Ravi Mohan: “என்னை வைத்து கேம் விளையாடிட்டாங்க!”.. 4 வருஷமா நடந்த விஷயம் ஆதாரம் இருக்கு! கண்ணீருடன் ரவி மோகன்
சென்னை: நடிகர் ரவி மோகனின் குடும்ப விவகாரம் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. தனது மனைவி ஆர்த்தி ரவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியிருக்கும் ரவி மோகன், தற்போது தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் பல பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டது புதிய விவாதத்தை உருவாக்கியது.

சர்ச்சைகள்
இருவரும் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், கெனிஷா கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார். பலரும் அவரை குறிவைத்து கருத்து தெரிவித்து வந்த நிலையில், அதற்கு பதிலளித்த கெனிஷா, ரவி மோகனுடன் தன்னை இணைத்து பேசப்படுவது தன்னை பெரிதும் பாதித்ததாக கூறியிருந்தார். மேலும், இந்த சூழ்நிலையிலிருந்து விலகுவதற்காக ரவி மோகனிடமிருந்தும், சென்னையிலிருந்தும் விலகிச் செல்கிறேன் என்று நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்
ரவி மோகன் பேட்டி
இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து தனது மனவேதனையை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அதில் பேசிய அவர், "எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை இனிமேல் சினிமாவில் நடிக்கப் போவதில்லை. மன அமைதி இல்லாத நிலையில் முழுமையாக படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் என்னுடைய படங்களும் சரியாக வெளியாக முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது. சிலர் எனக்கு எதிராக திட்டமிட்டு செயல்படுகிறார்கள். யார் எங்கிருந்து தாக்கினாலும் நான் அமைதியாக தாங்கிக்கொள்வேன் என்று நினைக்கிறார்கள்," என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
குற்றசாட்டு
தொடர்ந்து பேசிய ரவி மோகன், "நான் ரொம்ப அமைதியானவன். எதையும் வெளியில் வந்து பேச மாட்டேன். அதைத்தான் பலரும் பலவீனமாக எடுத்துக் கொண்டார்கள். கடந்த இரண்டு வருடங்களாக நான் வாயைத் திறக்காமல் இருந்தது தான் என்னுடைய பெரிய தவறு. அதனால்தான் எல்லாரும் என்னை வைத்து தங்களுடைய கேமை விளையாடிவிட்டார்கள்," என்று உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார்.
மேலும் தனது குடும்பம் குறித்து பேசிய அவர், "25 வருடங்களாக நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய குடும்பத்திற்காகத்தான் நான் உழைத்தேன். சில வருடங்களுக்கு முன்பு நான்கு ஆண்டுகள் என் அண்ணனும், அப்பாவும் எந்த வேலையும் இல்லாமல் இருந்த நேரத்திலும் நான் தான் குடும்பத்தை பார்த்துக்கொண்டேன். ஆனால் இப்போது என்னை பெண்களை மதிக்காதவன் என்று சொல்கிறார்கள். அது மிகவும் வேதனை தருகிறது," என்று தெரிவித்தார்.
ரவி மோகன் விளக்கம்
"நான் பெண்களை மதிக்கிறவன். என்னுடைய படங்களில்கூட பெண்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன். பெண்களை மதிக்க வேண்டும் என்று சொல்லி வளர்த்த ஒரு அம்மாவுக்கு நான் பிறந்தவன். ஆனால் பல விஷயங்களை வெளிப்படையாக சொல்லாமல் இருந்ததால்தான் இப்போது எல்லோரும் என்னை தவறாக நினைக்கிறார்கள்," என்று கூறிய அவர், குடும்பத்தை இழிவுபடுத்த முயற்சிப்பவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுத்தார்.
"என்னுடைய குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்று யாராவது நினைத்தால் நான் சும்மா இருக்க மாட்டேன். என் குடும்பம் எனக்காக பல விஷயங்களை தாங்கி நிற்கிறது. எனக்கு எல்லாமே என் குடும்பம்தான்," என்று கண்ணீருடன் பேசிய ரவி மோகனின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திருமண வாழ்க்கை பற்றி பேச்சு
இதற்கு முன்பு இருந்த திருமண வாழ்க்கையில் அவங்க கூட வாழ்ந்த போது நான் பெண்களுக்கு எதிரானவன் என்று அவங்க ஒரு இடத்தில் கூட சொல்லலையே... இப்ப ரெண்டு வருஷம் என்னை இவ்வளவு அசிங்கப்படுத்துறாங்க! இதற்கு முன்பு அவர்கள் எத்தனை பேட்டிகளில் நான் தான் அவரை திட்டுவேன் அவர் கோபமே பட மாட்டாருனு சொல்லி இருக்காங்க. அதற்கான ஆதாரங்கள் எல்லாம் என்கிட்ட இருக்கு என்று ரவி மோகன் கூறி இருக்கிறார்.
இந்த பேட்டி வெளியான நிலையில், இதுவரை அமைதியாக இருந்த ரவி மோகன் இனி தனது தரப்பை வெளிப்படையாக சொல்லத் தொடங்கியிருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ஆர்த்தி ரவியின் மறைமுக பதிவும், கெனிஷாவின் விலகல் அறிக்கையும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரவி மோகனின் இந்த உணர்ச்சிபூர்வமான பேச்சு இந்த குடும்ப சர்ச்சையை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது.













Click it and Unblock the Notifications