10 நாளில் 1100 கோடியை வசூல் செய்த ராமாயணா.. ஆனாலும் வருத்தத்தில் படக்குழு! இது லாபம் இல்லையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ராமாயணா' திரைப்படம் வசூலில் அடுத்தடுத்து புதிய மைல்கற்களை தொட்டு வருகிறது. படம் வெளியாகி 10 நாட்களுக்குள் உலகளவில் ரூ.1,100 கோடிக்கும் அதிகமான வசூலை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் டிராக்கிங் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு இந்திய படம் இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை பெரிய தொகையை வசூல் செய்வது சாதாரண விஷயம் கிடையாது.

ஆனால் இங்கேதான் ஒரு சுவாரசியமான கணக்கு இருக்கிறது. ஆயிரம் கோடியை தாண்டிய வசூல் வந்துவிட்டதே, தயாரிப்பாளர்களுக்கு இப்போது நல்ல லாபம் கிடைத்திருக்குமே என்று நாம் நினைக்கலாம். ஆனால் ராமாயணா படத்தின் பட்ஜெட்டை கேட்டால் அந்த எண்ணம் மாறிவிடும். ஏனென்றால் இந்த படத்தின் 2 பாகங்களையும் சேர்த்து சுமார் ரூ.4,000 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் முதல் பாகம் இப்போது வசூல் செய்திருக்கும் தொகை மட்டும் போதுமா என்ற கேள்வி எழுகிறது.

Ramayana Ranbir Kapoor Yash Sai Pallavi Box Office Collection Film Budget Bollywood News

ரூ.4,000 கோடி பட்ஜெட்

ராமாயணா படத்தின் பட்ஜெட் குறித்து ஆரம்பத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்திய சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்றெல்லாம் பேசப்பட்டது. இந்த நிலையில், படத்தில் ராவணனாக நடித்திருக்கும் யாஷ், ரூ.4,000 கோடி என்பது 2 பாகங்களையும் சேர்த்த பட்ஜெட் என்று விளக்கம் அளித்திருந்தார். அதில் படங்களின் தயாரிப்பு செலவு மட்டுமல்லாமல், உலகளவில் வெளியிடுவதற்கான விளம்பர மற்றும் புரமோஷன் செலவுகளும் அடங்கும் என்று கூறியிருந்தார்.

அதாவது, முதல் பாகத்துக்கு மட்டும் ரூ.4,000 கோடி செலவு செய்யப்படவில்லை. இரண்டு பாகங்களுக்குமான மொத்த செலவுதான் அது. இதை இரண்டாக பிரித்து பார்த்தால் ஒரு பாகத்துக்கு சராசரியாக ரூ.2,000 கோடி என்று கணக்கிடலாம். ஆனால் இரண்டு பாகங்களுக்கும் ஒரே அளவில் செலவு செய்யப்பட்டிருக்கிறது என்று தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. முதல் பாகத்துக்கான தனிப்பட்ட பட்ஜெட்டும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ராமாயண 10 நாள் வசூல்

சாக்நிக் பாக்ஸ் ஆபீஸ் கணக்குகளின்படி, ராமாயணா உலகளவில் ரூ.1,100 கோடியைத் தாண்டியிருக்கிறது. இந்தியாவில் மட்டும் கணிசமான வசூல் கிடைத்திருப்பதுடன், வெளிநாட்டிவும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த வசூல் நிச்சயமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதன் மதிப்பையும் அதிகரித்திருக்கிறது.

ஆனால் ஒரு படத்தின் உலகளாவிய வசூல் முழுவதும் தயாரிப்பாளரின் கைக்கு வந்துவிடாது. முதலில் டிக்கெட் விற்பனையில் கிடைக்கும் தொகையில் வரிகள் கழிக்கப்படும். அதன்பிறகு திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோருக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பங்கு செல்லும். கடைசியாகத்தான் தயாரிப்பாளருக்குக் கிடைக்கும் தொகையை வைத்து முதலீடு திரும்பியிருக்கிறதா, லாபம் கிடைத்திருக்கிறதா என்று கணக்கிட முடியும்.

இதனால்தான் ரூ.1,100 கோடி வசூல் செய்துவிட்டது என்பதற்காக ராமாயணா முதல் பாகம் ஏற்கெனவே லாபம் கொடுத்துவிட்டது என்று முடிவு செய்துவிட முடியாது. ரூ.2,000 கோடி என்பது முதல் பாகத்தின் தோராயமான செலவு என்று வைத்துக்கொண்டாலும், திரையரங்கு வசூலில் இருந்து தயாரிப்பாளருக்குக் கிடைக்கும் பங்கு அதைவிடக் குறைவாகத்தான் இருக்கும்.

லாப கணக்கு

இதுதான் இப்போது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் பேசப்படும் முக்கியமான கணக்கு. ஒரு படத்தின் தயாரிப்பு செலவை மட்டும் வைத்து பார்த்து அதன் பிரேக் ஈவன் தொகையை முடிவு செய்ய முடியாது. விநியோக ஒப்பந்தம், திரையரங்கு பங்கு, வரி, விளம்பரச் செலவு, மற்ற உரிமைகள் மூலம் கிடைக்கும் வருமானம் என பல விஷயங்கள் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

ஒரு படத்தின் பட்ஜெட்டை போல சுமார் 2.5 மடங்கு உலகளாவிய வசூல் வந்தால்தான் திரையரங்கு வருவாய் மூலம் முதலீட்டை சமாளிக்க முடியும் என்ற தோராயமான கணக்கு பயன்படுத்தப்படுகிறது. அந்த அடிப்படையில் முதல் பாகத்தின் செலவு ரூ.2,000 கோடி என்று எடுத்துக்கொண்டால், ரூ.5,000 கோடி வரை உலகளாவிய வசூல் தேவைப்படலாம் என்று கணக்கிடப்படுகிறது.

ஓடிடி உரிமை

ஆனால் இதை ராமாயணாவுக்கான அதிகாரப்பூர்வ பிரேக் ஈவன் இலக்கு என்று எடுத்துக்கொள்ள கூடாது. இது ஒரு தோராயமான வர்த்தகக் கணக்கு மட்டுமே. ஏனென்றால் ஓடிடி, சாட்டிலைட், இசை உரிமைகள் மூலமாகவும் தயாரிப்பாளர்களுக்கு வருமானம் கிடைக்கும். அந்த வருமானத்தையும் சேர்த்து பார்த்தால்தான் உண்மையான லாபக் கணக்கை தீர்மானிக்க முடியும்.

ஆக மொத்தத்தில், ராமாயணா ரூ.1,100 கோடியைத் தாண்டியிருப்பது மிகப்பெரிய சாதனைதான். ஆனால் ரூ.4,000 கோடி என்ற இரண்டு பாகங்களுக்குமான மொத்த பட்ஜெட்டை வைத்து பார்த்தால், இப்போதே தயாரிப்பாளர்களுக்கு லாபம் வந்துவிட்டது என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில் படம் தோல்வி என்றும் முடிவு செய்ய முடியாது. முதல் பாகத்தின் முழு வருமானமும், இரண்டாம் பாகத்தின் வசூலும் சேர்ந்த பிறகுதான் இந்த பிரம்மாண்ட முதலீடு எந்த அளவுக்கு வெற்றியை தந்திருக்கிறது என்பது தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+