பொண்டாட்டியின் தங்கையை கல்யாணம் பண்ணும் கதை! உதிரி பூக்கள் படத்தில் என்ன இருக்கு? ராஜகுமாரன் கேள்வி!
சென்னை: இயக்குநரும், நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன், பிரபல இயக்குநர் மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்' திரைப்படம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் கடுமையான விவாதத்தையும், ட்ரோல்களையும் சந்தித்து வருகிறது.

இயக்குநர் அறிமுகம்
இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ராஜகுமாரன், 'சூப்பர் குட் பிலிம்ஸ்' தயாரிப்பில் பார்த்திபன், தேவயானி நடித்த 'நீ வருவாய் என' படத்தை இயக்கி அறிமுகமானார். முதல் படத்தின் வரவேற்பை தொடர்ந்து விக்ரம், சரத்குமார், தேவயானி உள்ளிட்டோரை வைத்து 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' படத்தை இயக்கினார்.
தேவயானியுடன் காதல் திருமணம்
முதல் படத்தில் பணியாற்றியபோதே நடிகை தேவயானியை காதலித்த ராஜகுமாரன், வீட்டில் சம்மதம் கிடைக்க தாமதமானதால், கடந்த 2001 ஆம் ஆண்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு பெரிதாகப் படங்கள் இயக்காதவர், முரளி, தேவயானியை வைத்துத் தயாரித்து இயக்கிய 'காதலுடன்' திரைப்படம் தோல்வியடைந்தது. அதன் பின்பு இயக்கத்தை நிறுத்திக் கொண்டவர், 'கடுகு' உள்ளிட்ட படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் சந்தானம் படத்திலும் ஒரு காமெடி ரோலில் நடித்திருந்தார்.
உதிரிப்பூக்கள் படம் சர்ச்சை
சமீபகாலமாக யூடியூப் சேனல்களுக்குப் பேட்டி கொடுப்பதை அதிகரித்திருக்கும் ராஜகுமாரன், தனியார் பேட்டி ஒன்றில் இயக்குநர் மகேந்திரனின் புகழ்பெற்ற 'உதிரிப்பூக்கள்' படத்தையும் விமர்சித்துள்ளார். "ராம நாராயணன் 100 படங்களுக்கு மேல் செய்திருக்கிறார். ஆனால் ஒன்று இரண்டு படங்கள் இயக்கிய மகேந்திரனை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்" என்று ஆரம்பித்துள்ளார்.
குறைவான கதை
"சமீபத்தில்தான் உதிரிப்பூக்கள் படம் பார்த்தேன். அதில் ஒன்றும் பெரிதாக இல்லை. அது ஒரு சாதாரணப் படம் அவ்வளவுதான். 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் ஒரு சிறிய கதைதான் அந்த ஒட்டுமொத்தப் படமும்" என்று குறைவாகப் பேசியுள்ளார். "பொண்டாடியின் தங்கையை பொண்டாட்டியாக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் முழு படக் கதையே. இது ஒரு பெரிய விஷயமாக?.. அதற்காகவா இரண்டரை மணி நேரம்" என்று கேட்டது திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நெட்டிசன்களின் கடுமையான ட்ரோல்
மகேந்திரன் போன்ற உலகமே கொண்டாடும் ஒரு இயக்குநரை, இன்றுவரை பாராட்டப்படும் ஒரு தரமான படத்தை ராஜகுமாரன் இவ்வாறு பேசுவது ஏன் என்று பலரும் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். "இப்படிப் பேசும் ராஜகுமாரன் என்ன சாதித்துவிட்டார்? தேவயானியைத் திருமணம் செய்யவில்லை என்றால் இவரே வெளியில் தெரிந்திருக்க மாட்டார்" என்று விளாசி வருகிறார்கள்.
திவாகர் போல பேச்சு
முன்னதாகக் கமல்ஹாசன், வெற்றிமாறன், பா.இரஞ்சித் போன்றோரின் படங்கள் குறித்து விமர்சித்து இவரது பேச்சு வெளியானது. தற்போது இவருடைய விமர்சனம் "வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் போன்று இருக்கிறது" என்றும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications