தேவாவின் சகோதரர் 'சபேஷ்-முரளி'யின் ஹிட் பாடல்கள்! உடல் மறைந்தாலும் நீண்டு நிற்கும் கூட்டு உழைப்பின் புகழ்
சென்னை: தமிழ் திரையுலகின் 'தேனிசைத் தென்றல்' தேவாவின் பல வெற்றிப் பாடல்களுக்குப் பின்னால், அவருடைய சகோதரர்களான சபேஷ் மற்றும் முரளியின் பங்களிப்பு இருந்தது என்பதை இசை ரசிகர்கள் நன்கு அறிவார்கள். இந்நிலையில், இசையமைப்பாளரும், தேவாவின் சகோதரருமான சபேஷ் காலமான துயரச் செய்தி வெளியாகி உள்ளது.
சபேஷ் தனது சகோதரர் முரளியுடன் இணைந்து, சபேஷ்-முரளி என்ற பெயரில் தனி இசையமைப்பாளர்களாக பல மறக்க முடியாத பாடல்களைத் திரையுலகிற்குக் கொடுத்துள்ளனர்.

சபேஷ்-முரளி இசையின் சாதனை
சபேஷ்-முரளி கூட்டணி இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் மற்றும் அவர்களின் இசைப் பயணத்தின் சிறப்பு அம்சங்கள் இவை: தேவாவின் சகோதரர்கள் சபேஷ் மற்றும் முரளிக்கு அவரது இசை படங்களில் பின்னணியில் பெரும் பங்கு உண்டு. அதனால் தேவாவின் படங்களில் இசை உதவி என சபேஷ்-முரளி பெயர்கள் இடம் பெறும்.
தனிப்பட்ட இசையமைப்பாளர்கள்
இவர்கள் தனியாகவும் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். சபேஷ்-முரளி கூட்டணி இணைந்து இசையமைத்த ஹிட் லிஸ்ட் படங்களில், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், சமுத்திரம், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, மற்றும் மாண்புமிகு குடும்பத்தார் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 'சமுத்திரம்' படத்திற்காகச் சபேஷ் 30 ட்யூன் கம்போஸ் செய்து, அதில் இருந்து ரவிக்குமார் தேர்வு செய்த பாடல்கள் படமாக்கப்பட்டது என்றும் சபேஷ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதுபோல பல்வேறு சூப்பர் ஹிட் கானா பாடல்களையும் அவர் பாடி இருக்கிறார் அதிலும் பிரசாந்த் நடிப்பில் வெளியான கண்ணெதிரே தோன்றினாள் திரைப்படத்தில் இடம் பெற்ற "கொத்தால் சாவடி லேடி" என்கிற கானா பாடல் சபேஷ் பாடியது தான். அதுதான் அவருடைய முதல் பாடல். அதைத்தொடர்ந்து ராஜ்கபூர் இயக்கத்தில் அஜித், மீனா நடித்த ஆனந்த பூங்காற்றே திரைப்படத்தில் இடம்பெற்ற "உதயம் தியேட்டர்ல" என்ற பாடல் பாடி இருந்தார்.
கோரிப்பாளையம் திரைப்படத்தில் இடம் பெற்ற "ஒட்ட ஒடசல்" என்கிற கானா பாடலும் பாடியிருந்தார். அதுபோல தனுஷ் கதாநாயகனாக நடித்த "தேவதையை கண்டேன்" திரைப்படத்தில் "ஒரே ஒரு தோப்புல" பாடலும், முரளி- சூர்யா நடிப்பில் வெளியான காதலே நிம்மதி திரைப்படத்தில் இடம்பெற்ற "கந்தன் இருக்கும் இடம் கந்தகோட்டை" என்ற பாடலும் இவர் பாடியதுதான். தேவா இசை அமைத்த சில பாடல்களுக்கு சபேஷ் பாடியிருக்கிறார். அதுபோல காத்தடிக்குது காத்தடிக்குது பாடலும் இவர் பாடியதுதான்.

இசை உலகில் ஒரு நான்ஸ்டாப் உழைப்பு
சபேஷ், தனது அண்ணன் தேவாவுடன் சேர்ந்து இடைவிடாமல் பணியாற்றியதைக் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். சபேஷ், தேவாவுடன் மூன்று ஆண்டுகள் 'நான்ஸ்டாப்பா' வேலை பார்த்ததாகப் பதிவு செய்துள்ளார். சபேஷ் ஏவிஎம் ஸ்டூடியோவிலும், முரளி பிரசாத் லேபிலும் பணியாற்ற, அண்ணன் தேவா பாடல் கம்போசிங்கில் இருப்பாராம். அந்தச் சமயத்தில், வருடத்திற்கு சுமார் 23 படங்கள் வரை இசையமைத்து மிகவும் பிசியாக இருந்ததாகச் சபேஷ் கூறியுள்ளார்.
விடைபெற்ற இசை கலைஞர்
இசையமைப்பாளர் தேவாவின் இளைய சகோதரரும், திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவருமான எம்.சி. சபேசன் (சபேஷ்) உடல் நலக்குறைவு காரணமாக இன்று (அக்டோபர் 23) மதியம் 12.15 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 68. சபேஷின் மறைவு, தமிழ் இசை உலகின் ஒரு முக்கிய கலைஞனைப் பிரிந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications