ராஜேஷுக்கு அத்தனையும் அத்துப்படி! தரையில்தான் படுப்பார்.. மார்சியம் டூ ஜோஷியம்! மிஸ் யூ ராஜேஷ் சார்
சென்னை: பன்முக திறமை கொண்ட நடிகர் ராஜேஷின் கலைப்பயணம் 50 ஆண்டுகள் கொண்டது.. ஒரு மணி நேரம்கூட வீணடிக்கக்கூடாது என்ற வைராக்கியத்தை கொண்ட ராஜேஷ், நேரத்தை பொன்னாக மதித்து போற்றியவர்.. தன்னுடைய வாழ்வியலுக்கான திட்டமிடுதலை சரியாக வகுத்து வைத்திருந்தார்.. 5 நிமிடம் பேச்சில், அபூர்வமான தகவல்களை கொட்டிவிடுவார்.. ராஜேஷ் என்ற அபூர்வ பிறவியை சினிமா துறை இன்று இழந்துள்ளது.
ராஜேஷின் பூர்வீகம் பட்டுக்கோட்டையிலிருந்து 2 கி.மீ. தூரத்திலுள்ள அழகான அணைக்காடு கிராமம். இவரது அப்பாவும் டீச்சர், அம்மாவும் டீச்சர், ராஜேஷும் டீச்சர்..

டீச்சர் டிரெயினிங முடித்துவிட்டு, சென்னை, ராயபுரம், புரசைவாக்கம் போன்ற பகுதிகளிலுள்ள பள்ளிகளில் சில வருடங்கள் ஆசிரியராக வேலை பார்த்தார். நடிகை சுகுமாரியின் மூலம் டைரக்டர் கே பாலசந்தரின் அறிமுகம் கிடைக்கவும், அவள் ஒரு தொடர் கதை படத்தில் முதல் முதலாக தோன்றினார்..
சின்ன வயதிலிருந்தே கூச்ச சுபாவம் கொண்டவர் ராஜேஷ்.. இந்த கூச்சத்தை போக்க ஸ்கூல் நாடகத்தில் நடிக்க வைத்தாராம் இவரது அம்மா.. 2ம் பரிசு பெற்றதால், இவனெல்லாம் நடிக்கப் போகிறானா? என்று பலரும் கிண்டல் செய்துள்ளார்கள்.. அப்போதுதான் எம்ஆர் ராதா, சிவாஜி, எம்ஜிஆர் மாதிரி பெரிய நடிகனாக வர வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்..
இவர்கள் 3 பேரையுமே மானசீக குருவாக, தன்னுள் வரித்து கொண்டாலும், ராஜேஷின் முகம், உருவ அமைப்பு, குரல், இப்படி அத்தனையுமே டிட்டோ சிவாஜி போலவே இருப்பதாக பலரும் சொன்னதை அவரால் தவிர்க்கவே முடியவில்லை. இந்த இயல்பு இயல்பாகவே அவருக்குள் அமைந்திருந்தது.
175-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும். தான் நடித்த முதல் படம் கன்னிப் பருவத்திலே, அந்த ஏழு நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை என்ற இந்த 3 படங்கள்தான் ராஜேஷுக்கு மிகவும் பிடிக்கும்..
மென்மையான, அலட்டிக் கொள்ளாத நடிப்பும், கணீர் குரலும்தான், ராஜேஷை சின்னத்திரை பக்கம் சிவப்பு கம்பளம் போட்டு வரவழைத்தது.
மிகச்சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்
ராஜேஷ் மிகச்சிறந்த டப்பிங் கலைஞர் என்பது பலரும் அறியாத தகவல்.. மலையாள நடிகர் முரளிக்காக 'டும் டும் டும்', 'மஜா', 'உள்ளம் கேட்குமே' உள்ளிட்ட படங்களில் டப்பிங் குரல் தந்துள்ளார்.. அதேபோல, 'பொய் சொல்லப் போறோம்' படத்தில் நெடுமுடி வேணுவுக்கு டப்பிங் தந்துள்ளார்.. இதற்கு காரணம், எதைச் செய்தாலும் முழு அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும் என்ற உந்துதல் ராஜேஷுக்கு இருப்பதுதான்.
ராஜேஷ் ஒரு புத்தகப்புழு.. சிறு வயதிலிருந்தே நாவல்களை படிக்கக்கூடியவர்.. உலக இலக்கியங்களை கரைத்து குடித்தவர்.. அதேசமயம், ராஜேஷ் 9 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.. இந்திரா காந்தி, ஹிட்லர், டால்ஸ்டாய், காமராஜர், செல்லம்மா பாரதி, ஐன்ஸ்டைன் போன்ற ஆளுமைகளை பற்றி சிலாகித்து எழுதக்கூடியவர் ராஜேஷ்..
