Ramesh Khanna: சூர்யாவுக்காக அந்த நடிகையிடம் தூது போனேன்! அஜித்தால் ஷாக்! - ரமேஷ் கண்ணா ஓபன்
சென்னை: தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இன்றும் மறக்க முடியாத ஆல் டைம் ஃபேவரைட் ஃபிரெண்ட்ஷிப் படமான 'ஃப்ரண்ட்ஸ்' மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகி, ரசிகர்களுக்குக் கொண்டாட்டத்தைத் தொடங்கியுள்ளது. நடிகர் விஜய், சூர்யா, தேவயானி மற்றும் பலர் நடித்த இந்த மெகா ஹிட் படத்தின் ப்ரமோஷன் நிகழ்வில், இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ரமேஷ் கண்ணா பேசிய சில ஜாலி ஃப்ளாஷ்பேக் சம்பவங்கள்தான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களைச் சிரிக்க வைத்துள்ளன!

சூர்யா - ஜோதிகாவுக்கு தூது புறா
'ஃப்ரண்ட்ஸ்' படப் ப்ரமோஷனில் பேசிய ரமேஷ் கண்ணா, அந்தப் பட சூட்டிங் நடந்த காலத்தில், சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் இடையில் இருந்த காதலுக்குத் தானே தூதுவராக செயல்பட்டதைப் பற்றி ஜாலியாகப் பகிர்ந்துகொண்டார்.
"நான் ஃபிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுடன் நடித்துக் கொண்டிருந்தேன். அதேபோல, ஜோதிகாவுடன் 'தெனாலி' படத்திலும் நடித்துக் கொண்டிருந்தேன். சூட்டிங் முடிந்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு கிளம்பி, 'தெனாலி' சூட்டிங் நடக்கும் இடத்திற்குப் போவேன். அப்போது சூர்யா என்னிடம் வந்து, 'ஜோதிகாவை கேட்டதாக சொல்லுன்னு' சொல்லி அனுப்புவார். ஓகே என்று சொல்லிவிட்டு, அங்க போய் ஜோதிகாவிடம் எனக்குத் தெரிஞ்ச அரைகுறை இங்கிலீஷை வச்சி, 'உங்களைச் சூர்யா கேட்டார்' என்று சொல்வேன். அவங்களும் சிரிச்சிட்டே 'தேங்க்ஸ்' சொல்லுவாங்க."

ஜோதிகாவின் பதில்
"பிறகு நான் அங்கிருந்து கிளம்பும்போது, அவங்க, 'நானும் கேட்டதா சொல்லுங்க' என்று ஜோதிகா சொல்லி அனுப்புவாங்க. அதை வந்து சூர்யா கிட்ட சொல்லுவேன். இப்படித்தான் நான் இரண்டு பேருக்கும் காதல் புறாவாக சுத்திக்கிட்டு இருந்தேன்!" என்று அவர் சொன்னது அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
அஜித்துக்கு அட்வைஸ்
சூர்யா - ஜோதிகாவுக்கு மட்டுமல்ல, அஜித்துக்கும் தனக்கும் நடந்த ஒரு ஜாலி ஃப்ளாஷ்பேக்கையும் ரமேஷ் கண்ணா பகிர்ந்துகொண்டார். இதேபோல, நான் 'அமர்க்களம்' படத்தில் அஜித்துடன் நடிச்சிட்டு இருக்கும் போதும் நடந்தது. ஒருநாள் நான் அஜித்திடம் பேசிக்கொண்டிருந்தபோது, 'அஜித்! நீங்க சினிமா துறையில் இருக்கிற பெண்ணை மட்டும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிடாதீங்க. ஃபேமிலி என்ன பொண்ணைச் சொல்லுறாங்களோ அவங்களையே கல்யாணம் பண்ணிக்கோங்க' என்று அட்வைஸ் பண்ணிட்டு இருந்தேன்."

இயக்குநரின் ட்விஸ்ட்
"அப்போ அங்கிருந்த இயக்குநர், நாங்க ரெண்டு பேரும் சீரியஸா பேசுறதைப் பார்த்து என்னன்னு கூப்பிட்டுக் விசாரிச்சாரு. அப்போது நான் பேசுன விஷயத்தைச் சொன்னதும், அவர் அதற்கு, 'நல்லா சொன்னீங்க போங்க! அஜித்தும் ஷாலினியும் லவ் பண்ணிட்டு இருக்காங்க. இன்னும் ரெண்டு மாசத்தில் அவங்களுக்குக் கல்யாணம்! நீங்க இந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்கணுமா? வேண்டாமா?' என்று கேட்டார். அதற்குப் பிறகு அதைப் பற்றி நான் வாயே பேசல" என்று ஜாலியாகப் பேசியிருக்கிறார் ரமேஷ் கண்ணா.
ஃப்ரண்ட்ஸ் எவர்கிரீன்
'ஃப்ரண்ட்ஸ்' திரைப்படம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு, அதன் வலுவான நட்பு உணர்வைத் தாண்டி, அதன் நகைச்சுவைதான் முக்கியக் காரணம்.
'நேசமணி கான்ட்ராக்டர்' என்ற வடிவேலுவின் கதாபாத்திரம் இன்றும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் கிங்காக வலம் வருவது. கொண்டாடப்படுகிறது "மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வண்ணப்பூவே" மற்றும் "குயிலுக்கு கூ கூ சொல்லிக் கொடுப்போம்" போன்ற பாடல்கள் இன்றும் திரையரங்குகளில் ரசிகர்களைத் துள்ளிக் குதிக்க வைக்கும் அளவிற்குப் பெரிய ஹிட். ரமேஷ் கண்ணா பேசிய இந்த ஜாலி ஃப்ளாஷ்பேக் சம்பவங்கள், ரீ-ரிலீஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications