ஓம் ட்ரெய்லரால் கிளம்பிய அரசியல் விவாதம்! தனுஷ் பைக்கில் இருக்கும் நம்பர்.. 2031-ல் CM ஆகப்போகிறாரா?
சென்னை: ஒரு படத்தில் ஹீரோ பயன்படுத்தும் கார், பைக் போன்றவற்றின் நம்பர் பிளேட்டைக்கூட ரசிகர்கள் இவ்வளவு உன்னிப்பாகக் கவனிப்பார்களா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு இப்போது ஒரு விவாதம் கிளம்பியிருக்கிறது. விஜய்யின் 'கோட்' படத்தில் வந்த TN 07 CM 2026 என்ற கார் நம்பர் பிளேட் அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. அதேபோன்ற ஒரு விஷயம் இப்போது தனுஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'ஓம்' படத்தின் ட்ரெய்லரிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஓம் ட்ரைலரில் தனுஷ் பைக்கில் அமர்ந்திருக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பைக்கின் நம்பர் பிளேட்டில் TN 18 CA 2902 என்று இருக்கிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் சாதாரணமாகக் கடந்து செல்லவில்லை. அதில் இருக்கும் 2902 என்ற எண்களை வைத்து பலவிதமான கணக்குகளை போட்டு, 2031 என்ற ஆண்டுடன் தொடர்புபடுத்திப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அதாவது 29 + 02 =31= 2031 என்பதுதான் ரசிகர்களின் கணக்கு. அண்ணாமலை படத்தில் ராதாரவி சொல்வாரே கூட்டி கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்னு அதைப்போல இப்போ இது போய்க்கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே தனுஷ் அரசியலுக்கு வருவாரா என்ற பேச்சு கடந்த சில மாதங்களாகவே இருந்து வருகிறது. இப்போது இந்த பைக் நம்பரும் அந்த விவாதத்துடன் இணைந்திருப்பதால், '2031-ல் தனுஷ்தான் முதலமைச்சரா?' என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
விஜய்யின் கோட் பட சம்பவம்
இந்த விவாதம் இவ்வளவு வேகமாக பரவுவதற்கு முக்கியமான காரணம் விஜய்யின் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம். அந்த படத்தில் விஜய் ஓட்டும் காரில் TN 07 CM 2026 என்ற நம்பர் பிளேட் இடம்பெற்றிருந்தது. அப்போது அது பெரிதாக தெரியவில்லை என்றாலும் 2026 இல் சிஎம் ஆக விஜய் மக்களால் முதல்வரானதும் இதை கணித்து தான் அப்போதே வெங்கட் பிரபு காரில் நம்பர் வைத்தாரா? என்ற கேள்வியும் வந்தது. விஜய் பேப்பர் வெற்றி பெற்றதும் இயக்குநர் வெங்கட் பிரபுவும் படத்தில் பயன்படுத்தப்பட்ட TN 07 CM 2026 நம்பர் பிளேட்டை விஜய்யிடம் பரிசாக வழங்கியிருந்தார்.
இதனால் இப்போது தனுஷ் பைக்கில் இருக்கும் நம்பரையும் ரசிகர்கள் அதே கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் விஜய்யின் படத்தில் இருந்த நம்பர் பிளேட்டுக்கும் தனுஷின் பைக்கில் இருக்கும் எண்ணுக்கும் இடையே ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. விஜய்யின் காரில் CM 2026 என்ற எழுத்துகளும் ஆண்டும் நேரடியாக இடம்பெற்றிருந்தன. தனுஷின் பைக்கில் அப்படி எந்த அரசியல் குறியீடும் வெளிப்படையாக இல்லை. இருப்பது 2902 என்ற எண் மட்டும்தான்.

2031 கணக்கு
தனுஷின் அரசியல் வருகை பற்றிய பேச்சு இந்த ஒரு புகைப்படத்தால் மட்டும் தொடங்கவில்லை. கடந்த ஜூலை மாதம் சென்னையில் நடைபெற்ற ரசிகர் மன்ற ரத்த தான முகாமில் பேசிய தனுஷ், ரசிகர்கள் ஒன்றாக இருப்பதற்கு ஒரு நல்ல நோக்கம் இருக்க வேண்டும் என்றும், ஆடியோ வெளியீடு, ரசிகர் சந்திப்பு என்பதை தாண்டி மக்களுக்கான நலத்திட்ட உதவிகளிலும் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார். அந்த பேச்சுக்குப் பிறகு தனுஷ் ரசிகர் மன்றங்கள் மூலம் மக்கள் நலப்பணிகள் அதிகரிக்குமா, அவர் அரசியலுக்கு வருவதற்கான அடித்தளத்தை உருவாக்குகிறாரா என்ற கேள்விகள் எழுந்தன.
இதேபோல், தனுஷின் அரசியல் வருகை 2031-ஐ இலக்காகக் கொண்டிருக்கலாம் என்று ஜூலை மாதம் NDTV வெளியிட்ட செய்தியிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தனுஷ் இதுவரை அரசியலுக்கு வருவதாகவோ, 2031 தேர்தலை இலக்காக வைத்திருப்பதாகவோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இப்படியிருக்கும்போது, ஓம் படத்தில் பைக்கின் நம்பர் பிளேட்டில் இருக்கும் 2902 என்ற எண்ணை ரசிகர்கள் தங்களுக்குத் தோன்றிய விதத்தில் பிரித்து பார்த்து 2031 அரசியல் கணக்குடன் இணைத்துப் பேசுகிறார்கள். இந்த எண்ணை படக்குழுவினர் வேண்டுமென்றே அப்படி வைத்தார்களா அல்லது அது படத்துக்கான சாதாரண வாகனப் பதிவு எண்ணா என்பது குறித்து எந்த விளக்கமும் வெளியாகவில்லை.

ஓம் ட்ரெய்லர்
இதற்கிடையில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஓம்' படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றிருக்கிறது. முதலில் ஓம் - சாப்டர் 1: உத்ரம் - தி பிளட் வுட் என்று அறிவிக்கப்பட்டிருந்த படத்தின் தலைப்பு, தற்போது 'O.M - Operation Mole' என்று மாற்றப்பட்டிருக்கிறது. நவம்பர் 14ஆம் தேதி ட்ரெய்லர் வெளியான நிலையில், நவம்பர் 20ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். தனுஷுடன் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசீருதீன் ஷா, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சாய் அபியங்கர் இசையமைத்திருக்கிறார். இப்போது ரசிகர்கள் கவனிப்பது 2 விஷயம் தான். ஒன்று நவம்பர் 20ஆம் தேதி வெளியாகும் ஓம் படம் எப்படி இருக்கும் என்பது, இன்னொன்று தனுஷ் அரசியல் வருகை பற்றி அதிகாரப்பூர்வமாக எப்போது அறிவிப்பார் என்பதும்தான்.


Click it and Unblock the Notifications