இலக்கியத்தை போலவே, சினிமாவையும் சுவாசித்தவர் ராஜேஷ்.. பள்ளி காலத்திலிருந்தே ஆங்கில படங்களை அதிகமாக பார்க்கக்கூடியவர்.. இந்த ஞானம்தான், உலக சிறப்பான திரைப்படங்கள், அதே போல சிறந்த இயக்குநர்கள், நடிகர்கள், நடிகை ஆட்ரே ஹெப்பர்னை பற்றின புத்தகம் எழுத அவருக்கு அடிகோலியது..
நடிகையர் திலகம் சாவித்ரி
நடிகை சாவித்ரி மீது தனி பாசம் கொண்டவர் ராஜேஷ்.. சாவித்ரி அண்ணாநகர் வீட்டில் படுத்த படுக்கையாக கோமாவில் கிடந்தபோது, அடிக்கடி அங்கு சென்று பார்த்து கதிகலங்கி கண்ணீர் விட்டவர்..
மார்க்சியம் கற்ற இதே ராஜேஷ்தான், ஜோதிடம் என்ற கடலில் நீந்த துவங்கினார்.. சிறுவயதில் ஜோதிடத்தை நம்ப துவங்கினாலும், அது குறித்த ஆராய்ச்சியில் பிற்காலத்தில்தான் இறங்கினார்.. ஜோதிடம் புரியாத புதிர் என்ற ஆராய்ச்சி நூலை எழுதினார்..
ஜோதிடம் மட்டுமல்ல, வானியல், பிரபஞ்சத்தின் தோற்றம் என்று பல துறைகளில் 30 வருடங்களுக்கு மேலாக மிக விரிவான ஆய்வுகளை செய்தவர் ராஜேஷ்.
கம்யூனிசம், ஜோதிடம்
தந்தை பெரியாரின் கொள்கைகள் மீது பற்றும், கம்யூனிச சிந்தனைகள் மீது நாட்டமும் கொண்டவர்.. மார்க்சியம் பற்றிய தெளிவு பெற்று அக்கொள்கையை போற்றி தாமும் கடைப்பிடித்தவர். வீட்டிற்குள் எப்போதுமே லெனின் , காரல்.மார்க்ஸ், பெரியார் என அத்தனை பேரின் போட்டோக்களையும் ஆராதித்து வந்தவர்..
இவரது அறிவின் எல்லை விரிவடைந்து வந்தபடியே இருந்தது.. அதனால்தானோ என்னவோ, மிக முக்கிய பொறுப்பு ஒன்று, தமிழக அரசு மூலம் ராஜேஷை தேடி வந்துள்ளது.. தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் ஒரே சினிமா பயிற்சி நிறுவனமாக எம்ஜிஆர் திரைப்பட நிறுவனம் மட்டுமே உள்ள நிலையில், இந்த பயிற்சி நிறுவனத்தில் தலைமையாசிரியர் பணியிடம் உருவாக்கப்பட்டு, அதன் அமைப்பின், தலைவராக ராஜேஷ் நியமிக்கப்பட்டார்.
எம்ஜிஆரின் ரசிகர்
எம்ஜிஆரின் மிக மிக தீவிரமான ரசிகராக இருந்ததால், உடல்நலனில் முழு அக்கறையை செலுத்தினார் ராஜேஷ்.. தரையில் உட்கார்ந்துதான் சாப்பிடுவார், தரையில்தான் தூங்குவார்.. குறிப்பிட்ட நேரத்துக்குள் உணவு சாப்பிடுவதை பல காலமாகவே கடைப்பிடித்தவர்.. மொத்தத்தில் ஒழுக்க நெறியில் வாழ்ந்து, உடல், மனம், உணவு போன்ற விஷயங்களில் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தவர்.
நடிகர் ராஜேஷ்!! தொழிலதிபர், எழுத்தாளர், பேச்சாளர், பதிப்பாளர், ஆராய்ச்சியாளர்... தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை இரு முறை வென்றவர்... மிக நுட்பமான படைப்பாளி!
வாழ்வியல் நிஜங்கள்
வாழ்வியல் நிஜங்கள் குறித்து, அம்பென துளைக்கும் அவரது பிசிறில்லாத பேச்சுக்கள் ஒவ்வொன்றும், தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலும் இன்றும் யூடியூப் வீடியோக்கள் மூலமாக பரவி கொண்டிருக்கிறது.
திரைப்படம், மனித மனம், உலக பிரபலங்கள், மெய்ஞானம், குறித்த அவரது "சத்து" கருத்துக்கள் அத்தனையும், இந்த தமிழகத்து மண்ணில் காலம் காலமாக அழுத்தமாக பற்றிக் கிடக்கும்.. - கடலுக்கடியில் இறுகி கிடக்கும் பாறை போல...!!
வீ மிஸ் யூ ராஜேஷ் சார்..!!












Click it and Unblock the Notifications