ரவி மோகன் பிறந்தநாள்.. சிறப்பான சம்பவம் செய்த பராசக்தி இயக்குநர்.. போட்டோவில் இதை கவனிச்சீங்களா?
சென்னை: திரைத்துறையில் நடிகராகவும், குணச்சித்திரக் கலைஞராகவும் பல ஆண்டுகளாகத் தன் திறமையை வெளிப்படுத்தி வரும் நடிகர் ரவி மோகன் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இந்தச் சந்தர்ப்பத்தில், அவர் நடித்து வரும் பராசக்தி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

யார் இந்த ரவி மோகன்
ரவி மோகன், 90களில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். ஒரு காலகட்டத்தில், கதாநாயகனாக ஜெயம் பேராண்மை போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து, இளைஞர்கள் மத்தியில் கனவு நாயகனாக வலம் வந்தார். பின்னர், கதைக்களத்தின் தேவைக்கேற்ப குணச்சித்திரக் கதாபாத்திரங்கள், ஆக்சன் ஹீரோ, காமெடி எனப் பல்வேறு வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். ஒருசில சர்ச்சைகள் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்தபோதிலும், அவற்றையெல்லாம் கடந்து சமீப காலமாக, தனது இயல்பான, லவ்லி கதாபாத்திரங்களில் இருந்து விலகி, அதிரடியான ஆக்ஷன் ரோல்களையும் கையிலெடுத்து வருகிறார்.
வில்லனாக ஒரு அதிரடி அவதாரம்
சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்க இருந்த புறநானூறு திரைப்படம், சில காரணங்களால் திடீரென தள்ளிப்போனது. தற்போது அதே கதைக்களம், சிவகார்த்திகேயன் நடிப்பில், டவுன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பராசக்தி என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தில்தான் நடிகர் ரவி மோகன் ஒரு முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஆதி பகவன் திரைப்படத்திற்குப் பிறகு, ரவி மோகன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பது இதுதான் முதல் முறையாகும். அதுவும் மற்றொரு முன்னணி நடிகரின் படத்தில் வில்லனாக அவர் நடிப்பதற்கான முடிவை எடுத்திருப்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. 1980களில் நடக்கும் ஒரு கதையாக உருவாகி வரும் இந்தப் படத்தில், ரவி மோகன் ஒரு வித்தியாசமான, முரட்டு வில்லனாக நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மாஸான பர்ஸ்ட் லுக்- பொங்கல் ரேஸ்
ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில், ரவி மோகன் ஒரு மாஸான லுக்கில், மிரட்டலான தோற்றத்தில் இருக்கிறார். அவரது இந்த லுக், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. அதில் பெரிய மீசை வைத்து கையில் கட்டு போட்டு ஹாஸ்பிடலில் இருப்பது போன்ற காட்சிகள் சூட்டிங் எடுக்கும் போது இயக்குனருடன் பேசிக்கொண்டு இருக்கும் காட்சிகள் இருக்கிறது.
பராசக்தி திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நாளில், நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வெளியாக இருப்பதால், பாக்ஸ் ஆபிஸில் இந்தப் படம் பெரிய சவாலை சந்திக்கும் எனவும் கூறப்படுகிறது.
பராசக்தி திரைப்படம், நடிகர் ரவி மோகனுக்கு ஒரு திருப்புமுனையாக அமையுமா? அல்லது பாக்ஸ் ஆபிஸ் போட்டியில் சிக்கிக்கொள்ளுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications