தட்டி கேட்க யாரும் இல்லன்னு நினைக்கிறாங்க! 3 பேர் மேல நடவடிக்கை எடுத்தால் தான் சரியாகும்! - ராதிகா
சென்னை: இப்போது ஒரு படம் திரைக்கு வருவதற்கு முன்பே அதைப் பற்றி சமூக வலைதளங்களில் பேச்சு ஆரம்பித்துவிடுகிறது. இந்த சூழ்நிலையில்தான் சினிமா விமர்சகர்கள் மற்றும் சமூக வலைதள கண்டன்ட் கிரியேட்டர்கள் குறித்து நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமார் பேசியிருக்கும் கருத்துகள் கவனம் பெற்றிருக்கின்றன.
தென்னிந்தியாவின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்களை ஒரே அமைப்பின் கீழ் இணைக்கும் நோக்கில் TOPCOS - Television & OTT Producers Council of South என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பை ராதிகா சரத்குமார் முன்னின்று தொடங்கி வைத்துள்ளார். 4 மொழி தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகளையும் ஒருங்கிணைத்து, தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஒரு பொதுவான குரலை உருவாக்குவது இதன் நோக்கங்களில் ஒன்றாக கூறப்பட்டுள்ளது.

ராதிகா பேட்டி
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராதிகாவிடம் சமூக வலைதளங்களில் திரைப்படங்கள் குறித்தும், நடிகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்தும் சிலர் பேசும் விதம் பற்றி கேட்கப்பட்டது. அப்போது ராதிகா, டிஜிட்டல் ஊடகங்கள் வளர்ந்த பிறகு சில சமூக வலைதள கண்டன்ட் கிரியேட்டர்கள் திரைப்படங்கள், நடிகர்கள், பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைப் பற்றி மிகவும் மோசமான முறையில் பேசுவது எளிதாகிவிட்டதாக கூறினார்.
அவர்களை கேள்வி கேட்கவோ, தட்டிக் கேட்கவோ யாரும் இல்லை என்ற தைரியத்தில் இப்படிப் பேசுகிறார்கள். இந்த விஷயம் தொடர்பாக நாங்கள் ஏற்கனவே குரல் கொடுத்திருக்கிறோம், அதனால் பெரிய பிரச்சினைகளையும் சந்தித்திருக்கிறோம். தவறு செய்பவர்களுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். 2,3 பேரை அரசு பண்ணுனா தான் இதற்கு சரியான தீர்வு வரும் என்று ஆதங்கத்துடன் ராதிகா பேசியிருக்கிறார்.
தனிப்பட்ட தாக்குதல் வேறு
ராதிகா பேசியதில் இன்னொரு முக்கியமான பகுதி சினிமா விமர்சனங்கள். ஒரு படத்தை பார்த்துவிட்டு அந்த படம் பிடிக்கவில்லை என்று சொல்வது ஒன்றும் புதிதல்ல. உண்மையில் ஒரு படத்துக்கு விமர்சனம் வருவதும், அந்த விமர்சனத்தின் அடிப்படையில் பார்வையாளர்கள் தங்களுடைய கருத்தை உருவாக்குவதும் சினிமாவின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது.
ஆனால் இப்போது சில நேரங்களில் "படம் எப்படி இருக்கிறது?" என்ற கேள்வியை தாண்டி, படத்தில் நடித்தவர்களைப் பற்றியும், அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் பேசும் நிலை வந்துவிட்டது என்பதுதான் ராதிகாவின் கவலையாக தெரிகிறது. அதிலும் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ அதிக வியூஸ் பெற வேண்டும் என்பதற்காக பரபரப்பான தலைப்பு, சர்ச்சையான வார்த்தைகள், தனிநபரை தாக்கும் கருத்துகள் போன்றவை பயன்படுத்தப்படுவதாக சினிமா துறையினர் பலமுறை குற்றம்சாட்டி வந்திருக்கிறார்கள். ராதிகாவும் இதையே சுட்டிக்காட்டும் வகையில், எல்லோருடைய கையிலும் போன், நெட் வசதி இருப்பதால் எங்கிருந்தாலும் எதை வேண்டுமானாலும் பேசிவிட முடிகிறது என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
