைக்கலாம்.. இந்திய சினிமாவுக்கு, உலக சினிமாவுக்கு நம்முடைய தமிழரான இளையராஜா மிகப்பெரிய விஷயம்.. இன்றுவரை பலரது தூக்கத்துக்கு காரணமே இளையராஜாவின் பாட்டுக்கள்தான்..
இசையின் உச்சம் இளையராஜா
எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தாலும் இளையராஜாவே உச்சமாக இருக்கிறார்.. 80களிலிருந்து 2000ம் வரை கொடிகட்டி பறந்தார்.. பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவை பார்ப்பதற்காக, உற்சவர் வரும்போது நிற்பதை போல அனைவரும் திரண்டு நிற்பார்கள்..
அவர் நடந்து சென்றால், தட்டில் சூடம் ஏற்றிகாட்டுவார்கள்.. இளையராஜா அந்த கூட்டத்தில் யாரை பார்க்கிறாரோ, அவருக்குதான் படத்தில் இசையமைத்து தருவார். அந்த அளவுக்கு இளையராஜாவின் கால்ஷீட்டுக்காக பலரும் காத்திருந்தனர்.. தமிழ் என்றில்லாமல், தெலுங்கு சினிமாக்காரர்கள், வடமாநிலத்திலிருந்தெல்லாம் வந்து பிரசாத் ஸ்டுடியோவில் காத்து கிடப்பார்கள்..
நாத்திகவாதி இளையராஜா
இளையராஜாவின் ஒரு மியூசிக் நோட்ஸ் ஹங்கேரியில் கிடைத்திருக்கிறது.. அங்கிருப்பவர்கள் அந்த நோட்ஸுக்கு இசையமைத்துவிட்டு, அரங்கில் எழுந்து நின்று கை தட்டுகிறார்கள்.. இத்தனைக்கும் இளையராஜா யார்? எப்படி இருப்பார்? எங்கே இருக்கிறார்? என்றெல்லாம்கூட அவர்களுக்கு தெரியாது.
கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு 8 கோடி தந்துள்ளார் இளையராஜா.. ஆரம்பத்தில் நாத்திகவாதியாக, கடவுள் மறுப்பாளராக இருந்தவர் இளையராஜா.. கம்யூனிஸ பாடல்களுடன், நாத்திகமும் கலந்துவிட்டது.. பிறகுதான் ஜிகே வெங்கடேஷ் போன்ற பக்தியம்சம் கொண்ட இசையமைப்பாளர்களுடன் பணியாற்ற துவங்கினார்.
கொல்லூர் மூகாம்பிகை ரூ.8 கோடி
அப்போது ஒரு கன்னட படத்துக்கு இசையமைப்பதற்காக மைசூர் சென்றிருந்தபோது, இளையராஜாவுக்கு கடுமையான காய்ச்சல் வந்துள்ளது.. இதனால் தன்னுடன் வந்த இசைக்கலைஞர்களை பெங்களூரை சுற்றி பார்க்க அனுப்பி வைத்த ஜிகே வெங்கடேஷ், அறையில் காய்ச்சலுடன் படுத்து கிடந்த இளையராஜாவிடம் வந்துள்ளார்.. அப்போதுதான், உடனே கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு போகலாம் என்று சொல்லி இளையராஜாவை அழைத்துள்ளார்.
அந்த கோயிலுக்குள் நுழைந்த போது, ஒரு மின்னல் போல ஏதோ ஒன்று தனக்குள் பாய்ந்ததாகவும், அப்போதுதான் தன்னுடைய வாழ்வில் பல அற்புதங்கள் நடந்தது என்றும் சொல்கிறார் இளையராஜா.
தாய் மூகாம்பிகை
அதேபோல தன்மீதான அனைத்து விமர்சனங்களையும் மாற்றியது தாய் மூகாம்பிகைதான் என்கிறார்.. தாய் மூகாம்பிகை படத்தில் ஜனனி ஜனனி பாடலை எழுதியபோது, அதற்கு பல்லவி எழுத வரவில்லையாம்.. அப்போது உத்தரத்திலிருந்து விழுந்த ஒரு துண்டு சீட்டில் ஸ்வரம் இருந்ததாகவும், அந்த ஸ்வரத்தை வைத்துதான் அந்த பாடலை எழுதியதாகவும் இளையராஜா சொல்வார்..
பொதுவாக ஆன்மீகத்தில் அனைவருக்குமே ஒவ்வொரு குரு இருப்பார்கள்.. அந்தவகையில் தனக்கும் குரு யாரையாவது காட்டும்மா என்று மூகாம்பிகையிடம் இளையராஜா கேட்டாராம்.. அப்போது குருவாக தனக்கு மூகாம்பிகை காட்டியது ரமணரைதான் என்கிறார் இளையராஜா. இப்படியெல்லாம் தனக்கு மூகாம்பிகை தந்ததை, இப்போது திருப்பி மூகாம்பிக்கைக்கே கிரீடமாக தருகிறேன் என்கிறார்.
மனைவியின் தாலி
கேரள மாநில அரசு, இளையராஜாவை கொண்டாடுகிறது.. முதல்வர் முதல் அத்தனை பேரும் எழுந்து நின்று இளையராஜாவுக்காக கை தட்டுகிறார்கள்.. இளையராஜா பணத்தாசை பிடித்தவர் என்கிறார்கள்.. ஆரம்ப காலத்தில் பல பேருக்கு காசு வாங்காமலேயே இசையமைத்து தந்துள்ளார்..
ஒருமுறை தன்னுடைய படத்துக்கு இசையமைத்து முடித்துவிட்ட இளையராஜாவுக்கு சம்பளம் தருவதற்கு ஒரு தயாரிப்பாளரிடம் பணம் இல்லையாம். அதனால் தன்னுடைய மனைவியின் தாலியை கொண்டு வந்து தந்துள்ளார்.. உடனே இளையராஜா, அந்த தாலியை முதல்ல எடுத்துட்டு போயிடு.. பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இலவசமாக இசையமைத்து தருகிறேன் என்று சொல்லிவிட்டாராம்.












Click it and Unblock the Notifications